வரும் சனிக்கிழமை அதாவது அக்டோபர் 17ம் தேதி 55வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது எம்.ஜி.ஆர் உருவாக்கிய அவருக்குப் பின் ஜெ.ஜெயலலிதா கட்டிக் காத்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்.

இதையொட்டி தமிழ்நாடு முழுக்க பொதுக்கூட்டங்கள் நடத்த உத்தரவிட்டிருக்கிறார் கட்சியின் தற்போதைய பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி.

ஆனால் அவரின் அறிவிப்பு வெளியாவதற்கு இரண்டு தினங்களூக்கு முன், செய்தியாளர்களிடம் பேசிய தமிழக நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, ”இனி தவெகவும் அதிமுகவும் ஒன்றுதான், அதிமுகவின் பெரும்பாலான நிர்வாகிகள் தவெகவில் சேர விருப்பம் தெரிவித்துள்ளனர். பழனிசாமியும் அவரது மகனும்தாம் இனி அதிமுகவில் இருப்பார்கள்” எனச் சொல்லி இருக்கிறார்.

மூத்த அமைச்சர் செங்கோட்டையனோ, ”இன்னும் 15 எம்.எல்.ஏ.க்கள் அதிமுகவிலிருந்து வரத் தயாராகி விட்டார்கள்” என்கிறார்.

ஐந்து மாதங்களுக்கு முன் கட்சி வென்ற மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகள் தற்போது கைவிட்டுப் போயிருக்கிற சூழலில், நடந்து முடிந்த 2026 பொதுத்தேர்தலுக்குப் பிந்தைய சில நிகழ்வுகள் மீண்டும் அரங்கேறலாமென்கிற அச்சம் எந்த எதிர்பார்ப்புமின்றி கட்சியில் பயணித்து வரும் கடைக்கோடித் தொண்டர்கள் மத்தியில் தெரிகிறது.

மரகதம் குமரவேலும் சத்தியபாமாவும் வென்றது, அதிமுகவில் நீடிக்கும் சட்டமன்ற உறூப்பினர்களைச் சலனப்படுத்துமா? 55 வது ஆண்டு தொடக்க விழா கட்சியின் உண்மைத் தொண்டர்களுக்கு உற்சாகமாகமானதாக இருக்குமா?

நிர்வாகிகள் தொடங்கி அஇஅதிமுகவின் சாதாரணத் தொண்டன் வரை பலரிடமும் பேசினோம்.

நாஞ்சில் அன்பழகன்
நாஞ்சில் அன்பழகன்

ஆளுங்கட்சியை ஜெயிச்ச கட்சியும் இடைத்தேர்தல் கண்டு பயந்த கட்சியும் எப்படி ஒண்ணாகும்?

”இப்ப தவெகவினர் ‘எம்.ஜி.ஆர் கூட பண்ணாத சாதனையை விஜய் நிகழ்த்திட்டார்’னு பேசிட்டுத் திரியறாங்க. அது அதிகப்படியான ஆணவத்துல வெளிப்படுகிற பேச்சு. ஏன்னா தொடங்கப்பட்ட பிறகு சந்தித்த முதல் பொதுத் தேர்தல்ல பெரும்பான்மை பெற்று ஆட்சியமைத்தது அதிமுக. தவெக ஆறு கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைச்சிருக்கு.

இன்னொரு விஷயத்தையும் தவெகவினர் தெரிஞ்சு வச்சிக்கிடணும். இடைத்தேர்தல்னாலே 99% ஆளூங்கட்சிதான் ஜெயிக்கும்கிறதுதான் யதார்த்தம். ஆனா அதிமுக தொடங்கப்பட்ட குறுகிய காலத்துக்குள்ள அதாவது முதல் சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்திக்கறதுக்கு முன்னாடியே ரெண்டு இடைத்தேர்தலைச் சந்திச்சு ரெண்டுலயும் ஆளுங்கட்சியைத் தோற்கடிச்ச வரலாறு அதிமுகவுக்கு இருக்கு.

திண்டுக்கல் எம்.பி. தொகுதியும் கோவை மேற்கு சட்டப்பேரவைத் தொகுதியும்தாம் அவை. ஆனா தவெக ஆரம்பிச்ச கொஞ்ச நாள்ல வந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்ல போட்டியே போடலையே. தவெகவும் அதிமுகவும் ஒண்ணுதான்னு பேசறவங்க இந்த வரலாறைத் தெரிஞ்சுக்கணும்.

அதனால எம்.ஜி.ஆர்-க்கு மிஞ்சிய சாதனைனு சொல்றதெல்லாம் அறியாமைனுதான் சொல்லணும்.

அரசியலுக்கு யார் வேணாலும் வரலாம். ஆனா அப்படி வர்றவங்க கட்சிக்கான கொள்கை, கட்டமைப்பைப் புதுசா உருவாக்கணும். அப்படி உருவாக்கினாலே உங்க கட்சியைத் தேடி தொண்டர்கள் வருவாங்க. அதைச் செய்யாம மத்த கட்சிகள்ல இருந்து ஆட்களை இழுத்துட்டுப் போனீங்கன்னா, எதுக்கு ஒரு புதுக் கட்சியா வரணும்? பழைய கட்சிகளே இருந்துட்டுப் போகட்டுமே! மாற்றம்னு சொல்லி வந்ததற்கு அர்த்தம் வேண்டாமா?” எனக் கொதிக்கிறார் அதிமுகவின் கலைப் பிரிவு மாநிலச் செயலாளர் நாஞ்சில் பி.சிஅன்பழகன்.

angaadi

இப்போதய சூழல் ஒரு மாதிரி இருக்கறதால் பெயர் வேண்டாமென்கிற நிபந்தனையுடன் பேசத் தொடங்கினார், தலைநகரில் பொறுப்பிலிருக்கும் அந்த மாவட்டச் செயலாளர்..

”ஆண்டிகள் கூடி மடம் கட்டுற கதைதான் இப்ப எழுந்திருக்கிற சலசலப்பு. கட்சியின் தொண்டர்களூம் மக்களில் அதிமுகவை விரும்புகிறவர்களும் எடப்பாடி பழனிசாமியை பொதுச் செயலாளராக ஏத்துக்கிட்டாங்க. இந்த ரெண்டு பேர் அங்க போய் ஜெயிக்கலையானு இன்னும் போக நினைக்கிறவங்க போனாலுமே கட்சிக்கு ஒரு பிரச்னையுமில்லை. ஏன்னா, இந்த ரெண்டு இடைத்தேர்தல்லயும் பாரம்பர்ய அதிமுக வாக்குகள் கட்சிக்குதான் கிடைச்சிருக்கு.

பாமகவால்தான் மதுராந்தகம் ஜெயிக்க முடியலைங்கிறதெல்லாம் நிஜமில்ல. வன்னியர்கள் எல்லாருமே பாமக சொல்லைக் கேட்டு ஓட்டு போடுறாங்களா என்ன? திமுக, அதிமுக ரெண்டுலயுமே வன்னியர்கள் இல்லையா? பாமக குறித்த மீடியாக்களின் மிகைப்படுத்தப்பட்ட செய்தி அது.

மதிமுக எப்படிக் காணாமப் போச்சோ அதேபோல விஜயகாந்த் கட்சியும் பாமகவும் 2026 தேர்தலுடன் போயிருக்கும். திமுக, விஜயகாந்த் கட்சிக்கு வாழ்வு தந்தது. ராமதாஸ் மகனுக்கு ஆதரவுக் கரம் கொடுத்து இன்னைக்கு அவர் அண்ணா திமுகவுக்கு அட்வைஸ் தர்ற அளவுக்கு வளர்த்து விட்டது அதிமுக.

அதிகபட்சம் ஒரு மாசத்துக்கு உன் வீட்டுல மீட்டிங் என் வீட்டுல மீட்டிங்னு சிலர் ஓடிட்டிருப்பாங்க. அதன்பிறகு எல்லாத்துக்கும் ஒரு விடிவு வரும்.

இப்போதைய சூழலையெல்லாம் கடந்து மீண்டும் ஆட்சியை அமைப்போம்கிற நம்பிக்கை எங்க தொண்டர்கள் மத்தியில 200 % இருக்கு” என்பது இவருடைய கருத்தாக இருக்கிறது.

ஶ்ரீகிருஷ்ணா
ஶ்ரீகிருஷ்ணா

”எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு ஜெ – ஜா அணி எனப் பிரிந்து பிறகு சேர்ந்த கட்சி. 1996 தேர்தலில் ஜெயலலிதாவே தோற்று அதலபாதாளத்துக்குப் போனது. பிறகு ஜெயலலிதா சிறைக்குச் சென்றதும் நடந்தது. ஆனால் ஜெ. மறைவுக்குப் பிறகு ‘ஆட்சி அவ்வளவுதான்’ எனச் சொன்னவர்களின் பேச்சைப் பொய்யாக்கினார் எடப்பாடி பழனிசாமி. கட்சியை சசிகலா குடும்பத்திடமிருந்து மீட்டது கட்சியில் அவரை வலுவான தலைவராக்கியது.

அவர் முதல்வராக இருந்த காலத்தில் செய்த சில சாதனைகள் பொது மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்றது. அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவக் கல்வி பெறச் சட்டம், குடிமராமத்து, கோவிட்டை திறம்படக் கையாண்டது ஆகியவையெல்லாம் அவருடைய நிர்வாகத் திறனைக் காட்டியது. இதனாலெல்லாம்தான் 2021 தேர்தலில் தப்பித்தோம் பிழைத்தோமென்கிற ரீதியில்தான் திமுக வென்றது.

தோற்றாலும் வலுவான எதிர்க்கட்சியானது அதிமுக. ஆளுங்கட்சியாகத் தேர்தலைச் சந்திக்காதது, புதிதாக வீசிய விஜய் அலை போன்ற காரணிகளைத் தாண்டியும் 2026 தேர்தலில் 47 சீட்டுகள் என்பது சாதாரண விஷயமில்லை. இடைத்தேர்தல்ல கூட விஜய்ங்கிற பிம்பம் அசைத்துப் பார்க்கப் பட்டிருக்கு. மிச்சமிருக்கிற காலம் இவர்கள் ஆட்சி செய்கிற லட்சணத்தைப் பார்த்தே மக்கள் அதிமுகவை மீண்டும் ஆட்சியில அமர்த்ததான் போறாங்க” என்கிறார் சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த கிருஷ்ணா.

More in TamilNews
கிருஷ்ணா நதிநீர் ஒப்பந்தம் என்றால் என்ன? விஜயின் ஆந்திர பயணம் தமிழ்நாட்டுக்கு பலன் தருமா? கிருஷ்ணா நதிநீர் ஒப்பந்தம் என்றால் என்ன? விஜயின் ஆந்திர பயணம் தமிழ்நாட்டுக்கு பலன் தருமா? October 14, 2026 'அவரை அடக்குங்க முதல்ல…' – மாநகராட்சி கூட்டத்தில் மோதிய சேகர் பாபு – தவெக எம்.எல்.ஏ தாமு! 'அவரை அடக்குங்க முதல்ல…' – மாநகராட்சி கூட்டத்தில் மோதிய சேகர் பாபு – தவெக எம்.எல்.ஏ தாமு! October 14, 2026 சௌதி அரேபியா மீது அடுத்தடுத்து தாக்குதல்கள் நடத்தும் ஹூத்திகள் – அமெரிக்கா உதவாதது ஏன்? சௌதி அரேபியா மீது அடுத்தடுத்து தாக்குதல்கள் நடத்தும் ஹூத்திகள் – அமெரிக்கா உதவாதது ஏன்? October 14, 2026 மின் கொள்முதல்: “கூடுதல் செலவானாலும் மின்சாரம் வாங்க காரணம் இதுதான்" – அமைச்சர் நிர்மல் குமார் மின் கொள்முதல்: “கூடுதல் செலவானாலும் மின்சாரம் வாங்க காரணம் இதுதான்" – அமைச்சர் நிர்மல் குமார் October 14, 2026 சிவாராசா அனோஜன்: மரண தண்டனை ரத்தானது பற்றி இலங்கை அரசியல் தலைவர்கள் கூறுவது என்ன? சிவாராசா அனோஜன்: மரண தண்டனை ரத்தானது பற்றி இலங்கை அரசியல் தலைவர்கள் கூறுவது என்ன? October 14, 2026 'ரூ.80க்கு விற்ற சாப்பாடு தற்போது ரூ.120' – அதிகரிக்கும் பணவீக்கம் தமிழக மக்களை எப்படி பாதிக்கிறது? 'ரூ.80க்கு விற்ற சாப்பாடு தற்போது ரூ.120' – அதிகரிக்கும் பணவீக்கம் தமிழக மக்களை எப்படி பாதிக்கிறது? October 14, 2026

See all 706 in TamilNews →

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *