மரண தண்டனைக்குத் தற்காலிகத் தடை விதிக்கக் கோரி ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் கொண்டுவரப்பட்ட வரைவுத் தீர்மானத்திற்கு எதிராக இந்தியா வாக்களித்துள்ளது.

மரண தண்டனைக்கு எதிராக சர்வதேச அளவில் ஒருமித்த கருத்து இல்லை என்றும், தங்களது சட்டங்களையும் தண்டனைகளையும் தீர்மானிக்கும் உரிமை இறையாண்மை கொண்ட நாடுகளுக்கு உண்டு என்றும் இந்தியா தெரிவித்துள்ளது.

ஐ.நா. பொதுச் சபையின் மூன்றாவது குழுவின் 43-வது முழுமையான கூட்டத்தில் இந்தியாவின் இந்த நிலைப்பாடு முன்வைக்கப்பட்டது.

பாவிகா மங்களானந்தன்
பாவிகா மங்களானந்தன்

இந்தியா ஏன் ஆதரிக்கவில்லை?

இந்தியா சார்பில் பேசிய ஐ.நா-வுக்கான இந்தியாவின் முதல் செயலாளர் பாவிகா மங்களானந்தன், “மரண தண்டனைக்கு எதிராக சர்வதேச அளவில் ஒருமித்த கருத்து ஏதுமில்லை.

சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கையின் (ICCPR) 6-வது பிரிவு, சில கட்டுப்பாடுகளுடன் மரண தண்டனையைப் பயன்படுத்த அனுமதிக்கிறது.

கடுமையான மற்றும் முறையான சட்ட நடைமுறைகளுக்குப் பிறகே மரண தண்டனை வழங்கப்படுகிறது.

எனவே, இதனை அரசு நடத்தும் கொலை என்று சித்தரிப்பது அபத்தமானது.

சட்டத்திற்குப் புறம்பான, விசாரணையற்ற அல்லது தன்னிச்சையான கொலைகள் சட்டவிரோதமானவை மற்றும் மனித உரிமைகளை அப்பட்டமாக மீறும் செயலாகும்.

இவை பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை ஆழமாகப் பாதிப்பதுடன், மிக அடிப்படையான மனித உரிமையான வாழும் உரிமையைப் பறிக்கின்றன.

‘அரிதிலும் அரிதான’ வழக்குகளில் மட்டுமே விதிக்கப்படும் ஒரு சட்டப்பூர்வ தண்டனையாக மரண தண்டனையை இந்தியா தருகிறது.

குற்றம் நிரூபிக்கப்படும் வரை நிரபராதி எனக் கருதுவது, உயர் நீதிமன்றத்தால் மரண தண்டனை கட்டாயம் உறுதி செய்யப்பட வேண்டியது மற்றும் தண்டனையைக் குறைப்பதற்கான சூழ்நிலைகளைக் கருத்தில் கொள்வது உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் இந்தியச் சட்டத்தில் இருக்கிறது” என்று பேசினார்.

மரண தண்டனை
மரண தண்டனை

மரண தண்டனைத் தடை தீர்மானத்திற்கு எதிரான இந்தியாவின் இந்த வாக்கு, 2016, 2018 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளில் எடுத்த நிலைப்பாட்டின் தொடர்ச்சியாகும்.

அமெரிக்கா எதிர்ப்பு; பிரான்ஸ் ஆதரவு

இறையாண்மை மற்றும் தீர்மானத்தின் வாசகங்கள் குறித்த கவலைகளைச் சுட்டிக்காட்டி அமெரிக்காவும் இந்தத் தடை தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தது.

அதே சமயம், பெரும்பான்மையான வாக்குகளுடன் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை வரவேற்றுள்ள பிரான்ஸ், உலகளவில் மரண தண்டனையை ஒழிப்பதற்கான ஒரு முக்கியப் படி இது என்று குறிப்பிட்டுள்ளது.

See all 787 in TamilNews →

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *