’டோர்னமெண்ட்ல நீ கொண்டு வர்ற ஒவ்வொரு சாவலுக்கும் எதிர் சாவல் விடுறேன். என்னோட ஒரு சாவல நீ ஜெயிச்சிட்டேன்னா, மொட்டையடிச்சி, மன்னிப்புக் கேட்டு, இந்தப் பந்தயத்தை விட்டே போயிடுறேன். நீ அதுக்குத் தயாரா? காசு மசிருக்கு சமானம்னு சொல்லுவேல்ல, உசிருக்கு சமானம்தான் பந்தயம்!’ – என்று பேட்டைக்காரன், ரத்னசாமியிடம் சவால் விடுகிறார்.
அவர்கள் பேசிக்கொண்டிருப்பது காவலதிகாரியான ரத்னசாமியின் அறை. பேட்டைக்காரன் அந்தச் சவால் விடுமுன்பாக அங்கு ஏதோ நடந்திருக்கிறது. அதைக் கேமரா நமக்குக் காட்டுவதில்லை. களத்தில் பேட்டைக்காரனை வெல்ல முடியாத ஆதங்கத்தில், அவரை அங்கே ஏதோ அவமானம் செய்திருக்கிறான் ரத்னசாமி என்று மட்டும் நம்மால் உணரமுடிகிறது. அதுவரை அவனோடு விளையாட வரமுடியாது என்று சொல்லிக்கொண்டிருந்த பேட்டைக்காரன் அதன் காரணமாகவே அப்படி ஒரு சவாலை விடுகிறார்.
எபிக் (Epic) என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நெருக்கமான தமிழ்ச் சொல் இல்லை. காவியம் என்பது புராண, இதிகாசக் கதைகள் எனும் பொருளை நெருங்கிச் செல்கிறது. பெருங்கதையாடல் என்று சொல்ல முடியும். ஹேராம், பொன்னியின் செல்வன், லகான் போன்ற படங்களை எபிக் இந்திய சினிமாக்களுக்கு உதாரணமாகக் கொள்ளலாம். ஆனால், எபிக்ஸ் எப்போதும் பெரும் பொருட்செலவு, ஏராளமான கதாபாத்திரங்கள், மிகப்பிரம்மாண்டமான மேக்கிங் என்றெல்லாம் இருந்தாக வேண்டுமென்பதில்லை. அப்படி எடுக்கப்பட்ட படங்கள் எல்லாம் எபிக்ஸ் ஆகிவிடவும் முடியாது.
எபிக்ஸ் என்பன மிகப் பெரிய கதைக்களத்தைக் (Epic Canvas) கொண்ட பெருங்கதைகள். அதன் ஒவ்வொரு நிகழ்வுக்கும், அதன் ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் பின்னால் கிளைக்கதைகள் இருக்கும். அவற்றுக்குள் அடுக்கடுக்கான கதைகளும், உணர்வுகளும் ஒளிந்திருக்கும். வரலாற்றுத் தகவல்கள் பொதிந்திருக்கலாம். இரண்டரை மணி நேரத்தில் அனைத்தையும் சொல்ல நேரமில்லை என்பதையெல்லாம் பற்றிக் கவலையின்றி, ஒரு காட்சியில், ஒரு நுணுக்கத்தில், ஒரு வசனத்தில் அவற்றையெல்லாம் தாண்டி திரைக்கதை ஓடிக்கொண்டே இருக்கும். அவற்றையெல்லாம் பெற்றுக்கொள்வதும், உணர்ந்துகொள்வதும் நமது பொறுப்பு. அந்த வகையில் ஆடுகளமும் தமிழ் சினிமாவின் ஓர் எபிக் படைப்புதான்!
தன்னை விட 28 வயது மூத்த, முதியவரான பேட்டைக்காரனைக் காதலித்துக் கல்யாணம் செய்துகொண்டிருக்கிறாள் மீனா. மதுரை மாவட்டத்திலேயே சேவல் சண்டையில் திறனும், புகழும் மிக்கவர் பேட்டைக்காரன் என்பது மட்டுமா அதற்குக் காரணம்? இறுதிக் காட்சியில், கருப்பு மீதிருக்கும் வன்மம் கண்ணை மறைத்திட, அவனோடு மீனாவை இணைசேர்த்துப் பேட்டைக்காரன் பேசியதைப் பொறுக்க முடியாமல், மனமுடைந்து நெஞ்சில் அறைந்துகொண்டு அழுகிறாள் மீனா.
தான் கல்யாணம் செய்துகொண்டு வந்த போது ஊரிலிருந்த ஒரே காரை வீடு தன்னுடையதுதான் என்றும், அதன் பொருட்டு; தான் காரைவீட்டுக்காரி என்றழைக்கப்பட்டதையும் நினைவுகூரும் கருப்புவின் அம்மா, தானும் தன் கணவனும் கூடி வாழ்ந்து பிள்ளை பெற்றுக் களித்த அந்த வீட்டை மீட்க வேண்டும் என்று கனவு காண்கிறாள். ஆனால், கருப்புவின் பார்வையில் அந்தக் கதை வேறாக இருக்கிறது. ’தானும் சம்பாதிக்காமல், இருந்த பரம்பரைச் சொத்தையும் குடியும், கூத்தியாளுமாக இருந்து அழித்துவிட்டு உன்னை நடுத்தெருவில் விட்டுவிட்டுப்போனவனுக்கு இவ்வளவு சீன் கிடையாது’ என்கிறான் அவன். ஒரே கதையின் இருவேறு கோணங்கள்.

’50 ஆண்டுகளுக்கு முன்பாக 50 குடும்பங்கள் இருந்த இந்தக் காலனியில், இப்போது இருப்பதோ இரண்டு மூன்று குடும்பங்கள்தான். வேலையைக் காரணம் காட்டியோ, திருமணம் செய்துகொண்டோ ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்குப் போய்விடு. இனி இந்த மண்ணில் நமக்கு வாழ்வென்று ஒன்றுமில்லை’ என்று தன் பேத்தியிடம் கெஞ்சுகிறார் ஓர் ஆங்கிலோ-இந்தியக் கிழவி.
நூறாண்டுகளுக்கு முன்னால், இந்த மண் தம் ஆளுகைக்குள்ளிருந்த நினைப்பில் குடிபெயர்ந்து வந்து இந்தியாவில் குடியேறிய ஆங்கில, பிரஞ்சு, டச்சு மக்களின் இன்றைய சந்ததிகளின் மனோநிலையைப் பற்றிய ஒரு கவலையை சட்டென ஏற்படுத்திவிட்டது அந்த ஒரு வசனம். ஆனால், அந்தப் பேத்தி சொல்கிறாள், ’இது நான் பிறந்த மண், இது எனக்குரியது!’ பால்வெள்ளை நிறத்திலிருக்கிறாள் அவள். அவள் அணிந்திருக்கும் உடை நம்மைப் போலில்லை. அவளது நுனி நாக்கு ஆங்கிலம் நம்முடையதல்ல! ஆனால், இந்த மண் அவளுக்குமானதுதானே? இது இன்னும் ஒரு சோஷலிச செக்யூலர் நாடுதான் இல்லையா?
’தாத்தனும், அப்பனும், புருசனும் பாரம்பரியமா சேவற்கட்டு விளையாடி கௌரவம் காத்த குடும்பம் என்னுடையது. அரசுப்பணி, ஆள், அம்பு என்று வாழ்ந்தாலும், என் பிள்ளை ஒரு குறிப்பிட்ட சேவற்கட்டாரியை ஒருமுறையேனும் வெல்ல முடியாமல் தவிப்பது நியாயமே இல்லை. இது என் குடும்பப் பாரம்பரியத்துக்கே பேரிழுக்கு’ என்று ஒரு கிழவி, தன்மகனைப் பாடாய்ப்படுத்தியெடுக்கிறாள். கிட்டத்தட்ட சிந்தனையில் அவளது பிரதியாகவே இருக்கும் ரத்னசாமி, ஒரு கட்டத்தில் பேட்டைக்காரனை வெல்ல முடியாமல் களத்திலிருந்தே விலகுவதோடு, அதை விமர்சிக்கும் அப்படிப்பட்ட தாயையே எட்டி மிதிக்கக் காலை ஓங்குகிறான்.
களத்துக்குள் சில தில்லுமுல்லு வேலைகளைச் செய்தாலும், களத்துக்கு வெளியே அவனது அதிகாரத்தைப் பயன்படுத்தி எந்த அநீதியையும் அவன் செய்வதில்லை என்பது இன்னொரு வியப்பு.

இப்படிச் சிறிதும் பெரிதுமாய் ஏராளமானக் கதைகள். ஆனால், இந்த ஆடுகளம் மையப்படுத்தி இயங்கும் கதையோ வேறானது. இவையனைத்தும் அந்த மையக் கதையோடு ஊடுபாவாகப் பின்னிப் பிணைந்து கிடக்கின்றன. அதனால்தான் இதை ஓர் எபிக் என்று குறிப்பிடமுடிகிறது.
கருப்பு ஓர் ஆங்கிலோ இந்தியப் பெண்ணான ஐரினைக் காதலிக்கிறான். அந்தப் பெண் அவனைக் காதலிக்கவில்லை என்று சொல்லிவிடுகிறாள். அந்த சோகத்தில் குடிக்கிறான். குடித்துவிட்டு, தான் தந்தையாகவும், குருவாகவும், நண்பனாகவும் மதிக்கும் பேட்டைக்காரனைப் போய் நடுஇரவென்றும் பாராமல் எழுப்புகிறான்.
‘என் டாவா என்னை லவ் பண்ணலைனு சொல்லிட்டாண்ணே’ என்று புலம்புகிறான் கருப்பு. அந்த நேரத்திலும் பேட்டைக்காரனும், அவனது இளம் மனைவியும் அவனுக்குச் சோறு போட்டு, ஆறுதலாகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். மகனைப் போல அப்படிப் பார்த்த அதே கருப்புவைத்தான் கொன்றுமுடிக்கும் வெறியோடு, அவனது வாழ்க்கையில் வன்மத்தோடு ஒரு வஞ்சக ஆட்டத்தை ஆடிமுடிக்கிறார் பேட்டைக்காரன். அதற்கான காரணம் என்னவென்பதுதான் இந்தப் படத்தின் கதை!

இலங்கையில் பிறந்து, நார்வேயில் வசிக்கும் கவிஞர் மற்றும் எழுத்தாளரான வ.ஐ.ச. ஜெயபாலன், பேட்டைக்காரனாக நடித்திருந்தார். அவர் தமிழ் சினிமாவுக்கு நடிகராக அறிமுகமான முதல் படம் இது. ராதாரவியின் தனித்துவமான குரல் நடிப்பில், ஜெயபாலனின் பங்களிப்பு பன்மடங்கு மேம்பட்டது. இவருக்கு எதிரான பிரதான பாத்திரமாக அமைந்த ரத்னசாமி கதாபாத்திரத்தில், நரேன் நடித்திருந்தார். ஏற்கனவே, நரேன் 10 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தாலும், இந்தப் படம்தான் அவரை ஆடுகளம் நரேன் ஆக்கியது. துரையாக கிஷோரும், ஐரினாக டாப்ஸி பன்னுவும் நடித்திருந்தார்கள்.
புதுப்பேட்டைக்குப் பிறகு, வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த பொல்லாதவன் படம் தனுஷுக்கு ஒரு புதிய நிறத்தைக் கொடுத்தது. தனுஷ், வெற்றிமாறனின் நட்பை இறுக்கமாகப் பற்றிக்கொண்டது அவரது திரை வாழ்க்கையையே மாற்றியது எனலாம். இதுவரை மொத்தம் 6 படங்களை மட்டுமே இயக்கியிருக்கும் வெற்றிமாறன், அதில் தனுஷோடு 4 படங்களில் இணைந்திருக்கிறார். அனைத்துமே தனுஷின் கேரியரில் முக்கியமான படங்களாக அமைந்தன. அதில் ஆடுகளம், அசுரன் என்று இரண்டு படங்களுக்காக தேசிய விருதுகளையும் பெற்றிருக்கிறார் தனுஷ். கமல்ஹாசன், ரஜினிகாந்துக்குப் பிறகு இன்று தேசிய அளவில் கவனம் பெற்ற நடிகராக தனுஷ் வலம் வருவதற்கு இந்தப் படங்களும் முக்கியமான காரணங்களாக அமைந்தன.

இசை ஜி.வி.பிரகாஷ்குமார். சிறப்பான பின்னணி இசையைக் கொடுத்திருந்தார் ஜிவிபி. படத்தின் நடுப்பகுதியில் வரும், சேவல்கள் மோதிக்கொள்ளும் மிக நீண்ட களச்சண்டை மட்டுமே 30 நிமிடங்களுக்கும் மேல் விரிவாகக் காட்சியாக்கம் செய்யப்பட்டிருந்தது. அவற்றுக்குத் தன் இசையால் உயிரூட்டியிருந்தார் ஜிவிபி. ஐரினை கருப்பு முதல் முறையாக சந்திக்கும் போது வரும் பாடல் சிநேகன் எழுதி, ஜிவிபி பாடிய ’யாத்தே யாத்தே’. தானே அப்படியான ஒரு பெண்ணின் மீது காதலில் விழுந்த உணர்வில் ஊறிப்போய், ’வெள்ளாவி வைச்சித்தான் வெளுத்தாய்ங்களா’ என உருகியிருப்பார் அந்தப் பாடலில்! சிநேகன் எழுதி, எஸ்பிபி, எஸ்பி.சரண் பாடிய ’அய்யய்யோ நெஞ்சு அலையுதடி’, ஏகாதசி எழுதி, வேல்முருகன் பாடிய ’ஒத்த சொல்லால’ பாடல்களும் சிறப்பாக அமைந்தன. யோகி பி எழுதிப் பாடிய ராப் பாடல்களும் படத்தின் உணர்வுகளை மேம்படுத்தின.
ஒளிப்பதிவு ஆர்.வேல்ராஜ். தொடர்ந்து தனுஷ் மற்றும் வெற்றிமாறனுடன் இணைந்து பணியாற்றிவரும் வேல்ராஜ் தனது சிறப்பான பங்களிப்பைக் கொடுத்திருந்தார். பொதுவாக பளிச்சென எடுக்கப்படக்கூடிய காதல் பாடலான ’அய்யய்யோ நெஞ்சு அலையுதடி’ போன்ற பாடலை, முழுவதுமே இரவின் நிலவொளி மென்மையில் தோய்த்துக் கொடுத்திருந்தார்.
ஆடுகளத்தைத் தயாரித்திருந்தவர் குரூப் கம்பெனிஸ் சார்பில் எஸ். கதிரேசன். படத்தை எழுதி இயக்கியிருந்தவர் வெற்றிமாறன். 2007-ல் தனுஷ் நடித்த பொல்லாதவன் படம் மூலமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான வெற்றிமாறனுக்கு இது இரண்டாவது படம். திரைக்கதை, இயக்கம், சிறந்த படம், நடிப்பு (தனுஷ், வ.ஐ.சஜெயபாலன்), படத்தொகுப்பு (கிஷோர்) என மொத்தம் 6 தேசிய விருதுகளை வென்றது ஆடுகளம். இந்தப் படத்தின் மூலமாக சமகாலத் தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இயக்குநர் எனும் இடத்தையும் உருவாக்கிக் கொண்டார். அடுத்தடுத்த படங்களில் அதை உறுதி செய்துகொண்டார். அவரது ஒவ்வொரு படமுமே ஒவ்வொரு வகையில் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்திருக்கிறது.

ஒரு சிறந்த படம் நாம் விவாதிக்கவும், கற்றுக்கொள்ளவும் பல தளங்களைத் திறந்துகொடுக்கிறது. பொதுவாக கதாநாயகன் மேலேயே கதை தொடங்கி, பயணித்து, முடியும் திரைக்கதைகளைப் பார்த்துப் பழகிய நமக்கு, இப்படி விரியும் கதைக்களத்துக்குள் ஓரங்கமாக இருக்கும் ஒரு கதாபாத்திரத்தின் செயல்பாடுகள், அதற்கான பின்விளைவுகள், அதன் சிந்தனை என்று சொல்லப்படும் கதைகள் பிரமிப்பூட்டுகின்றன.
உலகளாவிய அளவில் லார்டு ஆஃப் தி ரிங்ஸ், கேம் ஆஃப் த்ரோன்ஸ் போன்ற பெருங்கதைகள் பார்வையாளர்களை ஈர்ப்பதும் இந்த வகையினில்தான். போலவே மனிதர்களின் குணநலன்களையும் இப்படியான கதைகள் பெருமளவில் அலசுகின்றன. மது, புகை, சூது போன்றவை மட்டுமல்ல, அதிகாரம், கௌரவம், வெற்றி போன்றவையும் மீள முடியாத அடிக்ஷன்கள்தான். ஜல்லிக்கட்டுக் காளை வளர்ப்பு, சண்டைச்சேவல்கள் வளர்ப்பு போன்றனவும் பண்பாடு, கலாச்சாரம் எனும் போர்வையில் செய்யப்படுகிற அடிக்ஷன் ஆட்டங்கள்தான்.
ஆடுகளத்தில் பேட்டைக்காரனின் தன்முனைப்பால் விளைந்த அகந்தையின் கோர ஆட்டத்தைப் பார்க்கிறோம் நாம். அந்த மனிதர் மிக இயல்பானவர்தான். ஆனால், தனது சீடனான ஒரு சின்னப்பையன் முன்பாக தன் மொத்த வாழ்க்கையின் அனுபவமும், ஆளுமையும் கேள்விக்குள்ளானதை அவரால் தாங்கவே முடியவில்லை. அந்த உள்ளுணர்வின் தாக்கத்தை ஏற்க முடியாமல், கொடுவஞ்சனை செய்கிறார். இறுதியில் அதற்கே பலியாகியும் விடுகிறார். படம் சேவற்சண்டைக் களத்தில் குன்றாப்பகை, கொடுவஞ்சனை, செங்குருதி என அனைத்தும் உண்டு எனும் வசனத்தோடு ஆரம்பிக்கிறது. ஆனால், அது சேவற்சண்டைக் களத்துக்கு மட்டுமானதல்ல. ஆணவம், தன்முனைப்பு எனும் நார்சிசிஸ்டிக் குணநலன்களால் பீடிக்கப்பட்டிருக்கும் அத்தனை மனிதர்களுக்கும் சொந்தமானது!

இறுதியில் இந்தப்படத்தைப் பாதித்த படைப்புகளும், ஆளுமைகளும் என சிலரின் பெயர்கள் குறிப்பிடப்படுகின்றன. மைக்கேல் ஹனெகே (Cache –Michael haneke), அலெஹாண்ட்ரோ இனாரிது (Amores perros-Alejandro inarritu), பரதன் (Devar mahan-Bharathan), கமல்ஹாசன் (Virumaandi-Kamalhassan), அமீர் (Paruthiveeran-Ameer)! இப்படிப் புத்தகங்களைப் போல தாம் உருவாகக் காரணமான படைப்புகளின் அடிக்குறிப்புகளை நாம் தமிழ் சினிமாவில் அதுவரை பார்த்ததே இல்லை.
Inspirers don’t just inspire; they create more inspirers!
இளையராஜா இசையில் கீர்த்தி சுரேஷ்.. கார்த்திக் சுப்புராஜின் டோரதி டிரைலர் வெளியீடு!
September 18, 2026
The Dark Heaven Review: அமானுஷ்யம், மர்மப் புத்தகம், துப்பறியும் களம் – ஆனாலும் சொதப்புவது எங்கே?
September 18, 2026
ஜெயிலர் 2.. முதல் இன்ட்ரோவே தாறுமாறா இருக்கே.. சுராஜ் வெஞ்சரமூடு தான் மெயின் வில்லனா?
September 18, 2026
அந்த மாதிரி கேரக்டர்ல நடிக்க மாட்டேன்.. கண்டிஷன் போடும் லோகேஷ் கனகராஜ் பட நடிகை!
September 18, 2026
சமுத்திரக்கனி நடிக்கும் ‘கஸ்தூரி வீடு’ படத்தின் டீசர் எப்படி இருக்கு?
September 18, 2026
மனைவிக்கு போன் செய்து தொல்லை.. வடிவேலுவை மிரட்டிய விஜயகாந்த்.. ஜெயமணி பேட்டி!
September 18, 2026
பர்ஸில் பணம் தங்கவே இல்லையா? பிறந்த தேதிக்கு ஏற்ற இந்த ஒரு பொருளை வைத்து பாருங்களேன்
September 18, 2026
Worcestershire halt Durham's winning run (with aid of rain)
September 18, 2026
“இந்தி வேண்டாம் என்பதால் தமிழ்நாடு தனிநாடு ஆகவில்லை; தனித்தன்மையுடன் இயங்குகிறது” – உதயநிதி
September 18, 2026
How run clubs are getting the city moving
September 18, 2026
'உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்…' – முதல்வர் விஜய்யின் இடைத்தேர்தல் பிரசார பிளான் என்ன?
September 18, 2026
Chauhan, Anvay Dravid shine as India Under-19s clinch thriller
September 18, 2026