முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் அ.தி.மு.க-வில் இருந்து விலகி ஈரோடு மத்திய மாவட்ட தி.மு.க பொறுப்பாளராகப் பதவி வகித்து வந்த நிலையில், அந்தப் பதவியிலிருந்து விடுவிப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் இன்று காலை அதிகாரப்பூர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து இன்று காலை செய்தியாளரைச் சந்தித்து பேசிய தோப்பு வெங்கடாசலம், “நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய் அலை காரணமாக மட்டுமே தி.மு.க ஆட்சியை இழக்கவில்லை. பல தொகுதிகளில் அனைத்தையும் மீறி தி.மு.க வென்றிருக்கிறது.
ஈரோட்டில் இந்த அளவிற்குத் தோல்வியை அடைய காரணம் கட்சிக்குள் நடந்த உள்ளடிதான். தி.மு.க-வைச் சேர்ந்த சில முக்கிய நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் சொந்த கட்சிக்குச் சரியாக வேலை செய்யாமல், எதிர்க்கட்சிக்காக வேலை பார்த்தார்கள்.

இது தொடர்பாக ஒன்றிய மற்றும் பேரூர் கழக செயலாளர்கள் என்னிடம் புகார் மனுக்களைக் கொடுத்தார்கள். விசாரணை நடத்தி, தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு நான் கட்சி மேலிடத்திற்கு அனுப்பி வைத்திருந்தேன். மீண்டும் அ.தி.மு.க-விற்கோ அல்லது தமிழக வெற்றிக் கழகத்திற்குச் செல்லவோ தற்போதைக்கு எண்ணமில்லை.
பதவியிலிருந்து என்னை நீக்கியது எனக்கு நல்லதா… அல்லது கட்சிக்கு நல்லதா என்பதை காலம் பதில் சொல்லும். என்ன காரணத்திற்காக என்னை நீக்கினார்கள் என்பதை தி.மு.க தலைமைதான் சொல்ல வேண்டும். பதவி பறிக்கப்பட்ட உடன் கட்சித் தலைமை குறித்தும் நிர்வாகிகள் குறித்தும் அவதூறாகப் பேசுவது ஏற்புடையதாக இருக்காது” என்றார்.













