விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த வடிவேலு – பவானி தம்பதிக்கு விஜயலட்சுமி, ஹேமலதா என இரண்டு மகள்கள். மூத்த மகள் சென்னையில் தங்கி டிப்ளமோ நர்சிங் படித்து வரும் நிலையில், ஹேமலதா அதே பகுதியிலுள்ள அரசுப் பள்ளியில் இரண்டாம் வகுப்புப் படித்து வந்தார். கடந்த அக்டோபர் 11-ம் தேதி சிறுமி ஹேமலதாவுக்குப் பிறந்தநாள்.

அதனால் அக்கம்பக்கத்தில் இருந்த நண்பர்கள் வீட்டுக்குச் சென்ற ஹேமலதா, `இன்னைக்கு எனக்கு ஹேப்பி பர்த்டே, கேக் வெட்டப் போறேன் வாங்க’ என்று சிரித்துக் கொண்டே ஆசையாக அழைத்திருக்கிறார். அதன்படி அன்றைய தினம் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பிறந்தநாளைக் கொண்டாடிய ஹேமலதா, இரவு உணவை முடித்துவிட்டு வீட்டிற்குள் தன்னுடைய தாயுடன் தூங்கினார்.

சிறுமியின் தாயிடம் போலீஸார் விசாரணை

மறுநாள் 12 ஆம் தேதி காலையில் எழுந்த தாய் பவானி, அருகில் தூங்கிக் கொண்டிருந்த மகளைக் காணவில்லை என்றதும் குழப்பமானார். கிராமத்திலுள்ள குழந்தைகள் சர்வசாதாரணமாக அக்கம்பக்கத்து வீடுகளுக்குச் செல்வார்கள் என்றாலும், அவ்வளவு அதிகாலையில் சென்றிருக்க வாய்ப்பில்லை என்பதால் சிறுமியின் பெயரைச் சொல்லி வீட்டைச் சுற்றித் தேடினார்கள் பெற்றோர்.

அதன்பிறகு சிறுமி வழக்கமாகச் செல்லும் அக்கம்பக்கத்து வீடுகளில் விசாரித்த அவர்கள், ஊர் முழுவதும் தேட ஆரம்பித்தனர். ஆனால் மாயமான ஹேமலதா குறித்து எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. முதல் நாள் மகிழ்ச்சியாக பிறந்தநாளைக் கொண்டாடிய சிறுமி மறுநாளே காணாமல் போனதால், அதிர்ச்சியில் உறைந்தது கிராமம்.

அதையடுத்து வடிவேல் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த சத்தியமங்கலம் போலீஸார், சிறுமியைத் தேட ஆரம்பித்தனர். ஆனால் முதல் நாள், இரண்டாவது நாள் என அடுத்தடுத்த நாட்களிலும் சிறுமி குறித்த எந்தத் தகவலும் இல்லாததால் `அலெர்ட்’ ஆனது விழுப்புரம் மாவட்டக் காவல்துறை. நான்கு டி.எஸ்.பிக்கள் தலைமையில் சுமார் 200 போலீஸார்கள் கொண்ட 8 தனிப்படைகள் அமைத்து தேடப்பட்டது.

அதேபோல கோட்டக்குப்பம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மற்றும் டிரோன்கள் உதவியுடன், அந்த கிராமங்களைச் சுற்றியிருக்கும் கிணறு உள்ளிட்ட நீர்நிலைகளில் சிறுமி சிக்கியிருக்கிறாரா என்று ஆய்வு செய்யப்பட்டது. மோப்ப நாய்கள் உதவியுடன் கிராமத்தின் அனைத்து வீடுகளிலும் சோதனை செய்யப்பட்டது.

சிறுமியின் தாய்

அத்துடன் சிறுமியின் பெற்றோர், உறவினர்கள் உள்ளிட்டவர்களுடன், அந்தப் பகுதியைச் சுற்றியிருக்கும் சரித்திரப் பதிவேட்டுக் குற்றவாளிகள் என அனைவரையும் விசாரித்தனர் போலீஸார். அதையடுத்து சிறுமி குறித்த தகவல் தெரிந்தவர்கள், தகவல் அளிக்கலாம் என்று செல்போன் எண்களையும் வெளியிட்டனர். ஆனால் சிறுமி குறித்த எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில்தான் சிறுமி விவகாரத்தில் மெத்தனம் காட்டும் காவல்துறையைக் கண்டித்து போராட்டத்தை அறிவித்த தி.மு.க, வழக்கை சி.பி.சி.ஐ.டி பிரிவுக்கு மாற்ற வேண்டும் என்று அழுத்தம் கொடுத்தது. அதையடுத்து கடந்த அக்டோபர் 21-ம் தேதி இரவு வழக்கை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றி உத்தரவிட்டார் தமிழகக் காவல்துறை டி.ஜி.பி மகேஷ்குமார் அகர்வால்.

அதற்கு மறுநாளே சி.பி.சி.ஐ.டி எஸ்.பி.ஜவஹர், டி.எஸ்.பி கீதா, இன்ஸ்பெக்டர் ரேவதி உள்ளிட்டவர்கள் ஆலம்பூண்டி கிராமத்தில் ஆஜரானார்கள். சிறுமியின் பெற்றோர் உட்பட காவல்துறை விசாரணை செய்த அனைவரிடமும் மீண்டும் விசாரணையை மேற்கொண்டனர் சி.பி.சி.ஐ.டி போலீஸார்.

அதையடுத்து காவல்துறையால் ஏற்கெனவே விசாரிக்கப்பட்ட சரித்திரப் பதிவேட்டுக் குற்றவாளி ராஜதுரை என்பவரை தூக்கிய போலீஸார், அவரை சிறுமி படித்த பள்ளி மற்றும் சுடுகாட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று விசாரணை செய்தனர். ஆனால் அதிலும் எந்தத் தகவலும் கிடைக்காததால் அவர் திருப்பி அனுப்பப்பட்டார். இதற்கிடையில் தி.மு.க.வும், அ.தி.மு.க-வும் காவல்துறையை மற்றும் த.வெ.க அரசைக் கண்டித்து தனித்தனியாகப் போராட்டங்களை நடத்தின.

காவல்துறை வெளியிட்ட போஸ்டர்கள்

அதேபோல முன்னாள் முதல்வர்கள் ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் சிறுமி விவகாரத்தைக் கையிலெடுக்க, தமிழக அளவில் முக்கியத்துவம் பெற்றது இந்த வழக்கு. அதனால் ஏற்பட்ட அழுத்தத்தின் காரணமாக, காவல்துறையால் விசாரிக்கப்பட்டவர்களை மீண்டும் மீண்டும் விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றனர் சி.பி.சி.ஐ.டி போலீஸார்.

இதற்கிடையில் காஞ்சிபுரம் டி.எஸ்.பி வேல்முருகன் உள்ளிட்ட 5 மாவட்டங்களைச் சேர்ந்த சி.பி.சி.ஐ.டி போலீஸார் நேற்று முதல் கூடுதலாகக் களமிறக்கப்பட்டிருக்கின்றனர். இந்த நிலையில் இன்று, “சிவன் கோயிலில் என் மகள் எங்கு இருக்கிறாள் என்று பூ போட்டுப் பார்த்தோம். அதில் வெள்ளைப் பூ வந்திருக்கிறது. அதனால் என் மகள் கண்டிப்பாக உயிருடன் எங்களிடம் திரும்பி வருவாள். இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் நல்ல செய்தி வரும் என்று போலீஸார் நம்பிக்கையாக கூறியிருக்கின்றனர்” என்றார் நம்பிக்கையுடன்.

More in TamilNews
“தேவையற்ற வதந்திகள்.. "- கொளத்தூர் எம்.எல்.ஏ வி.எஸ் பாபு உடல்நிலை குறித்து அமைச்சர் மரிய வில்சன் “தேவையற்ற வதந்திகள்.. "- கொளத்தூர் எம்.எல்.ஏ வி.எஸ் பாபு உடல்நிலை குறித்து அமைச்சர் மரிய வில்சன் October 28, 2026 "திருநீறு, ருத்ராட்சையுடன் திருவள்ளுவர் ஓவியம்; திருப்பரங்குன்றம் விவகாரத்திலும்..!"- வானதி கோரிக்கை "திருநீறு, ருத்ராட்சையுடன் திருவள்ளுவர் ஓவியம்; திருப்பரங்குன்றம் விவகாரத்திலும்..!"- வானதி கோரிக்கை October 28, 2026 அன்பில் மகேஸ் கைது; பெண் தொழிலதிபர் வீட்டில் ரெய்டு – பின்னணி என்ன? அன்பில் மகேஸ் கைது; பெண் தொழிலதிபர் வீட்டில் ரெய்டு – பின்னணி என்ன? October 28, 2026 'ஒன்றிய அரசின் பாதையில் தவெக அரசு பயணிப்பதில் எங்களுக்கு உடன்பாடில்லை..!'- சிபிஐ வீரபாண்டியன் பேட்டி 'ஒன்றிய அரசின் பாதையில் தவெக அரசு பயணிப்பதில் எங்களுக்கு உடன்பாடில்லை..!'- சிபிஐ வீரபாண்டியன் பேட்டி October 28, 2026 சோப்பு நுரை: “என்னை எப்படியெல்லாம் கிண்டல் பண்ணீங்க இப்போ எங்கே போனீங்க" – செல்லூர் ராஜூ கலகல சோப்பு நுரை: “என்னை எப்படியெல்லாம் கிண்டல் பண்ணீங்க இப்போ எங்கே போனீங்க" – செல்லூர் ராஜூ கலகல October 28, 2026 “மின் மயானத்திற்கு வருபவர்கள் ஜெனரேட்டரையும் உடன் கொண்டு வரணுமா?" – டிடிவி தினகரன் “மின் மயானத்திற்கு வருபவர்கள் ஜெனரேட்டரையும் உடன் கொண்டு வரணுமா?" – டிடிவி தினகரன் October 28, 2026

See all 592 in TamilNews →

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *