“தி.மு.க ஆட்சிக்கு களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் புகார் கொடுத்தவரின் நிறுவனம் நடத்திய விழாவில் கலந்துகொண்ட எம்.பி மீது நடவடிக்கை எடுங்கள்” என்று தருமபுரி மாவட்ட தி.மு.க-வினர் தலைமைக்கு புகார் அனுப்பி வருவது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

தருமபுரி மாவட்டத்தில் பிரபலமான டி.என்.சி குழுமத்தின் புதிய பெட்ரோல் பங்க் திறப்புவிழாவில் தருமபுரி எம்.பி-யும், கிழக்கு மாவட்ட திமுக செயலாளருமான ஆ.மணி கலந்து கொண்டதை அறிந்து தருமபுரி மாவட்ட திமுக-வினர் கொந்தளித்துள்ளனர். கட்சி நிர்வாகிகள் வாட்ஸ் ஆப் குழுக்களில் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
‘ஒரு எம்.பி, தனியார் நிறுவன விழாவில் கலந்துகொண்டது குற்றமா? எதற்கு கடுமையான விமர்சனம்?’ என்ற கேள்வி எழ, இதுகுறித்து தருமபுரி மாவட்ட திமுக நிர்வாகிகளிடம் கேட்டோம், “ஒரு நிகழ்ச்சிக்கு நம்மை அழைப்பவர் யார்? அவரின் பின்னணி என்று சாதாரண மனிதர்களே விசாரிப்பார்கள். அப்படியிருக்கும்போது முக்கிய கட்சியின் மாவட்ட பொறுப்பிலும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் உள்ளவர், தான் சார்ந்துள்ள கட்சிக்கு எதிரானவர்கள் என்றால் அந்த நிகழ்வில் கலந்துகொள்ள மாட்டார்கள்.

அப்படியுள்ள சூழலில், தருமபுரி எம்.பி மணி கலந்துகொண்ட பெட்ரோல் பங்க் விழாவை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. கடந்த திமுக அரசுக்கு களங்கத்தை ஏற்படுத்தி, தற்போது முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யக் காரணமான வழக்கின் புகார்தாரரின் நிறுவனம் நடத்திய விழா என்பதுதான் எங்கள் ஆதஙகமே.
தருமபுரியில் பிரபலமான டி.என்.சி குழுமம், சிட்ஃபண்ட் உள்ளிட்ட பல்வேறு தொழில்களுடன் கல்வி நிறுவனங்களையும் நடத்தி வருகிறது. டி.சி இளங்கோவன், டி.சி.மணிவண்ணன் ஆகியோர் இந்நிறுவனங்களின் இயக்குநர்களாக உள்ளனர். அதில், இந்த டி.சி இளஙகோவன், பி.டி.அரசகுமார் தலைமையில் செயல்பட்ட ‘தமிழ்நாடு தனியர் பள்ளிகள் கட்டமைப்பில்’ பொதுச்செயலாளராக உள்ளார்.

தவெக ஆட்சிக்கு வந்ததும், ‘திமுக ஆட்சியில் தனியார் பள்ளிகள் அங்கீகாரம் புதுப்பித்தல், கட்டட அனுமதி, தரம் உயர்த்தல் போன்றவற்றிற்காக பி.டி.அரசகுமார், முத்துகுமார் மூலம் அப்போதைய பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷுக்கு பல பள்ளிகளிடமிருந்து வசூலித்து ரூ 100 கோடிக்கும் மேலாக லஞ்சம் கொடுத்தோம், ஆனால், எந்த விஷயமும் நடக்கவில்லை, பணத்தையும் திருப்பித் தரவில்லை” என்று தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்க கூட்டமைப்பின் சார்பில் டி.சி இளங்கோவன் காவல்துறையில் புகார் அளித்தார்.
அதைத் தொடர்ந்துதான் தி.மு.க செய்தித் தொடர்பாளராகவும், தனியார் பள்ளிகள் சங்க கட்டமைப்பின் தலைவராகவும் இருந்த பி.டி.அரசகுமார் கைது செய்யப்பட்டார். முத்துகுமார் தலைமறைவாகி தற்போதுதான் சரண் அடைந்துள்ளார். தவெக அரசு, இந்தப் புகாரை வைத்து திமுக-வின் இமேஜை டேமேஜ் செய்து வருவதுடன் தற்போது அன்பில் மகேஷை கைதும் செய்துள்ளது. அதைத் தொடர்ந்து ஊடகங்களில் பல்வேறு அவதூறுகளையும் சிலர் பரப்பி வருகிறார்கள். இதையெல்லாம் திமுக தொண்டர்கள் பார்த்து நொந்துபோயுள்ளனர்.

இந்த பிரச்சனை திமுக-வுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தி வருவது சாதாரணத் தொண்டனுக்கே தெரியும்போது, மாவட்டச் செயலாளராகவும், எம்.பி-யாகவும் உள்ளவருக்கு தெரியாதா?
அவருக்குத் தெரியும், ஆனால், அவருக்கு கட்சிக்கு ஏற்பட்ட களங்கத்தை விட டி.என்.சி குழுமம்தான் முக்கியம். அவருக்கும் அந்த குழுமத்துக்கும் உள்ள தொடர்பு பற்றி தருமபுரி மக்கள் யாரிடம் கேட்டாலும் சொல்வர்கள்.
அதிமுக, திமுக என்று எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தங்களுக்கு சேவை செய்ய சில மக்கள் பிரநிதிகளை டி.என்.சி குழுமம் வைத்துக்கொள்ளும். அந்த செல்வாக்கில்தான் தருமபுரிப் புறநகர்ப் பகுதியில் தங்களுக்கு சொந்தமான 200 ஏக்கர் நிலத்தின் மதிப்பை கூட்டும் வகையில் அதிமுக ஆட்சியின்போது புதிய பேருந்து நிலையம் கட்ட அப்பகுதியில் 10 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கி பப்ளிசிட்டி செய்தவர்கள், தி.மு.க ஆட்சியில் ‘அரசு-தனியார் பங்களிப்புத் திட்டத்தில்’ தமிழகத்திலேயே முதன்முதலில் ரூ 40 கோடி செலவில் புதிய பேருந்து நிலையத்தை, அந்த பகுதியில் அமைத்து, 25 அண்டுகளுக்கு அவர்களே நிர்வகித்துக் கொள்ளும் வகையில் அப்போதைய அமைச்சர்கள் எ.வ.வேலு, எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் மூலம் செய்து கொடுத்தவர் மணி.

புதிய பேருந்து நிலையத்தால் தருமபுரி மாவட்ட மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள். கடந்த தேர்தலில் மாவட்டத்தின் ஒரு தொகுதியில் கூட திமுக வெற்றி பெறாததற்கு அதுவும் ஒரு காரணம். ஆனால், டி.என்.சி நிறுவனத்திற்கு சொந்தமான 200 ஏக்கர் நிலத்தின் மதிப்பு பத்து மடங்கு அதிகரித்து விட்டது. இதற்கு காரணம் முன்னாள் அமைச்சர்கள் வேலு, பன்னீர்செல்வம், மணி எம்.பி ஆகியோர்தான்.
அதுமட்டுமின்றி, ஏற்கனவே தி.மு.க-வுக்கு ஒரு எம்.எல்.ஏ கூட இல்லாமல் இருந்த தருமபுரி மாவட்டத்தில் இந்த தேர்தலிலும் சரியான நபர்களுக்கு சீட்டை ஒதுக்கவிடாமல் செய்து கூட்டணியினருக்கு ஒதுக்கி தோல்வி அடையக் காரணமானவரும் மணிதான். அதனால்தான் தேர்தலுக்கு பின் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் மணிக்கு எதிராக வாக்குவாதம் செய்த சம்பவங்கள் நடந்தது. தருமபுரி கிழக்கு மாவட்டத்தில் கட்சியை இந்த லட்சணத்தில் வைத்திருப்பதுடன், கட்சிக்கு நெருக்கடி ஏற்படுத்திய வழக்கிற்கு காரணமான தனியார் பள்ளிகள் சங்கத்தின் நிர்வாகியோடு நெருக்கமாக இருந்து வருகிறார். இதை பிற கட்சியினரும் கிண்டல் செய்கிறார்கள், அதனால் இவர் மீது கட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் ” என்றனர்.
இதுகுறித்து மாவட்டச் செயலாளரும், தருமபுரி எம்.பி-யுமான ஆ.மணியிடம் கேட்டதற்கு, “நான் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் இந்தியன் ஆயில் கார்பரேஷன் அழைப்பின் பெயரில் கலந்துகொண்டேன். இதை ஏன் பெரிதாக ஆக்குகிறார்கள் என்று தெரியவில்லை, எனக்கு இதைவிட முக்கியமான வேலைகள் நிறைய உள்ளது” என்று முடித்துக்கொண்டார்.
"தமிழக அரசு நிலைப்பாட்டில் மாற்றமில்லை தானே.." கரூர் கூட்ட நெரிசல் வழக்கு.. உச்ச நீதிமன்றம் கேள்வி!
November 4, 2026
ஞானேஷ் குமாருக்கு சிக்கல்.. ரூ. 2 கோடி லஞ்சம்.. மலேசிய இன்ஜினியர் தற்கொலை.. தீவிரமடையும் விசாரணை
November 4, 2026
ஜென்ம நட்சத்திர பலன்கள் – நவம்பர் 5 2026 வியாழக்கிழமை
November 4, 2026
இன்றைய பஞ்சாங்கம் – நவம்பர் 5 2026 வியாழக்கிழமை
November 4, 2026
"ஆம்னி பஸ்கள் தீபாவளிக்கு அதிக கட்டணம் வசூலித்தால்.. பண்டிகை முடிந்து நடவடிக்கை!" அமைச்சர் வார்னிங்
November 4, 2026
டிரம்ப்பிற்கு எதிராக திரும்பும் துணை அதிபர் வேன்ஸ்! "அவரது" முடிவுகளே தோல்விக்கு காரணம் என பாய்ச்சல்
November 4, 2026
HP Coupon Codes and Deals November 2026
November 5, 2026
Zoro Coupon Codes: 20% Off November 2026
November 5, 2026
HostGator Coupon Codes: 76% Off Hosting in November 2026
November 5, 2026