“பெத்த பிள்ளைகளே கைவிட்டுட்டாங்க… வயசான காலத்துல எங்களை யார் பார்த்துப்பாங்க?” என்று கண்ணீருடன் நிற்கும் பெற்றோரைப் பார்த்திருக்கிறோம். வயதான காலத்தில் உணவுக்கும் மருந்துக்கும் பிறரை எதிர்பார்க்கும் பெற்றோரின் வேதனை இது. வயதான பெற்றோரைப் பராமரிக்க வேண்டியது பிள்ளைகளின் கடமை; அதைச் செய்யத் தவறினால், சட்டம் என்ன சொல்கிறது?
சட்டப்படி, பராமரிப்பு என்பது மாதந்தோறும் பணம் கொடுப்பது மட்டுமல்ல. உணவு, உடை, தங்குமிடம், மருத்துவ உதவி மற்றும் சிகிச்சை ஆகியவையும் பராமரிப்பில் அடங்கும்.
*பெற்றோரைப் பராமரிப்பது சட்டப்படியான கடமை!*
பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்களின் பராமரிப்பு மற்றும் நலச் சட்டம், 2007 (Maintenance and Welfare of Parents and Senior Citizens Act, 2007) மற்றும் தமிழ்நாடு பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நல விதிகள், 2009 ஆகியவை பெற்றோரின் பராமரிப்பு உரிமைகளைப் பாதுகாக்கின்றன.
பிரிவு 2(h)-ன்படி, 60 வயது நிறைவடைந்த இந்தியக் குடிமக்களே ‘மூத்த குடிமக்கள்’. ஆனால், பிரிவு 2(d)-ன்படி, உயிரியல் பெற்றோர், தத்தெடுத்த பெற்றோர், மாற்றாந்தந்தை, மாற்றாந்தாய் ஆகியோரும் ‘பெற்றோர்’ என்ற வரையறைக்குள் வருகிறார்கள். இந்த வரையறையின்படி, பெற்றோர் மூத்த குடிமக்களாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. எனவே, பெற்றோர் என்ற அடிப்படையில் பராமரிப்புத் தொகை கோர 60 வயது கட்டாயமில்லை.
பிரிவு 4-ன்படி, தங்களுடைய வருமானம் அல்லது சொத்திலிருந்து கிடைக்கும் வருவாயைக் கொண்டு தங்களைப் பராமரித்துக்கொள்ள முடியாத பெற்றோர், வயது வந்த பிள்ளைகளிடம் பராமரிப்புத் தொகை கோரலாம். பெற்றோரின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து அவர்கள் இயல்பான வாழ்க்கை வாழ்வதற்குத் தேவையான பராமரிப்பை வழங்க வேண்டியது பிள்ளைகளின் கடமை.

*மகளுக்கும் பொறுப்பு உண்டு!*
“மகன்தான் பெற்றோரைப் பார்த்துக்கொள்ள வேண்டும்; மகளுக்குத் திருமணமாகிவிட்டால் அவர்களுக்குப் பொறுப்பு இல்லை” என்று சிலர் நினைக்கிறார்கள். அது தவறு!
இந்தச் சட்டத்தின் பிரிவு 2(a)-ன்படி, மகன், மகள், பேரன், பேத்தி ஆகியோர் ‘பிள்ளைகள்’ என்ற வரையறையில் அடங்குவர். சிறார்கள் இதில் சேர்க்கப்படுவதில்லை. திருமணமான மகளாக இருந்தாலும், அவருக்குச் சொந்தமாகப் போதுமான வருமானம் இருக்கும் பட்சத்தில், சட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு, பெற்றோரைப் பராமரிக்கும் பொறுப்பு உண்டு.
இதுதொடர்பாக, Dr. (Mrs.) Vijaya Manohar Arbat v. Kashirao Rajaram Sawai (1987) என்ற வழக்கில்,பழைய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 125-ன் கீழ், திருமணமான மகளிடமிருந்தும் பெற்றோர் பராமரிப்புத் தொகை கோரலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
மகளுக்குச் சொந்தமாகப் போதுமான வருமானம் இருக்க வேண்டும்; பெற்றோரால் தங்களைப் பராமரித்துக்கொள்ள முடியாத நிலையும் இருக்க வேண்டும் என்பதையும் நீதிமன்றம் குறிப்பிட்டது.
*எவ்வளவு பராமரிப்புத் தொகை பெறலாம்?*
பெற்றோர் பராமரிப்புத் தொகை கோரி பிரிவு 5-ன்படி பராமரிப்பு தீர்ப்பாயத்தில் (Maintenance Tribunal) விண்ணப்பிக்கலாம்.
ஒரு குடும்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பிள்ளைகள் இருந்தால், அவர்களில் ஒருவரிடம் மட்டுமல்லாமல், ஒன்றுக்கு மேற்பட்ட பிள்ளைகளுக்கு எதிராகவும் விண்ணப்பிக்கலாம். இதற்கான சட்ட அடிப்படை பிரிவு 5(5)-ல் உள்ளது. ஆனால், எல்லாப் பிள்ளைகளும் சமமான தொகையைச் செலுத்த வேண்டும் என்று தானாகவே முடிவு செய்ய முடியாது; ஒவ்வொருவரின் வருமானம் உள்ளிட்ட தொடர்புடைய சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு தீர்ப்பாயம் பராமரிப்புத் தொகையை நிர்ணயிக்கும்.
பிரிவு 9-ன்படி, பெற்றோரின் பராமரிப்புத் தேவைகளைக் கருத்தில் கொண்டு, தீர்ப்பாயம் மாதாந்திரப் பராமரிப்புத் தொகையை நிர்ணயிக்கலாம். தமிழ்நாடு விதி 15-ன்படி, மாதாந்திரப் பராமரிப்புத் தொகை அதிகபட்சம் ₹10,000 வரை மட்டுமே நிர்ணயிக்கப்படலாம்.
மேலும், பிள்ளையின் அனைத்துவிதமான மாத வருமானத்தையும் அவரது குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையால் வகுத்துக் கிடைக்கும் தொகையைவிட அதிகமாக இருக்கக் கூடாது. இதில் பராமரிப்புத் தொகை கோரும் பெற்றோரும் கணக்கில் சேர்க்கப்படுவார்கள்.
இது அனைவருக்கும் ₹10,000 கிடைக்கும் என்று அர்த்தமல்ல. பெற்றோரின் அடிப்படைத் தேவைகள், பிள்ளையின் வருமானம், குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட தொடர்புடைய அம்சங்களைக் கருத்தில் கொண்டே தொகை நிர்ணயிக்கப்படும்.
பெற்றோர் நேரடியாக விண்ணப்பிக்க முடியாத சூழ்நிலைகளில், அவர்கள் அங்கீகரித்த வேறு நபர் அல்லது பதிவு செய்யப்பட்ட அமைப்பின் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். தீர்ப்பாயம் தானாகவும் இந்தப் பிரச்னையை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளலாம். விண்ணப்பம் நிலுவையில் இருக்கும்போது, பிரிவு 5(2)-ன்படி இடைக்காலப் பராமரிப்புத் தொகையையும் கோர முடியும்.
*உத்தரவை மதிக்காவிட்டால் என்ன நடக்கும்?*
தீர்ப்பாயம் பராமரிப்புத் தொகை வழங்க உத்தரவிட்ட பிறகும், போதுமான காரணமின்றி பிள்ளைகள் அந்தத் தொகையைச் செலுத்தத் தவறினால், பிரிவு 5(8)-ன்படி வசூல் நடவடிக்கை எடுக்கப்படலாம்.

முதலில், செலுத்தப்படாத தொகையை அபராதத் தொகையை வசூலிப்பதற்கான நடைமுறையில் வசூலிக்கத் தீர்ப்பாயம் வாரண்ட் பிறப்பிக்கலாம். வாரண்ட் மூலம் வசூல் நடவடிக்கை மேற்கொண்ட பிறகும் தொகை செலுத்தப்படாமல் இருந்தால், செலுத்தப்படாத மாதாந்திரத் தொகை தொடர்பாக அதிகபட்சம் ஒரு மாதம் வரை சிறைத்தண்டனை விதிக்கவும் தீர்ப்பாயத்திற்கு அதிகாரம் உண்டு. தொகை செலுத்தப்பட்டால் அதற்கு முன்பே சிறைத்தண்டனை முடிவடையும்.
தொகை செலுத்த வேண்டிய தேதியிலிருந்து மூன்று மாதங்களுக்குள், அதை வசூலிப்பதற்கான விண்ணப்பத்தைத் தீர்ப்பாயத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
*சொத்தை எழுதிக் கொடுத்துவிட்டு ஏமாந்துவிட்டீர்களா?*
பிரிவு 23-ன்படி, 60 வயது நிறைவடைந்த மூத்த குடிமக்கள், இந்தச் சட்டம் அமலுக்கு வந்த பிறகு, தங்களுடைய சொத்தை அன்பளிப்பாகவோ அல்லது வேறு வகையிலோ மாற்றிக் கொடுத்திருக்க வேண்டும். அவ்வாறு மாற்றிக் கொடுக்கும்போது, சொத்தைப் பெற்றவர் தங்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளையும் உடல் தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும் என்ற நிபந்தனை இருந்திருக்க வேண்டும். ஆனால், சொத்தைப் பெற்றவர் அந்த நிபந்தனையை நிறைவேற்ற மறுத்தாலோ தவறினாலோ, குறிப்பிட்ட சட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு அந்தச் சொத்து மாற்றத்தைச் செல்லாததாக அறிவிக்கக் கோரலாம்.
இதற்காக மூத்த குடிமக்கள் பராமரிப்புத் தீர்ப்பாயத்தை அணுக வேண்டும். சொத்து மாற்றம் தானாகவே ரத்தாகிவிடாது; மூத்த குடிமக்களின் விருப்பத்தின் பேரில், உரிய நிபந்தனைகள் பூர்த்தியாகியுள்ளதா என்பதை ஆராய்ந்து தீர்ப்பாயம் அந்த மாற்றத்தைச் செல்லாததாக அறிவிக்கலா.
எங்கே விண்ணப்பிக்க வேண்டும்?
பெற்றோர் வசிக்கும் பகுதியின் அதிகார வரம்புக்குட்பட்ட பராமரிப்புத் தீர்ப்பாயத்தை (Maintenance Tribunal) அணுகி விண்ணப்பிக்கலாம். தமிழ்நாட்டில் மாவட்ட அளவில் நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் மூலம் இந்தச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பெற்றோர் நேரடியாகச் செல்ல முடியாத நிலையில், சட்டம் அனுமதிக்கும் அங்கீகரிக்கப்பட்ட நபர் அல்லது அமைப்பின் உதவியையும் பெறலாம்
*பெற்றோரைப் பராமரிப்பது அன்பின் வெளிப்பாடு மட்டுமல்ல; சட்டமும் அதற்குப் பாதுகாப்பு வழங்குகிறது. பெற்றோரின் உரிமைகள் புறக்கணிக்கப்படும்போது, அவர்களுக்குத் துணையாக நிற்கச் சட்டம் இருக்கிறது!
பயிற்சி பெண் மருத்துவரிடம் பாலியல் அத்துமீறல்? DYFI போராட்டம்; அரசு டாக்டர் கைதான பின்னணி என்ன?
November 15, 2026
விஜயபாஸ்கரால் விஜய்க்கு நெருக்கடி.. பிடியை இறுக்கும் ஈடி! 2வது முறையாக பறந்த சம்மன்! பரபர பாலிடிக்ஸ்
November 15, 2026
சிக்கல் சிங்கார வேலவர் கோயிலில் சக்திவேல் வாங்கும் நிகழ்வு! முருகன் திருமேனியெங்கும் வியர்வை!
November 15, 2026
"நான் சாகல".. கொலையான 8ம் ஆண்டில் உயிருடன் வந்த பெண்.. அப்பாவியை சிறையிலடைத்த போலீசுக்கு ஷாக்.. செல்போனால் வந்த வினை
November 15, 2026
உ.பியிலும் வேலையை காட்டும் ராகுல் காந்தி! சீட் பிரிப்பதில்.. அகிலேஷை டென்ஷனாக்குகிறது காங்கிரஸ்!
November 15, 2026
பாகிஸ்தானில் இருந்து விரிக்கப்பட்ட வலை.. காதல் மயக்கத்தில் ரயில் தண்டவாளத்தை தகர்த்த இருவர் கைது!
November 15, 2026
பயிற்சி பெண் மருத்துவரிடம் பாலியல் அத்துமீறல்? DYFI போராட்டம்; அரசு டாக்டர் கைதான பின்னணி என்ன?
November 15, 2026
விஜயபாஸ்கரால் விஜய்க்கு நெருக்கடி.. பிடியை இறுக்கும் ஈடி! 2வது முறையாக பறந்த சம்மன்! பரபர பாலிடிக்ஸ்
November 15, 2026
சிக்கல் சிங்கார வேலவர் கோயிலில் சக்திவேல் வாங்கும் நிகழ்வு! முருகன் திருமேனியெங்கும் வியர்வை!
November 15, 2026
"நான் சாகல".. கொலையான 8ம் ஆண்டில் உயிருடன் வந்த பெண்.. அப்பாவியை சிறையிலடைத்த போலீசுக்கு ஷாக்.. செல்போனால் வந்த வினை
November 15, 2026
உ.பியிலும் வேலையை காட்டும் ராகுல் காந்தி! சீட் பிரிப்பதில்.. அகிலேஷை டென்ஷனாக்குகிறது காங்கிரஸ்!
November 15, 2026
பாகிஸ்தானில் இருந்து விரிக்கப்பட்ட வலை.. காதல் மயக்கத்தில் ரயில் தண்டவாளத்தை தகர்த்த இருவர் கைது!
November 15, 2026