தவெக அரசின் நிர்வாகச் சீர்கேட்டை எதிர்த்து திமுக மகளீர் அணி நாளை போராட்டம் நடத்தவிருப்பதாக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக அவர் தன் எக்ஸ் பக்கத்தில், “சொந்த புத்தியும் இல்லாமல், சொல் புத்தியும் இல்லாமல் சட்டம்-ஒழுங்கைச் சீரழித்துவிட்ட சோப்ளாங்கி த.வெ.க. அரசு! நாளை மகளிர் அணி நடத்தவுள்ள ஆர்ப்பாட்டம், தறிகெட்டு ஓடும் த.வெ.க. அரசுக்கான Wake-up call! முதலமைச்சரையும் தூங்கி வழியும் ஆட்சி நிர்வாகத்தையும் எழுப்ப முயற்சிப்போம்! ஆளத் தெரியாத அரசுக்குப் பாடம் புகட்டுவோம்!” எனக் குறிப்பிட்டு வெளியிட்டிருக்கும் வீடியோவில், “எல்லோரும் நலமாக இருக்கிறீர்களா என்று விசாரித்துவிட்டுப் பேசுவதுதான் எனது வழக்கம். ஆனால், தற்போதைய தமிழ்நாட்டின் சூழலைப் பார்த்துவிட்டு நான் அப்படிக் கேட்டால், “எங்களைக் கிண்டல் செய்கிறீர்களா?” என்று நீங்கள் கேட்கும் நிலையில்தான் இன்றைய சூழல் உள்ளது.
தமிழ்நாட்டில் சீர்குலைந்துள்ள சட்டம்-ஒழுங்கு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்குப் பாதுகாப்பில்லாத நிலை, வரலாறு காணாத விலைவாசி உயர்வு ஆகியவற்றைக் கண்டித்து, வருகிற அக்டோபர் 31 சனிக்கிழமை அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் திராவிட முன்னேற்றக் கழக (திமுக) மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
அதையொட்டி சில கருத்துகளை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தவர் நிஜவாழ்க்கையிலும் அப்படித்தான் இருப்பார் என நம்பி, சில லட்சம் மக்கள் செய்த தவறு இன்று ஒட்டுமொத்தப் பொதுமக்களையும் பாதித்துக் கொண்டிருக்கிறது.
தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சி அமைவதற்கு முன்பாக, அக்கட்சியின் தலைவரும் இன்றைய முதல்வருமான திரு. விஜய் அவர்கள் அனைத்துப் பொதுக்கூட்டங்களிலும் என்ன பேசினார்? தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கு சரியில்லை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்குப் பாதுகாப்பு இல்லை, போதைப்பொருட்களால் குற்றங்கள் பெருகுகின்றன என்பதை மட்டுமே தொடர்ந்து பேசி ஆட்சிக்கு வந்தார்.
அவர் பேசிய பேச்சுக்களை நினைவுகூர்ந்து பாருங்கள். சத்தம்போட்டுப் பஞ்ச் வசனங்களைப் பேசியவரின் ஆட்சியில், இன்றைக்கு என்ன நிலைமை நிலவுகிறது? தீவிரமான பிரச்னைகளில் கவனம் செலுத்தாமல், சமூக வலைத்தளங்களில் தங்களை விமர்சிப்பவர்களைக் கைது செய்வதிலேயே இந்த அரசு முனைப்பு காட்டுகிறதே தவிர, போதைப்பொருள் ஒழிப்பிலோ அல்லது பெண்களுக்குப் பாதுகாப்பு வழங்குவதிலோ சிறிதும் கவனம் செலுத்துவதில்லை.

பத்து நாட்களாகக் காணாமல் போன ஒரு குழந்தையைக் கூடக் கண்டுபிடிக்க முடியவிலை. காவல்துறையைக் கையில் வைத்துக்கொண்டு சட்டம்-ஒழுங்கை எப்படிச் சீரமைப்பது என்று தெரியாமல், ஒரு முதலமைச்சராகவே அவர் கேள்விக்குறியாகியுள்ளார். பட்டப்பகலில் முக்கியச் சாலைகளில் கொடூரக் கொலைகள், பாலியல் வன்கொடுமைகள், வீட்டில் தனியாக இருக்கும் முதியோர்களைக் கொலை செய்து நகைகளைக் கொள்ளையடிப்பது போன்றவை சர்வசாதாரணமாக நடக்கின்றன. சிறுமிகள் தொடர்ந்து காணாமல் போகிறார்கள்.
குற்றவாளிகளுக்கு இந்த அரசின் மீது சிறிதும் பயமில்லை. குற்றவாளிகள் இதனைத் தங்களுக்கான ஆட்சியாகக் கொண்டாடுகிறார்கள். தலைநகரமான சென்னையிலேயே மயிலாப்பூர், அடையாறு, தரமணி போன்ற மிக முக்கியமான பகுதிகளிலேயே தொடர் கொலைகள் நடக்கின்றன. ஜாமீனில் வெளியே வரும் குற்றவாளிகள், காவல் நிலையத்தில் கையெழுத்திட்டுவிட்டு வரும் வழியிலேயே அறிவாளால் ஓட ஓட விரட்டிக் கொலை செய்யப்படுகிறார்கள்;
நீதிமன்ற வளாகத்திலேயே வெட்டப்படுகிறார்கள். பல மாவட்டங்களில் இரட்டைக் கொலைகள் அரங்கேறுகின்றன. கொலை செய்துவிட்டு இன்ஸ்டாகிராமில் ‘ரீல்ஸ்’ பதிவிடுகிறார்கள். புழல் சிறையிலிருந்து கைதிகள் தப்புகிறார்கள்.

தேனி மாவட்டச் சிறையிலிருந்து ஒரே இரவில் 17 பேர் முதன்மை வாயிலைத் திறந்து சாவகாசமாகத் தப்பித்துச் சென்றுள்ளனர். நடுரோட்டில் கொலை செய்துவிட்டு எந்தப் பதற்றமும் இல்லாமல் ஆட்டோவிலும் பைக்கிலும் குற்றவாளிகள் தப்பிச் செல்கிறார்கள். இக்காட்சிகளை எல்லாம் முதலமைச்சர் பார்க்கிறாரா இல்லையா என்றே தெரியவில்லை. இந்தச் செய்திகள் அவர் காதுகளுக்காவது செல்கிறதா என்பதே சந்தேகமாக உள்ளது. ஏனெனில் தமிழ்நாட்டில் எதுவுமே நடக்காதது போலத்தான் அவருடைய செயல்பாடுகள் அமைந்துள்ளன.
அனைத்துக் கட்சிகளும் அறிக்கை வெளியிடுகின்றன; கண்டனம் தெரிவிக்கின்றன; போராட்டங்களை நடத்துகின்றன. ஆனால் முதலமைச்சரிடமிருந்து எந்தவொரு பதிலும் இல்லை.
இன்னமும் சினிமா படப்பிடிப்பின் போது ‘கேரவேனில்’ சென்று மணிக்கணக்கில் அமர்ந்திருப்பதைப் போல, யாராலும் அணுக முடியாத நிலையிலேயே அவர் இருக்கிறார். காவல்துறைக்கு முதலமைச்சர்தானே பொறுப்பு? அவர் பதில் சொல்ல வேண்டாமா? அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தி உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டாமா?
ஆனால் இவை எதுவுமே நடப்பதில்லை. அனைத்துத் துறைகளுக்கும் ஒருசில அமைச்சர்கள்தான் பதில் சொல்கிறார்கள்; அந்தப் பதில்களும் மிகவும் பொறுப்பற்ற முறையில் இருக்கின்றன. ஆட்சிக்கு வந்து ஆறு மாதங்கள் ஆகப்போகும் நிலையிலும், எதற்கெடுத்தாலும் “திமுக… திமுக…” என்று சொல்வதுதான் இவர்களது ஒரே பதிலாக இருக்கிறது.

இதில் மிகவும் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், பாதிக்கு மேற்பட்ட குற்றச் சம்பவங்களில் தவெக கட்சிக்காரர்களே சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்பதுதான். சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட முதலமைச்சர் வேறெங்கும் செல்லத் தேவையில்லை; தன் கட்சியில் இருப்பவர்களைக் கட்டுப்படுத்தினாலே குற்றங்கள் பெருமளவு குறையும்.
அதாவது, பெண்களைத் தவெக காப்பாற்றத் தேவையில்லை; தவெகவிடமிருந்துதான் பெண்களைக் காப்பாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பொதுவாக எல்லாக் கட்சிகளிலும் ஒருசில களைகள் இருக்கலாம். ஆனால் களைகள் எல்லாம் ஒட்டுமொத்தமாகப் போய் சேர்ந்த ஒரு கட்சியாக இந்தத் தவெக இருக்கிறது.
‘மேத் பூபாலன்’ என்பவர் சில நாட்களுக்கு முன் மத்திய அரசின் ‘டி.ஆர்.ஐ’ (DRI) அமைப்பிடம் கைதாகியுள்ளார். தமிழ்நாட்டைப் போதைப்பொருள் உற்பத்தி மையமாக மாற்றி உலகம் முழுவதும் சப்ளை செய்வதுதான் இவரது வேலை. இவர் ஒரு தவெக நிர்வாகி. ஆனால் இந்தச் செய்தியை வெளியிட்டால் கொன்றுவிடுவோம் என்று தவெக ஒன்றியச் செயலாளர் பத்திரிகையாளர்களுக்குத் தொலைபேசியில் மிரட்டல் விடுக்கிறார். இதுதான் தூய்மையான அரசியலா?
தவெக நிர்வாகியான மேத் பூபாலன் போதைப்பொருள் உற்பத்தி மூலமாகச் சம்பாதித்த பணம்தான் நாகப்பட்டினம் மாவட்டத்திலும் பிற மாவட்டங்களிலும் தவெகவின் தேர்தல் செலவுகளுக்குப் பயன்படுத்தப்பட்டதா? அதனால்தான் பத்திரிகையாளர்களை மிரட்டுகிறார்களா? இதையெல்லாம் முறையான விசாரணைக்கு உட்படுத்த வேண்டாமா?

சட்டம்-ஒழுங்கு சீர்கேடு மட்டுமின்றி, வரலாறே காணாத அளவுக்கு விலைவாசியும் உயர்ந்து பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ரேஷன் கடைகளில் பொன்னி அரிசி போடுகிறோம் என்று கூறி, ரேஷன் அரிசிக்கு பாலிஷ் போட்டு ஏமாற்றுகிறார்கள். நியாயவிலைக் கடைகளில் மலிவு விலை வெங்காய விற்பனை என்று விளம்பரம் செய்கிறார்கள்; ஆனால் கடைக்குச் சென்றால் வெங்காயம் இருப்பு இருப்பதில்லை.
மக்களின் அன்றாட வாழ்க்கையே இந்த விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ளது. தங்கம் வாங்க முடியுமா என்று ஏழை மக்கள் ஏங்கிய காலம் போய், இன்றைக்கு அரிசியாவது வாங்க முடியுமா என்று ஏங்கும் நிலை உருவாகியுள்ளது.
திமுக ஆட்சிக் காலத்தில், இந்தியாவிலேயே பணவீக்கம் குறைவாக உள்ள மாநிலமாகத் தமிழ்நாட்டைப் பராமரித்து வந்தோம். ஆனால் தற்போதைய ஆட்சியாளர்களுக்கு எந்தத் துறையிலும் நிர்வாகத் திறன் இல்லை. நிர்வாகம் என்றால் என்னவென்றே தெரியாத ஒரு கூட்டத்தின் ஆட்சிதான் இன்று தமிழ்நாட்டில் நடைபெறுகிறது. இந்தத் தவெக அரசு சொந்தப் புத்தியும் இல்லாத, சொல் புத்தியும் கேட்காத ஒரு திறமையற்ற அரசாக உள்ளது. இந்தியாவிலேயே எந்த மாநிலமும் வாங்காத அதிகபட்ச விலையான 37 ரூபாய்க்கு மின்சாரம் பெறுகிறார்கள். எந்தவொரு திட்டமிடலும் தொலைநோக்குப் பார்வையும் இல்லாததே இதற்குக் காரணம்.

இப்போது அதிலிருந்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காகத் திட்டமிட்டு 41 ரூபாய்க்கு மின்சாரம் வாங்கப்போவதாகச் செய்தி வெளியிட்டு, பின்னர் அதனைத் திரும்பப் பெற்று நாடகமாடுகிறார்கள். ஒரு பெரிய கோட்டின் பக்கத்தில் அதைவிடப் பெரிய கோட்டை வரைந்தால் முந்தைய கோடு சிறியதாகிவிடும் என்பதைப் போல, 37 ரூபாய் மின்சாரக் கொள்முதலைக் குறைவாகக் காட்டுவதற்காகவே இந்த 41 ரூபாய் நாடகத்தை அரங்கேற்றியுள்ளார்கள்.
மக்களைப் பாதிக்கின்ற இத்தகையப் பிரச்னைகளை நாம் பேசினால், ஒரு நல்ல அரசு அதைச் சரி செய்ய முயல வேண்டும். ஆனால் இவர்கள் என்ன செய்கிறார்கள் தெரியுமா? தங்களுடைய தகவல் தொழில்நுட்ப அமைப்பில் (IT Wing) உள்ள போலி கணக்குகளை வைத்து ‘டூல்-கிட்’ (Toolkit) முறையைச் செயல்படுத்துகிறார்கள்.
எந்தக் கட்சி மக்கள் பிரச்னையைப் பேசினாலும், அந்தப் பதிவுகளின் கீழ் அவர்களைத் திட்டி கருத்துகளைப் பதிவிட்டால் போதும் என்ற எண்ணத்தில் இருக்கிறார்கள். “இரண்டு பேருக்கு இடையில்தான் போட்டி” என்று முதலமைச்சர் சொல்கிறாரே… உண்மையிலேயே எந்த இரண்டுக்கும் இடையில் போட்டி நிலவுகிறது தெரியுமா?
மின்வெட்டுக்கும் அறிவாள் வெட்டுக்கும் இடையே!
மின்சாரக் கட்டண உயர்வுக்கும் மளிகைப் பொருட்களின் விலை உயர்வுக்கும் இடையே!
கொலைகளின் உயர்வுக்கும் விலைவாசியின் உயர்வுக்கும் இடையே!
இதுதான் இன்றைக்குத் தமிழ்நாட்டின் யதார்த்த நிலைமை. ”உங்களுக்கு அண்ணனாக இருப்பேன், மாமனாக இருப்பேன், சித்தப்பாவாக, பெரியப்பாவாக இருப்பேன்” என்று அடுக்கு மொழியில் வசனம் பேசினாரே… முதல்ல அவர் முதலமைச்சராக இருக்கட்டும்! அவர் தன் வேலையை ஒழுங்காகப் பார்த்திருந்தால் தமிழ்நாடு ஏன் அனைத்துத் துறைகளிலும் பின்னோக்கிச் செல்லும்?
ஏதேனும் ஒரு துறையிலாவது கடந்த திராவிட மாடல் ஆட்சியை விட இந்தத் தவெக ஆட்சி சிறப்பாகச் செயல்பட்டுள்ளதா? அனைத்திலும் சரிவு, வீழ்ச்சி, பின்னடைவு எனச் சொல்லிக்கொண்டே போகலாம்.
இவற்றை எதிர்த்துதான் வரும் 31-ஆம் தேதி திமுக சார்பில் நடத்தப்படும் இந்த ஆர்ப்பாட்டம் அமைந்துள்ளது. இது இந்த அரசுக்கான எச்சரிக்கை மணி! இதை ஒரு விழிப்புணர்வு அழைப்பாக எடுத்துக்கொண்டு முதலமைச்சர் செயல்பட வேண்டும்.
மக்களுக்காகத்தான் நாமும் இருக்கிறோம்; மக்களும் நம்மை நம்பித்தான் இருக்கிறார்கள். எனவே, ஆட்சி செய்யத் தெரியாத இந்த அரசுக்குப் பாடம் புகட்டும் வகையிலும், முதலமைச்சரையும் தூங்கி வழியும் இந்த ஆட்சி நிர்வாகத்தையும் தட்டி எழுப்பும் வகையிலும் அக்டோபர் 31 அன்று நடைபெறவுள்ள நமது கண்டன ஆர்ப்பாட்டம் மாபெரும் வெற்றியடைய எனது வாழ்த்துகள்.” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb
முகேஷ் அம்பானி உலகப் பணக்காரர்.. திவாலாகும் அனில் அம்பானி? உலகமே அறிய வேண்டிய அண்ணன் தம்பி பாடம்
November 4, 2026
'பிரஷர் ஏறி நொந்து போயிருக்கேன்!' – 20% கமிஷன் சர்ச்சை; கொதிக்கும் தவெக எம்.எல்.ஏ குழந்தைராணி!
November 4, 2026
"அங்கிள் விஜய் அவர்களே, இது சாதாரண ஆபீஸ் வேலை கிடையாது!" – மு.க. ஸ்டாலின் தாக்கு!
November 4, 2026
இனி இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியில் சீறிப்பாயலாம்.. 4 நாடுகளுக்கு மட்டும் ஈரான் அனுமதி
November 4, 2026
"அலறும் ஈரான்".. இந்தியா உள்பட 4 நாடு கப்பல்களுக்கு மட்டும் ஹார்முஸ் சந்தியில் அனுமதி ஏன்? பின்னணி
November 4, 2026
“ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற தலைப்பில் விதிகளுக்குப் புறம்பாக கல்லூரி நிகழ்வு…" – சு.வெங்கடேசன்
November 4, 2026
Kellogg's admits snap, crackle and pop is quieter after uproar over Rice Krispies recipe change
November 4, 2026
KFC Reveals Official Avengers: Doomsday Menu 'Worthy' of Dr. Doom
November 4, 2026
The Budget-Friendly Flashforge Adventurer 5M 3D Printer Drops to a Mere $131 Ahead of Black Friday
November 4, 2026
Watch: PM and Ed Miliband play steel drums in Antigua
November 4, 2026
Photos: Iran marks US embassy takeover with rallies against US, Israel
November 4, 2026