இந்த உலகம் 71% நீராலும் 29% நிலத்தாலும் சூழப்பட்டுள்ளது. ஆனால் உலகம் முழுவதும் தண்ணீருக்கான போராட்டங்கள் கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக வலுப்பெற்று வருவதை காணமுடிகிறது. அதே நேரம், மொழிவாரியான மாநிலங்கள் பிரிக்கப்பட்டதிலிருந்து நதிநீர்ப் பங்கீடு என்றச் சிக்கல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு மத்தியில் இன்றும் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.

இந்தச் சிக்கலைத் தவிர்க்க வேண்டும் என்பதில் கூடுதல் கவனம் செலுத்திய மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜர், தமிழ்நாட்டின் நீர்வளத்தைப் பெருக்கும் நோக்கில் பல்வேறு பாசனத் திட்டங்களைச் செயல்படுத்தினார். கீழ் பவானி, மணிமுத்தாறு, மேட்டூர் கால்வாய், ஆரணியாறு, அமராவதி, வைகை, சாத்தனூர், கிருஷ்ணகிரி மற்றும் காவிரி கழிமுக வடிகால் உள்ளிட்ட முக்கியத் திட்டங்கள் இதில் அடங்கும்.

காமராஜர்
காமராஜர்

இதன் ஒரு பகுதியாக, தமிழ்நாட்டின் எல்லையான ராசிமணலில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டி நீரைச் சேமிக்கவும், மின்சார உற்பத்தி என இரு திட்டங்களை செயல்படுத்த 1961-ம் ஆண்டு அடிகல் நாட்டி பணிகளையும் தொடங்கினார். ஆனால், அவருக்குப் பிறகு வந்த ஆட்சியாளர்கள் இத்திட்டத்தைக் கண்டுகொள்ளாமல் விட்டதுதான் துரதிர்ஷ்டவசம்.

கர்நாடகாவில் தொடங்கும் காவிரி ஆறு தமிழ்நாட்டில் 800க்கும் அதிகமான கிலோமீட்டர் தூரம் பயணிக்கிறது. இதில் மேகதாது முதல் ஒகேனக்கல் இடையிலான 60 கிலோமீட்டர் தூரம் இடது கரை தமிழ்நாட்டிலும், வலது கரை கர்நாடகாவிலும் காவிரி ஆறு பாய்ந்து ஓடுகிறது. இதில், தமிழ்நாடு எல்லைக்குள் காவிரி நுழையும் தருமபுரி மாவட்டத்திலுள்ள பிலிகுண்டுலுவிலிருந்து 20 கி.மீ. தொலைவில், கிருஷ்ணகிரி மாவட்ட வன எல்லையில் அமைந்துள்ளது ராசிமணல். இந்தப் பகுதியில் தமிழ்நாடு அரசு அணை கட்டினால் குறைந்த செலவில் 50 முதல் 100 டிஎம்சி வரையிலான தண்ணீர் தேக்கி வைக்க முடியும். குறிப்பாக மேகதாதவிலிருந்து ராசிமணல் வரை உள்ள 60 கிலோ மீட்டர்களில் 40 கிலோமீட்டர் தொலைவிற்கு தண்ணீர் தேக்கி வைக்க முடியும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

ராசிமணல் பகுதியில் பி.ஆர்.பாண்டியன் குழுவினர்
ராசிமணல் பகுதியில் பி.ஆர்.பாண்டியன் குழுவினர்

காமராஜர் திட்டமிட்டபடி ராசிமணலில் அணைக்கட்டினால், தென்மேற்குப் பருவமழைக் காலங்களில் மேட்டூர் அணை நிரம்பி வீணாகக் கடலில் கலக்கும் பல டி.எம்.சி (TMC) உபரி நீரை, தமிழ்நாட்டு எல்லையிலேயே தடுத்துச் சேமிக்க முடியும். மேலும், இந்தத்திட்டத்தின் மூலம் குறைந்தபட்சம் 400 முதல் 600 மெகாவாட் (MW) வரை நீர்மின்சாரம் (Hydroelectric power) உற்பத்தி செய்து தமிழ்நாட்டின் மின்தேவையைப் பூர்த்தி செய்ய முடியும். மேட்டூர் அணையில் நீர் குறையும் போது ராசிமணலில் தேக்கி வைக்கப்பட்டுள்ள தண்ணீரை பயன்படுத்திக் கொள்ளலாம். இதன் மூலம் ஆண்டுதோறும் கர்நாடகாவிடம் தண்ணீருக்கு ஏங்க வேண்டிய அவசியம் இருக்காது. காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு உரிய நேரத்தில் குருவை, சம்பா சாகுபடி செய்வதற்கு போதுமான தண்ணீர் திறக்கப்படும் என பாமக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தெரிவிக்கின்றன.

இந்த அணை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு போன்ற தமிழ்நாட்டின் பல மாவட்டங்களுக்குப் பயனளிக்கும். பெங்களூருவின் குடிநீர் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் உதவும். இரண்டு மாநில நிலத்தடி நீரை அதிகரிக்கும் வாய்ப்பும் ஏற்படும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இத்தடுப்பணைகள் மூலம் அப்பகுதியில் உள்ள யானைகள், காட்டெருமைகள் உள்ளிட்ட வனவிலங்குகளின் குடிநீர்த் தேவை ஆண்டு முழுவதும் பூர்த்தி செய்யப்படும். இதனால் விலங்குகள் நீர் மற்றும் உணவு தேடி கிராமப் பகுதிகளுக்குள் ஊடுருவுவது தடுக்கப்படும் என விலங்கு நல ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

எம்.ஜி.ஆர்
எம்.ஜி.ஆர்

பழ.நெடுமாறன் சட்டமன்ற உறுப்பினராக இருந்த (1980–1984) காலகட்டத்தில் மதுரை மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்), காவிரியின் உபரி நீரைப் பயன்படுத்த ராசிமணலில் அணையைக் கட்ட மத்திய அரசிடம் அனுமதி கோரும் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தை முன்மொழிந்தார். இத்தீர்மானம் சட்டமன்றத்தில் அனைவராலும் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. பின்னர் தீர்மானம் மத்திய அரசுக்கும் அனுப்பப்பட்டது. ஆனால் இன்று வரை ராசிமணலில் அணை கட்ட எந்த அரசும் முன் வரவில்லை. யானை ராஜேந்திரன் என்பவர் ராசிமணலில் அணை கட்டுவது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.

இதற்குப் 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் பதில் அளித்த அப்போதைய தமிழ்நாட்டின் தலைமை செயலாளர் இறையன்பு, `ராசிமணலில் அணை கட்டுவதற்கு தமிழ்நாடு அரசிடம் எந்த ஒரு திட்டமும் இல்லை. ஒகேனக்கல், ராசிமணல், மேகதாது உள்ளிட்ட இடங்களில் மின் உற்பத்தி நிலையங்கள் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டது. ஆனால் கர்நாடகா அரசு மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்க ஒப்புதல் அளிக்கவில்லை’ எனத் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு’த் தலைவர் பி.ஆர்.பாண்டியன், “கடந்த 2024-ம் ஆண்டு மேட்டூர் அணையிலிருந்து காரைக்கால் வரை காவிரிப்பாசனப் பகுதிகளை பார்வையிட்ட கர்நாடக விவசாயப் பிரதிநிதிகள், ராசிமணல் பகுதியையும் பார்த்ததற்குபின்பு தமிழ்நாடு விவசாயப் பிரதிநிதிகளை மைசூருக்கு அழைத்து அங்குள்ள 250 விவசாயப் பிரதிநிதிகளுடன் பேச வைத்தார்கள்.

பி.ஆர்.பாண்டியன்

அப்போது ‘மேகதாட்டில் அணை கட்டினால், கிருஷ்ணராஜ அணையில் தண்ணீர் தேக்க மாட்டார்கள், இதனால் பெரும்பாலான கர்நாடக விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள், அடர்ந்த வனப்பகுதியாகவும் புலிகள், யானைகள் சரணாலயமாகத் திகழும் கனகபுரா பகுதியில் அர்காவதி ஆறும் காவிரியும் சங்கமமாகும் இடத்தில் அணையை கட்டினால் இயற்கை அழிக்கப்படும். அதற்கு மாற்றாக ராசிமணலில்  தமிழக அரசு அணை கட்டினால் காவிரியின் இடது கரையை தமிழகமும், வலது கரையை கர்நாடகாவும் பிரச்சனை இல்லாமல் பயன்படுத்திக் கொள்ளலாம் என முடிவெடுத்து அன்றைய முதலமைச்சர் சித்தராமையாவிடம் தெரிவித்தனர். நாங்களும் அப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வலியுறுத்த துரைமுருகனுடன் ஆலோசித்து, எங்களுக்கு ஒப்புதல் கடிதமும் கொடுத்தார்.”என்றார். ஆனால், அதன்பிறகு எந்த முன்னேற்றமும் இல்லை என்பது புலப்படுகிறது.

தமிழ்நாடு அரசைப் போலவே கர்நாடக மாநில அரசும் ராசிமணல் அணை திட்டத்தில் கவனம் செலுத்தவில்லை. அதற்கும் மேலாக மேகதாது அணை கட்டுவது தொடர்பாகவே தொடர்ந்து வலியுறுத்திவருகின்றனர்.

ராசிமணல் பகுதி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாகும். காவிரி வடக்கு வனவிலங்கு சரணாலயத்தின் (Cauvery North Wildlife Sanctuary) ஒரு முக்கிய பகுதியாகவும் விளங்குகிறது. இங்கு அணை கட்டப்படும் போது வனப்பகுதி நீருக்குள் மூழ்கும் எனவும், அடர்ந்த வனப்பகுதிகளும், அரிய வகை மூலிகைகளும், தாவர இனங்களும் தண்ணீரில் மூழ்கி முற்றிலுமாக அழியும் எனவும் கூறப்படுகிறது. மேலும், ஆசிய யானைகள் உள்ளிட்ட விலங்கினங்களின் முக்கியப் போக்குவரத்துப் பாதை, அணை நீர் தேங்குவதால் துண்டிக்கப்படும். ஆற்றில் அடித்து வரப்படும் வளமான வண்டல் மண் அணையிலேயே தேங்கிவிடும் என்பதால், கீழ்நோக்கிச் செல்லும் நீரின் தரம் மாறுவதோடு டெல்டா பகுதிகளுக்குச் செல்லும் ஊட்டச்சத்துகளின் அளவும் குறையும். இத்தகைய கடுமையான சுற்றுச்சூழல் காரணங்கள் மற்றும் வனத்துறை அனுமதிகள் பெறுவதில் உள்ள சிக்கல்கள் காரணமாகவே இந்த அணைத் திட்டத்தை செயல்படுத்துவதில் அரசுக்கு நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ராசிமணல் அணைக்காக ஆர்பாட்டம்

தொடர்ந்து பேசிய பி.ஆர்.பாண்டியன், `மேகதாட்டில் அணை கட்டினால் தமிழக விவசாயிகள் மட்டுமல்ல, கர்நாடக விவசாயிகளும் அழிந்து விடுவார்கள். இரண்டு மாநில விவசாயிகளும் ஒப்புக்கொண்ட ராசிமணல் அணை திட்டத்தை செயல்படுத்த கர்நாடக அரசு முன்வரலாம். மக்களுக்கான நலத்திட்டங்களுக்கு பல்லாயிரம் கோடி ஒதுக்கும் அரசு ராசிமணல் திட்டத்துக்கும் நிதி ஒதுக்குவதன் மூலம் காவிரி நீர் பங்கீட்டில் தொடர்ந்து ஏற்படும் பிரச்சனைக்கு முடிவு கட்டுவதோடு கடலுக்கு செல்லும் உபரி நீரில் 64 டி.எம்.சி நீரை சேமிக்கலாம், இது குறித்து மீண்டும் முதலமைச்சரின் கவனத்திற்கும் கொண்டு சென்றுள்ளோம்.” என்றர்.

உலகெங்கிலும் பல்வேறு நாடுகளைக் கடந்து ஒரே நதி பயணிப்பதைப் பார்க்க முடிகிறது. உதாரணத்திற்கு, வட ஆப்பிரிக்காவைச் செழுமைப்படுத்தும் நைல் நதி 11 நாடுகளைக் கடந்து செல்கிறது. எகிப்து, சூடான், உகாண்டா, எத்தியோப்பியா உள்ளிட்ட நாடுகள் அதனால் பயன்பெறுகின்றன. அவ்வாறு 11 நாடுகளைக் கடந்து செல்லக்கூடிய நைல் நதியில் சிக்கல்கள் ஏற்பட்டால், அதைத் தீர்ப்பதற்காக ‘நைல் பேசின் இனிஷியேட்டிவ்’ (Nile Basin Initiative) என்ற நிர்வாக அமைப்பு செயல்பட்டு வருகிறது. பல்வேறு நாடுகளுக்கு இடையே பாயும் நதிநீர்ச் சிக்கலைத் தீர்க்க ஒரு கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு, ஒருமைப்பாடு நிலைநிறுத்தப்படும் போது, ஒரே நாட்டிற்குள் பாயும் நதிநீர்ப் பிரச்னையில் மத்திய அரசும் அது சார்ந்த அமைப்புகளும் உறுதியான தீர்ப்பை வழங்க வேண்டும் என்றே விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

தவெக-வின் கொள்கைத் தலைவர் காமராஜர் முன்வைத்து, தவெக-வின் முன்மாதிரித் தலைவர் எம்.ஜி.ஆர் தீர்மானம் நிறைவேற்றிய திட்டம் ராசிமணல் அணை. அது குறித்து தன் நிலைபாட்டை அறிவிக்குமா விஜய் தலைமையிலான தவெக அரசு?

More in TamilNews
சிஎஸ்கே கேப்டனை மாற்றப் போறீங்களா.. சஞ்சு சாம்சன் பெயரை பரிசீலிக்கணும்.. முன்னாள் வீரர் அட்வைஸ்! சிஎஸ்கே கேப்டனை மாற்றப் போறீங்களா.. சஞ்சு சாம்சன் பெயரை பரிசீலிக்கணும்.. முன்னாள் வீரர் அட்வைஸ்! September 5, 2026 குடிக்க தண்ணீர் கூட இல்லை! 10 நாட்களாக சுரங்கத்தில் சிக்கிய நபர்! உயிருடன் மீட்கப்பட்ட அதிசயம் குடிக்க தண்ணீர் கூட இல்லை! 10 நாட்களாக சுரங்கத்தில் சிக்கிய நபர்! உயிருடன் மீட்கப்பட்ட அதிசயம் September 5, 2026 உன் மகனால் தான் அறந்தாங்கி தொகுதியில் தோற்றோம்.. திமுக செயற்குழு கூட்டத்தில் கொந்தளித்த ரகுபதி! உன் மகனால் தான் அறந்தாங்கி தொகுதியில் தோற்றோம்.. திமுக செயற்குழு கூட்டத்தில் கொந்தளித்த ரகுபதி! September 5, 2026 நதியை தூய்மையாக்கிய பிட்டுவுக்கு நெதர்லாந்தில் வேலை.. ஐரோப்பாவில் செட்டில் ஆக அழைப்பு நதியை தூய்மையாக்கிய பிட்டுவுக்கு நெதர்லாந்தில் வேலை.. ஐரோப்பாவில் செட்டில் ஆக அழைப்பு September 5, 2026 Bigg boss season 10…முதல் ஐந்து போட்டியாளர்கள் இவர்களா?…வெளியான லிஸ்ட்! Bigg boss season 10…முதல் ஐந்து போட்டியாளர்கள் இவர்களா?…வெளியான லிஸ்ட்! September 5, 2026 பள்ளிக்கல்வி முதல் வனத்துறை வரை… கைமாறும் இலாகாக்கள்…அமைச்சர்களுக்கு காத்திருக்கும் ஷாக்? பள்ளிக்கல்வி முதல் வனத்துறை வரை… கைமாறும் இலாகாக்கள்…அமைச்சர்களுக்கு காத்திருக்கும் ஷாக்? September 5, 2026

See all 758 in TamilNews →

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *