சுப்ரீம் கோர்ட்டில் 6 மாதம் கர்ப்பமாக இருக்கும் ஒரு பெண் தனது வயிற்றில் இருக்கும் கருவைக் கலைக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருந்தார்.

கணவருடன் தனக்கு சண்டை இருப்பதாகவும், அவரை விவாகரத்து செய்ய விரும்புவதாகவும், எனவே குழந்தையைப் பெற்றுக்கொள்ள விரும்பவில்லை என்றும், எனவே கருவைக் கலைக்க அனுமதி கொடுக்க வேண்டும் என்றும் அப்பெண் தனது மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

சித்தரிப்பு படம்

அப்பெண்ணின் கணவர் குடும்ப வாட்ஸ்அப் குழுவில் அந்தப் பெண்ணின் குணநலன்கள் குறித்துக் குற்றச்சாட்டுகளை முன்வைத்ததைத் தொடர்ந்து, தம்பதியினருக்கு இடையே கருத்து வேறுபாடு தொடங்கியது.

அப்பெண்ணின் மனு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது முதல் கட்டமாகச் சமரசத்திற்கான முதல் படியாக, மனைவி மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் திரும்பப் பெறுவதாகப் பிரமாணப் பத்திரம் ஒன்றைத் தாக்கல் செய்யுமாறு அப்பெண்ணின் கணவரிடம் நீதிபதிகள் கேட்டுக்கொண்டனர். குழந்தையின் நலனுக்காக தம்பதியினரைத் தங்கள் கருத்து வேறுபாடுகளைத் தீர்த்துக்கொள்ளுமாறு நீதிமன்றம் தெரிவித்தது.

மேலும், பாலியல் வன்கொடுமை அல்லது பாலியல் தாக்குதல் நிகழ்ந்தாலோ, அல்லது கருவில் ஏதேனும் குறைபாடு இருந்தாலோ கருக்கலைப்புக்கு அனுமதி அளிக்கப்படலாம் என்றும், ஆனால், தற்போதைய வழக்கு முற்றிலும் மாறுபட்ட சூழலைக் கொண்டுள்ளது இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு தெரிவித்தது.

கருவில் இருக்கும் குழந்தை அன்பின் விளைவு என்றும், பிறக்கப்போகும் குழந்தையின் மீது தந்தைக்கும் உரிமை உண்டு என்றும் சுட்டிக்காட்டிய நீதிபதிகள் அமர்வு, ”கரு ஆரோக்கியமாக இருப்பதால், கருக்கலைப்பு செய்யுமாறு மனுதாரர் பிடிவாதம் பிடிக்க வேண்டாம். தம்பதியினரிடையே கருத்து வேறுபாடுகள் அல்லது வாக்குவாதங்கள் ஏற்படுவது இயல்பான ஒன்று.

அதற்காகக் கருக்கலைப்பு செய்ய வேண்டும் என்று அர்த்தமல்ல. இது பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கல்ல. அல்லது திருமணமாகாத பெண் கர்ப்பமடைந்த சூழலும் அல்ல. கணவர் மற்றும் கணவர் வீட்டாருடன் ஏற்பட்ட சண்டையின் காரணமாகக் கருக்கலைப்பு செய்ய விரும்புகிறேன் என்று ஒரு மனைவி கூறினால், நாம் எந்த மாதிரியான சமூகத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம்? தந்தையின் உரிமை என்னாவது?” என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

அப்பெண்ணின் கணவர் கருவைக் கலைக்க எதிர்ப்பு தெரிவித்தார். குழந்தை பிறந்தவுடன் அதனை தான் வளர்த்துக்கொள்வதாகவும் வாதிட்டார். இவ்வழக்கு மீதான அடுத்த கட்ட விசாரணை நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதில் அப்பெண்ணின் கோரிக்கையை சுப்ரீம் கோர்ட் ஏற்குமா என்று தெரிய வரும்.

See all 682 in TamilNews →

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *