பசுபதியை கஜேந்திரனின் ஆட்கள் துரத்திக் கொண்டிருக்கிறார்கள். பசுபதி பயத்துடன் மூச்சிரைக்க ஓடிக்கொண்டிருக்கிறான். அதுவொரு பரபரப்பான சேஸிங் காட்சி. ஏதேதோ குழப்பமான பின்னணி இசை கேட்டுக் கொண்டிருக்கிறது. எங்கோ டீக்கடையில், ‘பருவமே புதிய பாடல் பாடு’ கேட்கிறது. புறாவின் இறக்கைகள் படபடக்கின்றன. துப்பாக்கி வெடிக்கும் ஓசை. ஆனால், ஒரு சேஸிங் காட்சிக்கு இப்படி ஒரு பின்னணி இசை நமக்குப் பழக்கப்படவேயில்லை.

பசுபதி ஓடிக்கொண்டே சிந்திக்கிறான், ஒரு முடிவுக்கு வருகிறான். இப்போது பின்னணியில் மிக அழகானதொரு ரொமாண்டிக் இசை வருகிறது. காதலனைப் பார்த்து காதலி வெட்கப்படும் காட்சிக்குப் பொருத்தமாக இருப்பதைப் போலான ஓர் இசை! கஜேந்திரனின் ஆட்கள் துரத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள், பசுபதி இன்னும் ஓடிக்கொண்டுதான் இருக்கிறான். என்னதான் நடக்கிறது இங்கே?

ஆரண்ய காண்டம் |  `சினி'ஸ்கோப் 23
ஆரண்ய காண்டம் | `சினி’ஸ்கோப் 23

ஆரண்ய காண்டம் வெளியான நாளிலிருந்து இது தமிழின் முதல் நியோ நாய்ர் (Neo-Noir) சினிமா என்று விமர்சகர்களாலும், பிரபல சினிமா கலைஞர்களாலும் கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கிறது. நியோ நாய்ர் சினிமா என்றால் என்ன?

நீண்ட காலமாக நாம் இரண்டு சொல்லாடல்களைப் பயன்படுத்தி வருகிறோம். கமர்ஷியல் சினிமா மற்றும் ஆர்ட் சினிமா. இந்த இரண்டுக்கும் இடையே நமக்கு வித்தியாசம் தெரியும். ஆர்ட் சினிமா என்றால், தண்ணீர் தண்ணீர், வீடு, சந்தியாராகம் போன்ற படங்கள் நினைவுக்கு வருகின்றன. புதிய படங்கள் என்று எடுத்துக்கொண்டாலும் டு லெட், மேற்குத் தொடர்ச்சிமலை, கூழாங்கல், கொட்டுக்காளி போன்றவற்றை அறிந்திருக்கிறோம். இவற்றைத் தவிர மற்ற எல்லாமே நமக்குக் கமர்ஷியல் சினிமாதான்.

உண்மையில் சினிமா இந்த இரண்டு வகைகளுக்குள் மட்டும் அடங்கிவிடுவதில்லை. வகைமை (Genre), வடிவம் (Form), பாணி (Style), அணுகுமுறை (Mode), இயக்கம் (Movement) என பல தளங்களில் விரிவாக இயங்கக் கூடியது சினிமா எனும் கலை. அதனால்தான் சில மூத்தக் கலைஞர்கள் சினிமாவை கமர்ஷியல் சினிமா, ஆர்ட் சினிமா என்று பிரிப்பதை ஏற்றுக்கொள்வதில்லை.

செட்களிலும், ஸ்டுடியோக்களிலும் எடுக்கப்பட்டுக்கொண்டிருந்த சினிமாவை பாரதிராஜா வெளியே கொண்டு வந்தார். அது உண்மையில் படமெடுக்கும் லொகேஷனை மட்டும் மாற்றவில்லை, சினிமாவின் வடிவம், உள்ளடக்கம், பாணி என அனைத்தையுமே மாற்றியது. அதுவொரு பெரிய பாதிப்பு. மகேந்திரன், பாலுமகேந்திரா போன்றோரும் அதை முன்னெடுத்தார்கள். அது ஒரு புதிய அலை (New Wave Cinema) ஆனது. அதனால் அதை ஓர் இயக்கம் (Movement) என்றும் குறிப்பிடலாம்.

ஆரண்ய காண்டம் |  `சினி'ஸ்கோப் 23
ஆரண்ய காண்டம் | `சினி’ஸ்கோப் 23

இப்படித்தான் அவர்களுக்குப் பின்னால், மணிரத்னம், பாலா, வெற்றிமாறன், மிஷ்கின், தியாகராஜன் குமாரராஜா போன்றோர் அவரவர் காலகட்டங்களில் பல்வேறு வகைகளில் சிறிதாகவும், பெரிதாகவும் புதிய அலைகளை உருவாக்கினார்கள். வடிவங்களில் பெரிய மாற்றங்கள் நிகழவில்லை எனினும், புதிய பாணிகளையும், கதைச் சொல்லும் முறைகளையும் கொண்டுவந்தார்கள். நியோ நாய்ர் என்பது ஒரு பாணி. ஆரண்யகாண்டம் ஒரு நியோ நாய்ர் சினிமா மட்டுமல்ல, அதன் அணுகுமுறையும் தமிழுக்குப் புதிதாக இருந்தது. அதே நேரம் கூழாங்கல், கொட்டுக்காளி போல அது ஒரு யதார்த்த சினிமா (Realistic Cinema) என்றும் சொல்லிவிட முடியாது.

கதை சொல்லும் அணுகுமுறையிலும் (Mode: Poetic Narration), பாணியிலும் (Style: Neo-Noir) தனித்தன்மையைக் கொண்டிருந்த ஒரு கமர்ஷியல் சினிமா (Impact: New Wave) என்று ஆரண்யகாண்டத்தை நம்மால் குறிப்பிட முடியும். நாய்ர் என்ற பிரஞ்சு சொல், இருள் எனும் பொருள்படுகிறது. ஆரண்யகாண்டத்தில் பல காட்சிகள் இருளிலேயே நடக்கின்றன. பல காட்சிகளில் கேரக்டர்களின் முகங்கள் நமக்குத் தெளிவாகக் காட்டப்படுவதில்லை. ஆனால், இருளில் எடுக்கப்படுவதால் ஒரு படம் நியோ நாய்ர் சினிமாவாகிவிடாது. மாறாக இந்தப் படங்கள், ஒரு கதாபாத்திரத்தை நல்லவன், கெட்டவன் என்று வகைப்படுத்துவதில்லை. யார் மீதும் முழு வெளிச்சத்தைப் படரவிடுவதில்லை. எல்லா கதாபாத்திரங்களுக்குள்ளும் இருக்கும் இருண்மையை பேசு பொருளாக்குகின்றன.

நல்லவனுக்கு நல்லது நடக்கும், கெட்டவனுக்குக் கெட்டது நடக்கும் எனும் நீதி வரையறைக்குள் இவை நிற்பதில்லை. இங்கே யாருக்கும் எதுவும் நடக்கும்! நடிகர்களின் முகங்களும், கண்களும் பளீரெனத் தெரிய வேண்டும், அப்போதுதான் அந்தப் பாத்திரத்தின் மனநிலையை நாம் அறிந்துகொள்ள முடியும். ஆனால், இங்கே அது தெரியக்கூடாது என்பதற்காகவே வழக்கமான குளோஸப் காட்சிகளும் இருப்பதில்லை, இருளும் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.

ஆரண்ய காண்டம் |  `சினி'ஸ்கோப் 23
ஆரண்ய காண்டம் | `சினி’ஸ்கோப் 23

இந்தப் படத்தில், சிங்கபெருமாள் எனும் ஒரு கேங்ஸ்டரிடம் வேலை செய்யும் பசுபதி, தனியே வேலை செய்ய ஆசைப்பட்டு சிங்கபெருமாளிடமே பண உதவி கேட்கிறான். வெளித்தோற்றத்துக்குச் சம்மதிக்கும் சிங்கபெருமாள், பசுபதியைக் கொல்லவும் ஆட்களை அனுப்புகிறான். எதிர் கேங்ஸ்டர் குழுவான கஜேந்திரனுக்குச் சேர வேண்டிய போதைப் பொருளை வைத்திருந்த ஆள் எதிர்பாராத விதமாக இறந்துபோய்விட, பொருள் காளையன், கொடுக்காப்புளி எனும் இரண்டு அப்பாவிகளின் கைக்குப் போகிறது.

இந்தக் குழப்பத்தில் கஜேந்திரனும் பசுபதியைக் குறி வைக்கிறான். இப்படி சகல திசைகளிலும் சிக்கலில் மாட்டிக்கொள்ளும் பசுபதி, இந்தச் சிக்கலிலிருந்து எப்படி மீண்டான், கடத்தப்பட்ட அவனது மனைவி கஸ்தூரியை எப்படிக் காப்பாற்றினான் என்பது கதை! இப்படியொரு கமர்ஷியல் ஆக்சன் திரில்லர் கதைதான், நாம் இதுவரை பார்த்திராத புதிய பாணியில் சொல்லப்பட்டிருக்கிறது.

பசுபதியாக சம்பத்ராஜ் நடித்திருந்தார். தென்னிந்திய மொழிப் படங்களில் ஒரு தேர்ந்த குணச்சித்திர நடிகராக வலம் வரும் சம்பத்துக்கு இந்தப் படம் குறிப்பிடத்தகுந்த ஒன்றாக அமைந்தது. 1980-களிலிருந்து பிரபலமான இந்தி நடிகராக விளங்கிவரும் ஜாக்கி ஷெராஃப் நடித்த முதல் தமிழ்ப் படம் இது. சிங்கபெருமாள் கதாபாத்திரத்தில் வித்தியாசமான நடிப்பை அவர் வெளிப்படுத்தியிருந்தார்.

சப்பையாக ரவி கிருஷ்ணா, சுப்புவாக யாஸ்மின், கஜேந்திரனாக பாக்சர் ஆறுமுகம், கஜபதியாக தீனா ஆகியோர் நடித்திருந்தார்கள். கூத்துப்பட்டறைக் கலைஞரான குரு சோமசுந்தரம் காளையன் பாத்திரத்தில் இந்தப் படத்தின் மூலமாக சினிமாவுக்கு அறிமுகமானார். இடம் பொருள் ஏவல் உணராது, வெள்ளந்தியாக பேசிக்கொண்டு திரியும் காளையன் பாத்திரத்துக்கு ஒரு தனித்தன்மையைக் கொடுத்தார் குரு சோமசுந்தரம்.

ஆரண்ய காண்டம் |  `சினி'ஸ்கோப் 23
ஆரண்ய காண்டம் | `சினி’ஸ்கோப் 23

உயிருக்குப் பயந்து ஓடிக்கொண்டிருக்கும் போது கூட பசுபதியால் சிந்திக்க முடிகிறது. ’புத்தனுக்குப் போதிமரம் போல, ஒரு கேங்ஸ்டருக்கு சேஸிங்’ என்று சொல்கிறான். இது பொதுவாக சாத்தியமில்லாத ஒன்று. ஒருவேளை யாருக்கோ சாத்தியப்படவும் செய்யலாம். ‘கஸ்தூரி ஆபத்திலிருக்கிறாள். சரக்கைக் காணவில்லை. சிங்கபெருமாள் நம்மைக் கொலை செய்யப்பார்க்கிறான். எதிரிக்கு எதிரி நண்பன், பேசாமல் கஜேந்திரனோடு சேர்ந்துவிடலாம் என்றால் அவனது ஆட்களும் நம்மைத் துரத்திக்கொண்டிருக்கிறார்கள். என்னதான் நடக்கிறது’ என்று சிந்திக்கத் தொடங்குகிறான் பசுபதி.

ஓடிக்கொண்டிருக்கும் போதே அதிலிருந்து தப்பிக்க ஒரு திட்டமும் அவன் மனதுக்குள் தயாராகிறது. அதனால்தான் அந்த மெலோடி இசை வருகிறது. நடக்கும் காட்சிக்குப் பொருத்தமான இசையைக் கேட்டே நாம் பழகியிருக்கிறோம். ஆனால், அது பசுபதி எனும் ஆளின் மனதுக்குள் நடக்கும் சிந்தனைக்குப் பொருத்தமான இசை அது.

இசை யுவன்ஷங்கர் ராஜா. படத்துக்காக முதலில் ஓரிரு பாடல்கள் திட்டமிடப்பட்டு, பின்னர் கைவிடப்பட்டன. சுப்பு இறந்துபோவதான படத்தின் முடிவும் பின்னர் மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது. இந்த முடிவுகள் இந்தப் படத்தின் இன்றைய கல்ட் கிளாஸிக் தன்மைக்கு மிக முக்கியமான காரணமாக அமைந்தன என்றும் சொல்லலாம். மிகக்குறைவான இடங்களில் மட்டுமே பின்னணி இசை சேர்க்கப்பட்டிருந்தது. பெரும்பாலும் சூழல் ஒலிகளும், ரெட்ரோ பாடல்களும் பயன்படுத்தப்பட்டிருந்தன. ரெட்ரோ பாடல்களைப் பெருமளவு பயன்படுத்தும் நுணுக்கத்தை, இந்தப் படம் தொடங்கி வைத்தது.

ஒளிப்பதிவு பி.எஸ்.வினோத். இசை மட்டுமல்ல, ஒளிப்பதிவும் முழுக்க இயக்குநருக்கான ரசனை எல்லைகளுக்குள்ளாகவே இயங்கியிருந்தது. பசுபதி சேஸிங், கிளைமாக்ஸ் சண்டைக் காட்சி உட்பட்ட பல காட்சிகளில், கேமராக் கோணங்கள் வழக்கமானதாக இல்லை. ஏராளமான டட்ச் ஆங்கிள், எக்ஸ்ட்ரீம் லோ ஆங்கிள்- ஹை ஆங்கிள் கோணங்கள், ரிவர்ஸ் ஷாட்ஸ், அவுட் ஆஃப் போகஸ் ஷாட்கள், ஓவர் எக்ஸ்போஸ்டு ஷாட்கள் என எல்லாம் சேர்ந்து பார்வையாளர்களைத் திரைக்குள் கொண்டு செல்ல வைக்கும் முயற்சியைச் செய்தன. ஆனால், இசை நம்மைத் தடுத்து வெளியே நிறுத்திவைத்தது. பார்வையாளரை ஒரு காண்ட்ராஸ்ட்டான இருமைக்குள் அலைபாய வைக்கும் நுணுக்கம். அது இயக்குநரின் தேர்வு. அதுதான் அவரின் கதை சொல்லும் அணுகுமுறை!

ஆரண்ய காண்டம் |  `சினி'ஸ்கோப் 23
ஆரண்ய காண்டம் | `சினி’ஸ்கோப் 23

கேபிடல் ஃபிலிம் ஒர்க்ஸ் சார்பில் படத்தைத் தயாரித்திருந்தது எஸ்.பி.சரண். கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருந்தவர் தியாகராஜன் குமாரராஜா. இவருக்கு இது முதல் படம். சிறந்த படம், சிறந்த படத்தொகுப்பு மற்றும் சிறந்த அறிமுக இயக்குநர் என மூன்று தேசிய விருதுகளை ஆரண்யகாண்டம் பெற்றது. ஆரண்யகாண்டத்துக்குப் பின்னர், 8 ஆண்டுகள் கழித்து 2019-ல் சூப்பர் டீலக்ஸ் எனும் ஒரு படத்தை இயக்கினார் தியாகராஜன். அடுத்து 8 ஆண்டுகள் கழித்து இப்போது பாக்கெட் நாவல் எனும் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். ஒவ்வொரு படத்துக்கும் இடையே ஏன் இத்தனை இடைவெளி என்று கேட்டால், ‘சினிமா என்பது எனக்கு எளிதான வேலையாக இருப்பதில்லை’ என்கிறார்.

கொடுக்காப்புளியிடம்தான் போதைப்பொருள் பொட்டலம் இருக்கிறது என்பது பசுபதிக்குத் தெரியவருகிறது. அப்பாவைக் காப்பாற்ற வேண்டும் எனும் நிபந்தனையுடன் அதைத்தர அவனும் சம்மதிக்கிறான். அத்தனைச் சிக்கல்களையும் அதை மையமாக வைத்துத்தான் தீர்க்கத் திட்டமிடுகிறான் பசுபதி. ஆனால், அந்தப் பையனோ வயதுக்கு மீறிய சிந்தனையுடன், ’உன்னை எப்படி நம்புவது? எங்க அப்பாவைக் காண்பி முதலில்’ என்கிறான். இரண்டு பெரிய கேங்ஸ்டர் குழுக்களையே தனியே சந்திக்கும் பசுபதிக்கு அந்தச் சின்னப்பையனை மிரட்டுவதோ, அடித்துப் பிடுங்குவதோ பெரிய காரியமில்லை. ஆனால், அவன் அதைச் செய்வதில்லை. தன் நிலைமையை நொந்துகொண்டு அழுதபடி மண்டியிடுகிறான்.

தியாகராஜன் குமாரராஜா

இப்படியான நுணுக்கமான இடங்கள் ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் அமைக்கப்பட்டிருக்கின்றன. எட்டாயிரம் ரூபாய் கிடைத்தால் போதும் என்று கணக்குப் போடும் காளையன், போனில் இரண்டு லட்ச ரூபாய் கேட்கிறான். பணத்தைத் திருடிக்கொண்டு தப்பியோட திட்டமிடுகிறார்கள் சப்பையும், சுப்புவும். ஆனால், கண்முன்னால் நடக்கும் சிங்கபெருமாளின் வன்முறை பயத்தை ஏற்படுத்துகிறது. சப்பை பயப்படுகிறான். சுப்பு, தனது பயத்தின் மூலமாகவே அவனது பயத்தைத் தைரியமாக மாற்றுகிறாள்! தன்னை நம்பி வரவிருக்கும் பெண் பயப்படுகையில் தானும் பயப்படுவது, தன் ஆண்மைக்கு அழகல்ல என்று அவனை நினைக்க வைக்கும் ரிவர்ஸ் சைக்காலஜியில் வெற்றி பெறுகிறாள் சுப்பு.

இப்படி ஒவ்வொருவருக்குள்ளும் பயம், துணிவு, பலம், பலவீனம் என்று எல்லாமே இருக்கின்றன. எந்த மனிதனுக்குள்ளும் முழுமையான வெளிச்சமும் முழுமையான இருளும் இருப்பதில்லை. சூழ்நிலையும் சந்தர்ப்பமும்தான், அவனுக்குள் இருக்கும் எதை வெளியில் கொண்டுவருவது என்பதைத் தீர்மானிக்கின்றன. ஆரண்யத்தின் இருள் அதன் காட்சிகளில் மட்டும் இல்லை; அதன் மனிதர்களுக்குள்ளும் இருக்கிறது என்பதைச் சொல்வதன் மூலம், ஆரண்யகாண்டம் இதைத்தான் நமக்குக் காட்டுகிறது.!

More in Cinema
பணத்திற்காக உடலை விற்பது எவ்ளோ பெரிய வலி? ஆண்கள் கண்ணை பார்த்து பேச மாட்டாங்க.. சரண்யா பகீர் பேட்டி! பணத்திற்காக உடலை விற்பது எவ்ளோ பெரிய வலி? ஆண்கள் கண்ணை பார்த்து பேச மாட்டாங்க.. சரண்யா பகீர் பேட்டி! September 12, 2026 என் புருஷனை பத்தி பேசாதீங்க.. எல்லாத்துக்கும் ஓரளவு இருக்கு.. கொந்தளித்த சாக்ஷி அகர்வால்! என் புருஷனை பத்தி பேசாதீங்க.. எல்லாத்துக்கும் ஓரளவு இருக்கு.. கொந்தளித்த சாக்ஷி அகர்வால்! September 12, 2026 அந்த விஷயத்தால் தான் விஜய் முதல்வரானார்.. ஆகாயம் பட இசை வெளியீட்டு விழாவில் தினந்தோறும் நாகராஜ் பேச்சு! அந்த விஷயத்தால் தான் விஜய் முதல்வரானார்.. ஆகாயம் பட இசை வெளியீட்டு விழாவில் தினந்தோறும் நாகராஜ் பேச்சு! September 12, 2026 த்ரிஷா அரசியலுக்கு வந்தா கதறி அழுவாங்க.. கல்யாணம் நிலைக்காது.. ஜாதக ரகசியத்தை உடைத்த ஜோதிடர்! த்ரிஷா அரசியலுக்கு வந்தா கதறி அழுவாங்க.. கல்யாணம் நிலைக்காது.. ஜாதக ரகசியத்தை உடைத்த ஜோதிடர்! September 12, 2026 கெனிஷா பெயரே நெகட்டிவ்.. யோகிபாபு படம் குறித்த பேட்டியில் வெளிவந்த உண்மை! கெனிஷா பெயரே நெகட்டிவ்.. யோகிபாபு படம் குறித்த பேட்டியில் வெளிவந்த உண்மை! September 12, 2026 அடக் கடவுளே.. யாருக்கும் இப்படி ஒரு நிலைமை வரக்கூடாது.. தாயை இழந்து கதறும் மணிவண்ணன்!  அடக் கடவுளே.. யாருக்கும் இப்படி ஒரு நிலைமை வரக்கூடாது.. தாயை இழந்து கதறும் மணிவண்ணன்!  September 12, 2026

See all 166 in Cinema →

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *