மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயில் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றுவது மற்றும் ஒட்டுமொத்த மலையையும் இந்திய தொல்லியல் துறையிடம் ஒப்படைக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மிக விரிவான, 18 பக்கங்கள் கொண்ட எதிர் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வழக்கின் பின்னணி என்ன?
மனுதாரர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு எந்தெந்த சட்டபூர்வ மற்றும் வரலாற்று ஆதாரங்களின் அடிப்படையில் மறுத்துள்ளது என்பதை இந்தத் தொகுப்பில் விரிவாகப் பார்க்கலாம்.
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள உச்சிப்பிள்ளையார் கோயில் தீப மண்டபத்திற்குப் பதிலாக, மலை உச்சியில் அமைந்துள்ள பழமையான ‘தீபத் தூணில்’ கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிடக் கோரி ராம ரவிக்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டிருந்தார்.
ஆனால், கோயில் நிர்வாகம் தரப்பில் வழக்கம்போல உச்சிப்பிள்ளையார் கோயில் தீப மண்டபத்திலேயே கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. இதையடுத்து, தமிழக அரசு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு எதிராக மனுதாரர் ராம. ரவிக்குமார் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தார்.

அந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன், மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை வீரர்களின் பாதுகாப்போடு மனுதாரர் உள்ளிட்ட 10 பேர் மலை உச்சிக்குச் சென்று தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டார்.
தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் இரு நீதிபதிகள் அமர்வு தள்ளுபடி செய்தது. இதனைத் தொடர்ந்து, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், “100 ஆண்டுகளுக்கும் மேலாக தீபம் ஏற்றப்படும் பாரம்பரிய இடத்தை மாற்றிவிட்டு, வேறு இடத்தில் தீபம் ஏற்றக் கோருவதுதான் பிரச்சனைக்குக் காரணம்.
கார்த்திகை தீபம் ஏற்ற அரசு எந்தத் தடையும் விதிக்கவில்லை. 2014-ஆம் ஆண்டு உயர் நீதிமன்றத் தீர்ப்பின்படியே குறிப்பிட்ட இடத்தில் தீபம் ஏற்றப்படுகிறது. புதிதாக தீபம் ஏற்றக் கோரும் இடம் தர்காவிலிருந்து வெறும் 15 மீட்டர் தொலைவில் மட்டுமே உள்ளதால், தேவையற்ற மதச் சச்சரவுகளையும் சட்டம்-ஒழுங்குப் பிரச்சனைகளையும் தவிர்க்கவே அங்கு அனுமதி வழங்கப்படவில்லை” என தமிழக அரசு தெரிவித்திருந்தது.
இதற்கிடையில், ‘இந்து தர்ம பரிஷத்’ என்ற அமைப்பின் சார்பில் அதன் தலைவர் கே.கே. ரமேஷ் உச்ச நீதிமன்றத்தில் ஒரு ரிட் மனுவை தாக்கல் செய்தார். அதில், திருப்பரங்குன்றம் கோயில் மற்றும் மலைப்பகுதி முழுவதையும் இந்திய தொல்லியல் துறை வசம் ஒப்படைக்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.
இந்த மனு மீது பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்திருந்த நிலையில், தற்போது இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் டாக்டர் டி.ஜி. வினய் தரப்பில் விரிவான எதிர் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழக அரசு மற்றும் அறநிலையத்துறை பதில் மனுவின் முக்கிய அம்சங்கள்
மனுதாரரின் மூன்று முக்கியக் கோரிக்கைகளும் அரசின் மறுப்பும்:
முதலாவதாக, திருப்பரங்குன்றம் கோயில் மற்றும் மலை முழுவதையும் இந்திய தொல்லியல் துறை கையகப்படுத்தி நிர்வகிக்க வேண்டும்.
இரண்டாவதாக, ‘தீபத் தூண்’ என அழைக்கப்படும் இடத்தில் தினமும் 24 மணி நேரமும் அணையாமல் நிரந்தரமாக தீபம் ஏற்றப்பட வேண்டும்.
மூன்றாவதாக, கார்த்திகை தீபத் திருநாளன்று மலை முழுவதும் விளக்குகள் ஏற்றப்பட்டு, மலை முழுவதும் பக்தர்கள் வழிபட அனுமதிக்கப்பட வேண்டும்.
இந்த மூன்று கோரிக்கைகளுக்கும் மனுதாரருக்கு எந்தவொரு சட்டப்பூர்வ உரிமையோ, நிரூபிக்கப்பட்ட பாரம்பரிய வழக்கமோ இல்லை என்றும், எந்தவொரு அடிப்படை உரிமையும் மீறப்படாத நிலையில், பிரிவு 32-ன் கீழ் இந்த மனுவை விசாரணைக்கு ஏற்பதே நீதிமன்ற நடைமுறையைத் தவறாகப் பயன்படுத்துவதாகும் என்றும் தமிழக அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
மனுதாரர் தனது வாதங்களுக்கு ஆதாரமாக செய்தித்தாள் துணுக்குகளையும், இணையதளத் தகவல்களையும் மட்டுமே இணைத்துள்ளார்; அவை எதுவும் சட்டப்பூர்வ ஆதாரங்கள் ஆகாது எனவும் அரசு சுட்டிக்காட்டியுள்ளது.
நூற்றாண்டு கால உரிமைப் பட்டயமும் பிரிவி கவுன்சில் தீர்ப்பும்:
அறுபடை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயில், தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சட்டம் 1959-ன் கீழ் நிர்வகிக்கப்படும் பழமையான பொது சமய நிறுவனமாகும்.
1920-ஆம் ஆண்டு மதுரை கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் கோயில் நிர்வாகம் தொடர்ந்த வழக்கில் 05.08.1923 அன்று வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி, நெல்லித்தோப்பு பகுதியில் உள்ள மதிப்பிடப்பட்ட நிலங்கள், புதிய மண்டபம், நெல்லித்தோப்பிலிருந்து மசூதிக்குச் செல்லும் படிக்கட்டுகள் மற்றும் மசூதி, கொடிக்கம்பம் அமைந்துள்ள பாறையின் உச்சி ஆகிய பகுதிகள் தவிர்த்து, ஒட்டுமொத்த திருப்பரங்குன்றம் மலை மற்றும் கிரிவீதி ஆகியவற்றின் முழு உரிமையாளரும் கோயில் நிர்வாகமே என அறிவிக்கப்பட்டது.
1926-ல் சென்னை உயர் நீதிமன்றம் இத்தீர்ப்பை மாற்றியபோதிலும், 1931-ஆம் ஆண்டு லண்டன் பிரிவி கவுன்சில் உயர் நீதிமன்றத் தீர்ப்பை ரத்து செய்து, 1923-ஆம் ஆண்டு சிவில் நீதிமன்றத் தீர்ப்பை உறுதி செய்தது. பின்னர் 1958-ஆம் ஆண்டு வழக்கு மற்றும் 1962-ஆம் ஆண்டு நிறைவேற்று மனு மூலம் நெல்லித்தோப்பு பகுதி சுமார் 33 சென்ட் என அளவீடு செய்யப்பட்டு எல்லைகள் வரையறுக்கப்பட்டுள்ளன. எனவே, ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக உறுதி செய்யப்பட்ட கோயிலின் சொத்துரிமையை யாரும் கேள்வி கேட்க முடியாது என அரசு தெரிவித்துள்ளது.

150 ஆண்டுகால தீபம் ஏற்றும் பாரம்பரியமும் ‘தீபத் தூண்’ குறித்த உண்மையும்:
கடந்த 150 ஆண்டுகளுக்கும் மேலாக, ஆகம விதிகளின்படியும், கோயில் ஸ்தானிகர்களின் ஆலோசனையின்படியும் உச்சிப்பிள்ளையார் கோயில் அருகிலுள்ள ‘தீப மண்டபத்தில்’ மட்டுமே கோயில் நிர்வாகத்தால் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு வருகிறது.
மலை உச்சியில் உள்ள கல் தூணை ‘தீபத் தூண்’ என அழைப்பதும், அங்கு தீபம் ஏற்றுவது பண்டைய தமிழர் மரபு எனக் கூறுவதும் சமீபத்தில் உருவாக்கப்பட்ட கட்டுக்கதையாகும். 1923 சிவில் நீதிமன்றத் தீர்ப்பிலோ, 1931 பிரிவி கவுன்சில் வழக்கிலோ, 1996, 2014, 2017 ஆகிய ஆண்டுகளில் நடந்த உயர் நீதிமன்ற வழக்குகளிலோ, ஏன் 28.10.2025 அன்று ராம. ரவிக்குமார் அளித்த கோரிக்கை மனுவிலோ கூட ‘தீபத் தூண்’ என்ற வார்த்தை இடம்பெறவில்லை. 2025 என்ற வழக்கில்தான் முதன்முதலாக இச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது என அரசு அம்பலப்படுத்தியுள்ளது.
போர்க்காலக் கட்டுப்பாடுகளால் தீபம் ஏற்றும் இடம் மாற்றப்பட்டது என்ற மனுதாரரின் வாதம் முற்றிலும் தவறானது மற்றும் ஆதாரமற்றது. மாறாக, 1862 மற்றும் 1912 ஆகிய ஆண்டுகளில் தர்கா அமைந்துள்ள குன்றின் உச்சிக்கு அருகே விளக்கேற்ற சிலர் முயன்றபோது, “அங்கு விளக்கேற்றுவது பாரம்பரிய வழக்கம் அல்ல” என்பதாலும், “அமைதிக்குப் பங்கம் ஏற்படும்” என்பதாலும் தடுக்கப்பட்டதாக 1923-ஆம் ஆண்டு நீதிமன்றத் தீர்ப்பிலேயே பதிவு செய்யப்பட்டுள்ளது.
முரண்பட்ட கோரிக்கைகள் பாரம்பரியத்தை மறுக்கின்றன:
ஒவ்வொரு மனுதாரரும் வெவ்வேறு இடங்களைக் குறிப்பிடுவதையும் தமிழக அரசு சுட்டிக்காட்டியுள்ளது
ராம. ரவிக்குமார் தீபத் தூணில் தீபம் ஏற்றக் கோருகிறார்.இந்து தர்ம பரிஷத் 24 மணி நேரமும் நிரந்தர தீபம் ஏற்றவும், மலை முழுவதும் விளக்கேற்றவும் கோருகிறது. முந்தைய வழக்குகளில் சிலர் ‘குதிரைச் சுனை’ மற்றும் ‘குதிரைச் சுனைத் திட்டு’ ஆகிய இடங்களில் தீபம் ஏற்றக் கோரினர். ஒரு உண்மையான பாரம்பரியம் என்பது நிலையானதாகவும் ஒரே மாதிரியானதாகவும் இருக்கும்; நபருக்கு நபர் மாறுபடும் கோரிக்கைகளைப் பாரம்பரியமாக ஏற்க முடியாது. ஒவ்வொருவரின் விருப்பத்திற்கும் ஏற்ப கோயில் சடங்குகளை மாற்றினால், கோயில் நிர்வாகமே செயல்பட முடியாத நிலை ஏற்படும்.
முந்தைய நீதிமன்றத் தீர்ப்புகளும் கட்டுப்பாடுகளும் :
1994-ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் , 21.11.1996 அன்று சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு இன்றும் அமலில் உள்ளது. அதன்படி, 1920-ஆம் ஆண்டு தீர்ப்பை அனைவரும் மதிக்க வேண்டும்; தேவஸ்தானம் மட்டுமே பாரம்பரிய இடமான உச்சிப்பிள்ளையார் கோயில் மண்டபத்தில் தீபம் ஏற்ற வேண்டும்; வேறு எந்த நபரும் வேறு இடத்தில் தீபம் ஏற்ற அனுமதிக்கக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இடம் மாற்ற வேண்டுமெனில், அறநிலையத்துறை ஆணையரின் முன் அனுமதியுடன் தேவஸ்தானம் மட்டுமே முடிவெடுக்க முடியும்; அதுவும் தர்கா, படிக்கட்டுகள் மற்றும் நெல்லித்தோப்பு பகுதியிலிருந்து குறைந்தபட்சம் 15 மீட்டர் தள்ளியே இருக்க வேண்டும் எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது
இதே கோரிக்கையுடன் 2014-ல் தொடரப்பட்ட வழக்கை தனி நீதிபதியும் (04.12.2014), 2017-ல் மேல்முறையீட்டு வழக்கை இரு நீதிபதிகள் அமர்வும் (07.12.2017) தள்ளுபடி செய்துள்ளன. ஆகம விதிகளுக்கு எதிராக கோயில் நிர்வாகம் செயல்படுகிறது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என நீதிமன்றம் அப்போதே தீர்ப்பளித்துள்ளது.

பொதுநலன் சார்ந்த விவகாரத்தில் ஏற்கனவே நீதிமன்றத்தால் முடிவெடுக்கப்பட்ட விஷயத்தை, மனுதாரரின் பெயரை மட்டும் மாற்றிக்கொண்டு மீண்டும் மீண்டும் வழக்குத் தொடர முடியாது என உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளை மேற்கோள் காட்டி அரசு வாதிட்டுள்ளது.
தொல்லியல் துறை கையகப்படுத்த முடியாது என்பதற்கான சட்ட விளக்கம்:
ஒட்டுமொத்த மலையும் தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட சின்னம் என்ற மனுதாரரின் வாதம் தவறானது. 1904-ஆம் ஆண்டு பண்டைய நினைவுச்சின்னங்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், 01.09.1908 அன்று வெளியிடப்பட்ட அறிவிக்கையின்படி , மலையில் உள்ள குடைவரைக் கோயில் மற்றும் கல்வெட்டுகள் அடங்கிய சுமார் 50 சென்ட் பரப்பளவு மட்டுமே பாதுகாக்கப்பட்ட சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
08.02.1909 அன்று பிறப்பிக்கப்பட்ட அரசாணையில் , ஒட்டுமொத்த திருப்பரங்குன்றம் பாறையையும் பாதுகாக்கப்பட்ட சின்னமாக அறிவிக்கத் தேவையில்லை என அரசு தெளிவாகப் பதிவு செய்துள்ளது. 1923-ஆம் ஆண்டு அறிவிக்கையும் இதையே உறுதி செய்துள்ளது.
மேலும், பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்களைப் பராமரிப்பதும், அவை சேதமடையாமல் பாதுகாப்பதும் மட்டுமே தொல்லியல் துறையின் பணி; வழிபாட்டில் உள்ள ஒரு வாழும் கோயிலை கையகப்படுத்தி நிர்வகிப்பதோ அல்லது சட்டம்-ஒழுங்கைப் பராமரிப்பதோ தொல்லியல் துறையின் அதிகார வரம்பிற்குள் வராது. மலையடிவாரத்தில் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளதை மனுதாரரே தனது மனுவில் ஒப்புக்கொண்டுள்ளார்.
வழிபாட்டுத் தலங்கள் குறித்த உச்ச நீதிமன்றத்தின் இடைக்காலத் தடை:
மனுதாரர் ஏற்கனவே இதே விவகாரம் தொடர்பாக மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்து அது நிலுவையில் உள்ளது. 08.09.2026 அன்று உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், இது தொடர்பான வாதங்களை உயர் நீதிமன்றத்திலேயே முன்வைக்குமாறும், வழிபாட்டுத் தலங்கள் தொடர்பாக அஸ்வினி குமார் உபாத்யாய் வழக்கில் 12.12.2024 அன்று உச்ச நீதிமன்றம் பிறப்பித்த தடையாணையையும் கவனத்தில் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது.

நாடு முழுவதும் உள்ள வழிபாட்டுத் தலங்களின் தற்போதைய நிலையை மாற்றவோ, ஆய்வு செய்யவோ நீதிமன்றங்கள் எந்தவொரு இடைக்கால அல்லது இறுதி உத்தரவுகளையும் பிறப்பிக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அந்தத் தடையாணைக்கு எதிராகவும், தொடர்புடைய மேல்முறையீட்டு வழக்குகள் நிலுவையில் இருக்கும்போதும், நேரடியாக உச்ச நீதிமன்றத்தில் இந்த ரிட் மனுவைத் தாக்கல் செய்திருப்பது சட்டவிரோதமானது என தமிழக அரசு சுட்டிக்காட்டியுள்ளது.
திருப்பரங்குன்றம் கோயிலின் நிர்வாகம் சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில், எந்தவொரு நிர்வாகச் சீர்கேடு குறித்த புகாரும் இல்லாத சூழலில், நூற்றாண்டு காலத் தீர்ப்புகளையும் 150 ஆண்டுகால ஆகம மரபுகளையும் சீர்குலைக்கும் வகையிலும், மத நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கும் வகையிலும் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்து தர்ம பரிஷத் அமைப்பின் மனுவை அபராதச் செலவுத் தொகையுடன் ஆரம்ப நிலையிலேயே தள்ளுபடி செய்ய வேண்டும் என தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளது.
கடலூரில் கன்பார்ம் ஆன பறவைக் காய்ச்சல்.. கோழிகள் கொத்துக் கொத்தாக பலி.. கதிகலங்கும் பண்ணையாளர்கள்
November 14, 2026
ஆரணியில் தொட்டு தொட்டுப் பேசி சில்மிஷம்.. தவெக அலுவலகத்துக்கே பூட்டு.. யார் இந்த திருவண்ணாமலை சத்யா?
November 14, 2026
45 நாட்களாக ஆட்டம் காட்டிய செம்மறி ஆடு.. குதிரையில் ஏறி 13 வயது சிறுமி செய்த காரியம்.. வியந்த மக்கள்
November 14, 2026
"வெளியே சொன்னால் கொன்னுடுவேன்".. 14 வயது சிறுமியை அழைத்து சென்று காங்., எம்எல்ஏ செய்த செயல்! ஷாக்
November 14, 2026
பிக் பாஸை விட்டு அதிரடியாக வெளியேற்றப்படும் நபர்.. ஜேசன் இல்ல! TTF வாசன் முயற்சி வீணாகபோச்சு
November 14, 2026
TTF வாசனை அடிக்க பாய்ந்த ஜேசன்.. வண்டியை வேற பக்கம் திருப்பிய விஜய் சேதுபதி.. ஆட்டமே மாறி போச்சு
November 14, 2026
See Robyn Strip Down ‘Sexistential’ Songs for Tiny Desk Performance
November 14, 2026
James Gunn Addresses Reports About A Hacked-Up ‘Man Of Tomorrow’
November 14, 2026
Carlos Alcaraz And ATP Finals Upstage WTA In Fashion Flair
November 14, 2026
Stop Using Your Phone for Touch-Ups—This Travel Makeup Mirror Is Foldable and Lightweight
November 14, 2026
‘GTA VI’ Has Already Sold $1 Billion+ In Preorders—But May Not Revive Console Sales Amid AI-Driven Price Hikes
November 14, 2026
Which Earbuds Are Best for Voice Calling? Check Out the Pair That Won My Latest Test
November 14, 2026