தமிழ் வம்சாவளியை சேர்ந்த பெண்ணான நவநீதம் பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளதற்கு வாழ்த்து தெரிவித்து தமிழ்த் தேசியவாதி பழ நெடுமாறன் வெளியிட்டுள்ள செய்தி!

`நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்

நிலத்தில் யார்க்கு மஞ்சாத நெறிகளும்,

நிமிர்ந்த ஞானச் செருக்கு மிருப்பதால்

செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்

அமிழ்ந்து பேரிரு ளாமறி யாமையில்

அவல மெய்திக் கலையின்றி வாழ்வதை

உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணற மாகுமாம்

உதய கன்னி யுரைப்பது கேட்டிரோ!

என பாரதி 104 ஆண்டுகளுக்கு முன்னால் தனது கற்பனையில் படைத்த புதுமைப்பெண்ணைப் பற்றிய கவிதை இதுவாகும். அவன் கண்ட கனவு இன்று நனவாகி உள்ளது. பிறந்த நாட்டில் வாழ வழியின்றி புலம்பெயர்ந்து தென்னாப்பிரிக்காவில் கரும்பு தோட்டங்களில் உழைப்பதற்காகத் தமிழ்நாட்டிலிருந்து சென்ற ஏழை உழைப்பாளி குடும்பத்தின் தோன்றலாக நவநீதம் பிறந்தார். தங்களைப் போன்ற சக குடும்பங்களின் உதவியால் சட்டப் படிப்பை முடித்து தென்னாப்பிரிக்கா வெள்ளை அரசின் நிறவெறிக் கொடுமைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நீதிமன்றங்களில் போராடுவதையே தனது வாழ்க்கையின் நோக்கமாகக் கொண்டார்.

நேட்டால் மாநிலத்திலேயே வழக்கறிஞர் தொழிலைத் தொடங்கிய முதல் பெண்ணாக அவர் திகழ்ந்தார். கறுப்பின மக்களுக்காகத் தென்னாப்பிரிக்காவில் தொண்டாற்றிய காந்தியடிகளைப் பின்பற்றி அதே தொண்டினைத் தொடர முடிவெடுத்து சட்டப் போர்க்களத்தில் அறவழியில் தொடர்ந்து போராடினார்.

தென்னாப்பிரிக்கா வெள்ளை அரசு கறுப்பின மக்களுக்கும் இந்தியர்களுக்கும் எதிராக நிறவெறிக் கொள்கையைத் தீவிரமாக செயற்படுத்தியது. ஊர்களுக்குப் புறம்பே வாழுமாறு அவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டனர். தொடர்வண்டிகள், பேருந்துகள் போன்றவற்றில் வெள்ளையர்களுடன் சேர்ந்து அமர்வதற்கு அனுமதிக்கப்படவில்லை. அவர்களுக்காக ஒதுக்கிய இடங்களில் மட்டுமே உட்கார்ந்து பயணிக்க அனுமதிக்கப்பட்டனர். இதைப்போலச் சகல துறைகளிலும் கறுப்பின மக்கள் புறந்தள்ளப்பட்டனர்.

வெள்ளை அரசின் இந்த நிறவெறிக் கொள்கையை எதிர்த்துப் போராடியவர்களைக் கைது செய்து சிறையிலடைத்தனர். இதற்காக ரோபன் என்னும் தீவில் தனியாகச் சிறைச்சாலை ஒன்று கட்டப்பட்டது. அந்தத் தீவில் வேறு யாரும் அனுமதிக்கப்படவில்லை. தென்னாப்பிரிக்கா மக்களின் ஈடு இணையற்றத் தலைவரான நெல்சன் மண்டேலா மற்றும் அவரது தோழர்கள் உள்பட ஏராளமான அரசியல் கைதிகள் இத்தீவில் அமைந்த வெஞ்சிறையில் வாழ நேர்ந்தது, இவர்களின் உரிமைகளுக்காக நீதிமன்றங்களில் இடைவிடாது போராடி அந்த வழக்குகளிலிருந்து அவர்களை மீட்ட வழக்கறிஞர் குழுவில் இளம் வயதிலிருந்தே இணைந்து தொண்டாற்றினார்.

பழ. நெடுமாறன்

காந்தியடிகள் தென்னாப்பிரிக்கா அரசின் நிறவெறிக் கொள்கையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாதாடிய போது, அரசின் அவமதிப்புகளுக்கும் அடக்குமுறைகளுக்கும் ஆளானதைப் போல நவநீதம் அவர்களும் ஆளானார். ஆனால், ஒருபோதும் தனது போராட்டத்தை அவர் கைவிடவில்லை. போராட்டக் களத்தில் அவர் நவி பிள்ளை என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். இவரை மணந்துகொண்ட ஒரே காரணத்திற்காக நவி பிள்ளையும் அரசின் ஒடுக்குமுறைக்கு ஆளானார்.

1995ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்கக் குடியரசுத் தலைவர் நெல்சன் மண்டேலா, நீதித்துறை அமைச்சர் துலா உமரின் ஆகியோரின் பரிந்துரையின் பேரில் ஐ.நா. பாதுகாப்புக்குழுவில் தென்னாப்பிரிக்காவின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார். பின்னர் ருவாண்டா, சர்வதேச குற்றவியல் ஆணையத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 1999 முதல் 2003ஆம் ஆண்டு வரை அவர் அந்த ஆணையத்தின் தலைமை நீதிபதியாகவும் பதவி வகித்தார். 2003ஆம் ஆண்டில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் நீதிபதியாகவும், மேல் முறையீட்டுக் குழுவின் உறுப்பினராகவும் பணியாற்றினார். 2008ஆம் ஆண்டில் ஐ.நா. பேரவையினால் பரிந்துரைக்கப்பட்டு ஐ.நா. பொதுச்செயலாளர் பான்-கீ-மூன் அவர்களால் ஐ.நா. மனித உரிமை உயர் ஆணையாளராக நியமிக்கப்பட்டார். பாலஸ்தீனத்தின் ஒரு பகுதியான காசா என்பதை ஆக்கிரமித்து இசுரேல் நடத்திய இனப்படுகொலைகள் குறித்து விசாரணை நடத்த ஐ.நா. சர்வதேச ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

மியான்மாரில் ரோஹிங்கியா இனத்தைச் சேர்ந்தவர்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கு குறித்து அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்திலும் அங்கம் வகித்தார். 1995ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்கா விடுதலை பெற்று முதலாம் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பெற்ற நெல்சன் மண்டேலா அவர்களால் உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பெற்றார். அப்போது நெல்சன் மண்டேலா அவர்களே நேரடியாக அவரது இல்லத்திற்குச் சென்று தனது பாராட்டுதலைத் தெரிவித்தார்.

நவி பிள்ளை

2013ஆம் ஆண்டில் இலங்கையில் உள்நாட்டுப் போருக்குப் பின்னர் சிங்கள அரசு மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள், ஈழத் தமிழர்களுக்கெதிராக நடத்திய ஒடுக்குமுறைகள் ஆகியவை அதுவொரு எதேச்சதிகார அரசு என்பதை நிரூபித்துள்ளது. எனவே அந்த அரசின் மீது கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும் என வலியுறுத்தினார். ஐ.நா. மனித உரிமை ஆணையர் என்ற முறையில் அவர் கண்டித்த போது சிங்கள அரசு நவநீதம் நவி பிள்ளை ஒரு தமிழர் என்ற முறையில் இவ்விதமான பொய்க் குற்றச்சாட்டுகளைக் கூறுவதாகக் குற்றம் சாட்டியது. அதுமட்டுமல்ல, சிங்கள அமைச்சர் ஒருவர் கணவனை இழந்த நவநீதம் நவி பிள்ளையைத் தான் மறுமணம் செய்துகொண்டு வாழ்வளிப்பதாக பகிரங்கமாகக் கூறி அவரை இழிவுபடுத்தினார்.

அதுமட்டுமல்ல, 2009ஆம் ஆண்டில் இலங்கையில் சிங்கள இராணுவம் ஈவிரக்கமின்றி ஈழத்தமிழர்களுக்கெதிராக நடத்திய இனப்படுகொலை பற்றிய விவரங்களைத் திரட்டினார். ஐ.நா. மனித உரிமை ஆணையர் என்ற முறையில் அவர் அளித்த அறிக்கையை ஐ.நா. செயலாளர் நாயகம் ஏற்றுக்கொண்டு, அதன் அடிப்படையில் மூன்று வல்லுநர்கள் கொண்ட குழுவை அமைத்து, அந்தக் குழுவின் அறிக்கையை ஐ.நா. சார்பான அறிக்கையாக வெளியிட்டார். உலக நாடுகள் அதிர்ச்சியடைந்தன. சிங்கள அரசின் மீது ஐ.நா. குற்றவியல் விசாரணை மன்றம் அமைத்து விசாரிக்கவேண்டும் என பல நாடுகள் வலியுறுத்தின. ஆனாலும் இந்திய அரசின் தலையீட்டின் பேரில் சிங்கள அரசே விசாரணைக் குழு அமைத்து விசாரிக்கட்டும் என முடிவு மேற்கொள்ளப்பட்டது. கொலையாளியே நீதிபதியாக நியமிக்கப்பட்ட அநீதிக்கு இந்திய அரசே காரணமாகும்.

ருவாண்டா நாட்டில் நடைபெற்ற இனப்படுகொலைகள் குறித்து அமைக்கப்பட்ட சர்வதேச குற்றவியல் ஆணையத்தின் உறுப்பினராகவும் பின்னர் அதன் தலைவராகவும் 8ஆண்டுக் காலம் அவர் பணியாற்றிய வேளையில் இரண்டு முக்கியமான தீர்ப்புகளை வழங்கினார்.

1. வன்புணர்வு, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை ஆகியவை இனப்படுகொலையின் பிரிக்க முடியாத அங்கமாகக் கருதப்படவேண்டும்.

2. ருவாண்டா நாட்டில் வாழும் சிறுபான்மையினரான டூசிஸ் என்னும் இனத்தவருக்கு எதிராக வானொலி மற்றும் பத்திரிகைகள் மூலம் மேற்கொள்ளப்படும் வெறுப்புப் பிரச்சாரம் இனவெறியைத் தூண்டிவிடும் குற்றமாகக் கருதப்படவேண்டும்.

நவி பிள்ளை

பாலஸ்தீன பகுதியில் இசுரேல் அரசு நடத்திய இனப்படுகொலை குறித்து 2025ஆம் ஆண்டு செப்டம்பரில் அவர் திட்டவட்டமாகப் பின்வருமாறு அறிவித்தார்-

1948ஆம் ஆண்டு ஐ.நா. இனப்படுகொலைக்கு எதிரான மாநாட்டில் இனப்படுகொலை என்பது குறித்துக் கூறப்பட்ட 5 விளக்கங்களில் நான்கினை இசுரேல் அரசு புரிந்துள்ளது. பாலஸ்தீன மக்களைப் பட்டினி போடுவதும், உணவுப் பொருட்களோ அல்லது மருந்து போன்ற வேறு உதவிப் பொருட்களோ அவர்களுக்கு அனுப்பப்படுவதைத் தடை செய்வதும் இனப்படுகொலைக்கு நிகரானதாகும்.

வேறு எந்தவிதமான கொடுங் குற்றமும் இனப்படுகொலையை நியாயப்படுத்திவிட முடியாது என்பதை சர்வதேசச் சட்ட ரீதியாக நிலைநாட்டி இதுவரை யாரும் செய்யாத ஒன்றினை செய்து இனவெறி ஏகாதிபத்திய நாடுகளை மிரளச் செய்து பாரதி கனாக்கண்ட புதுமைப்பெண் இவரே என்பதை உலகறியச் செய்தார்.

2008ஆம் ஆண்டு சூலை 24ஆம் நாளில் ஐ.நா. செயலாளர் நாயகமான பான்-கீ-மூன், நவநீதம் நவி பிள்ளையை ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் உயர் ஆணையாளராக நியமனம் செய்தார். இவரது நியமனத்தை முதலில் மிகக் கடுமையாக எதிர்த்த அமெரிக்கா, பின்னர் உலக நாடுகள் அவருக்கு ஆதரவாகத் திரண்டதை கண்டு எதிர்ப்பிலிருந்து பின்வாங்கியது. இப்பொறுப்பில் அவர் இருந்தபோது, 2009ஆம் ஆண்டில் சாதி அடிப்படையிலான பாகுபாட்டினை அடியோடு அகற்றவேண்டும் என வலியுறுத்தினார். மேலும் ஐ.நா. மனித உரிமைக் குழுவில் சாதி அடிப்படையிலோ, பாலின அடிப்படையிலோ எத்தகைய பாகுபாடும் கடைப்பிடிக்கக் கூடாது என ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினார்.

நவநீதம் பிள்ளை

யாரும் செய்யத் துணியாத மனிதநேய தொண்டினைத் தொடர்ந்து புரிந்துவந்ததோடு, சர்வதேசச் சட்ட ஒழுங்குப் பிரச்சனையை வளர்ப்பதில் அவர் வெளிப்படுத்திய நீதி ஆளுமை, செயற்பாட்டில் நேர்மை, யாருக்கும் அஞ்சாத துணிவுடைமை போன்ற அவரது உயர்ந்த குண இயல்புகளை மனதில் கொண்டு நார்வே நோபல் குழு இவ்வாண்டுக்கான அமைதி விருதினை அவருக்கு அளிப்பதென முடிவு செய்தது.

உலக அரங்கில் சர்வதேசச் சட்டங்களைச் சிறிதும் மதியாமல் பல்வேறு நாடுகள் தன்னிச்சையான போர்களைத் தொடுத்தல், வலிமை வாய்ந்த நாடுகள் வலிமையற்ற நாடுகளை மிரட்டிப் பணியவைத்தல் போன்ற சர்வதேசச் சட்டங்களை மீறிச் செயல்படுகிற போக்குப் பெருகிவரும் இந்த காலகட்டத்தில் சர்வதேசச் சட்டங்களையும் நீதிமுறையையும் நிலைநாட்டவேண்டும் என்ற உயர் நோக்கத்துடன் அமைதி விருதுக்கான முழுமையான தகுதி படைத்தவர் நவநீதம் நவி பிள்ளையே என நோபல் விருது குழுவினர் உறுதியான முடிவெடுத்து அறிவித்துள்ளது பாராட்டத்தக்கதாகும்.

நோபல் அமைதிப் பரிசுக்கான முழுமையான தகுதி படைத்தவர் தான் மட்டுமே எனக் கொக்கரித்து வந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், நவநீதம் நவி பிள்ளைக்கு விருது அளிக்கப்பட்டதைக் கடுமையாகச் சாடியதன் மூலம் ஏகாதிபத்திய நாடுகளின் மனப்போக்கினை நாம் உணர்ந்துகொள்ள முடியும்.

அமைதிக்கான விருதினை நவநீதம் நவி பிள்ளைக்கு வழங்குவதற்கு நார்வே நோபல் குழு பின்கண்ட காரணங்களை தெரிவித்துள்ளது-

“உலக நாடுகளிடையே சட்டம் ஒழுங்கு முறையாக நிலைநாட்டப்படுவதில் நவநீதம் நவி பிள்ளை ஆற்றிய தொண்டு மகத்தானது. உலகில் பல்வேறு நாடுகளுக்கிடையே போர்களும் மோதல்களும் அதிகரித்துவரும் இந்த வேளையில் நேர்மையாகவும், நடுநிலையுடனும் அவற்றைத் தடுப்பதற்கு இவர் ஆற்றிய தொண்டு ஈடு இணையில்லாததாகும். குறிப்பாக, சர்வதேச ரீதியான சட்ட ஒழுங்குப் பிரச்சனையில் அரசியல் தலையீடு அதிகமாகியுள்ளது. போர்க் குற்றவாளிகள் சர்வதேசச் சட்ட அமைப்பு முறையில் தலையிட்டு அவைகளை செயலிழக்கச் செய்து வருகிறார்கள். இந்தப் பின்னணியில் எதற்கும் யாருக்கும் அஞ்சாமல் இனப்படுகொலைக்கு எதிராகவும், பாலின குற்றங்களுக்கு எதிராகவும் நடுநிலைப் பிறழாது அவர் ஆற்றிய தொண்டு என்பது மிகப் பாராட்டத் தக்கதாகும்” என நார்வே நோபல் குழு கூறியுள்ளது.

நவி பிள்ளை

இவ்வாண்டு உலக அமைதிக்கான நோபல் விருது நவநீதம் நவி பிள்ளைக்கு அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட நேரத்தில் அவர் நீதிக்கான நூறம்பர்க் மாளிகையின் 600ஆவது அறையில் நடைபெற்ற சர்வதேச மாநாடு ஒன்றில் கலந்துகொண்டிருந்தார். இந்த அறையில்தான் இரண்டாம் உலகப்போர் நேரத்தில் கொடுங் குற்றங்கள் புரிந்த நாஜிக் தலைவர்கள் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி விசாரணை நடத்தப்பட்டு, அவர்களுக்குத் தண்டனைகள் வழங்கப்பட்டன என்பது வரலாற்றுப்பூர்வமாக மறக்க முடியாத நிகழ்ச்சியாகிவிட்டது.

தனது கற்பனையில் பிறந்த புதுமைப் பெண் இன்று நவநீதம் வடிவில் நோபல் விருது பெற்றிருப்பதை பாரதி காண நேர்ந்தால் ஆனந்த கூத்தாடியிருப்பான் என்பதில் ஐயமில்லை.’ எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

More in TamilNews
கொல்கத்தா துர்கா பூஜை பந்தலில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது ஏன்? 7 நிமிடங்களில் துக்கமாக மாறிய கொண்டாட்டம் கொல்கத்தா துர்கா பூஜை பந்தலில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது ஏன்? 7 நிமிடங்களில் துக்கமாக மாறிய கொண்டாட்டம் October 18, 2026 அருண்ராஜூக்கே இந்த நிலையா.. ரோட்டில் மோதி கொண்ட தவெகவினர்.. தர்மசங்கடத்தில் முடிந்த நிகழ்ச்சி அருண்ராஜூக்கே இந்த நிலையா.. ரோட்டில் மோதி கொண்ட தவெகவினர்.. தர்மசங்கடத்தில் முடிந்த நிகழ்ச்சி October 18, 2026 காணொளி: சுரங்க பாதையில் தேங்கிய மழைநீரில் சிக்கிய கார் மீட்பு காணொளி: சுரங்க பாதையில் தேங்கிய மழைநீரில் சிக்கிய கார் மீட்பு October 18, 2026 சென்னையில் கனமழை: 'இது வழக்கமான நிகழ்வல்ல' – அடுத்தடுத்த நாட்களில் நிலைமை எப்படி மாறும்? சென்னையில் கனமழை: 'இது வழக்கமான நிகழ்வல்ல' – அடுத்தடுத்த நாட்களில் நிலைமை எப்படி மாறும்? October 18, 2026 "தனுஷ் அதிமுகவில் இணைந்தால் இருகரம் கூப்பி வரவேற்போம்"- அதிமுக ராஜேந்திர பாலாஜ பாலாஜி கூறியதென்ன? "தனுஷ் அதிமுகவில் இணைந்தால் இருகரம் கூப்பி வரவேற்போம்"- அதிமுக ராஜேந்திர பாலாஜ பாலாஜி கூறியதென்ன? October 18, 2026 'சோர்வு என்றே நினைத்தோம்' – குழந்தைகளிடம் எளிதில் கவனிக்க தவறக்கூடிய 4 புற்றுநோய் அறிகுறிகள் 'சோர்வு என்றே நினைத்தோம்' – குழந்தைகளிடம் எளிதில் கவனிக்க தவறக்கூடிய 4 புற்றுநோய் அறிகுறிகள் October 18, 2026

See all 704 in TamilNews →

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *