நமது சினிமாக்களில் வரும் குழந்தைகள் பெரும்பாலும் கதைக்கு அவசியமான வசனங்களை, அதிகப்பிரசங்கித்தனமாக பேசுவதைத்தான் பார்த்திருக்கிறோம். அப்படியொரு நிலையில், 6-ம் வகுப்பு படிக்கும் சில மாணவர்களின் அசலான உலகத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்த ‘பசங்க’, வெளியானபோது தமிழ் சினிமா ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திவிட்டது. தமிழில் சிறார்களுக்கான சினிமா என்பது மிக அரிதான ஒன்று.
’பசங்க’ அப்படியான ஒரு படமாக அமைந்தது.
ஒரு சிறுகதை என்பது பெரும்பாலும் ஒரு நிகழ்வு, ஒரு சிந்தனை, ஒரு சிக்கல் போன்றவற்றை மையமாகக் கொண்டிருக்கும். ஒரு நாவல் என்பது ஒரு கதாபாத்திரத்தின் வாழ்க்கைப் பதிவு அல்லது ஒரு சிந்தனையின் விரிவான அலசலாக அமையலாம். ஆனால், ஒரு சினிமா பெரும்பாலும் உள்ளடக்கத்தில் ஒரு சிறுகதையைப் போலவும், வடிவத்தில் ஒரு நாவலைப் போலவும் அமையக்கூடியது.
எப்போதாவது சினிமாக்கள் நிகழ்வுகளை முன்னிறுத்தாமல், ஒரு நாவலைப் போல வாழ்க்கையைப் பதிவு செய்வதுமுண்டு. ‘பசங்க’ அப்படியான ஒரு பதிவுதான். மேலோட்டமாகப் பார்த்தால் இந்தப் படத்தின் கதை அன்பு மற்றும் ஜீவா எனும் இரண்டு சிறுவர்களுக்கு இடையிலான மோதலாகத் தெரிந்தாலும், அவையெதுவுமே நம்மைப் பதைபதைக்க வைப்பவையல்ல. இந்தப் படத்தில் வரும் பெரியவர்களைப் போலவே, நாமும் அவற்றைக் குழந்தைகளின் விளையாட்டு என்ற அளவிலேயே உள்வாங்கிக் கொள்கிறோம்.

’தி பாஸ் பேபி’ படத்தில், பாஸ் பேபியைக் காட்டிக்கொடுக்கும் ஆடியோ கேஸட் ஒன்றை, ’டிம்’ அவனது பெற்றோரிடம் ஒப்படைக்க முயற்சி செய்யும் காட்சி ஒன்று வரும். வீட்டுக்குள் பெற்றோர் இருப்பார்கள். வெளியே முற்றத்தில் டிம்முக்கும், பாஸ் பேபி குழுவுக்கும் இடையே மிகப் பரபரப்பான அடிதடி சேஸிங் காட்சி ஒன்று நடந்துகொண்டிருக்கும். வெளியே பொறி பறந்துகொண்டிருக்கும் அதே காட்சி, வீட்டுக்குள்ளிருக்கும் அவர்களது பெற்றோரின் பார்வையிலிருந்தும் ஒரு ஷாட்டில் காட்டப்படும். அப்போதுதான் நிஜமாகவே அங்கு என்ன நடந்துகொண்டிருக்கிறது, ஆனால் நாம் அதை எப்படிப் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்பது நமக்குப் புரியும். கதாசிரியரும், இயக்குநரும் நம் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு போய் அந்த லானில் நிறுத்துகிறார்கள். அது ஒரு ரசனையான பார்வைக் கோணம். நாம் அவர்களோடு சேர்ந்துகொண்டு நடப்பதைப் பார்க்கப்போகிறோமா, அல்லது அந்தப் பெற்றோர்களோடு போய் நின்றுகொண்டு நடப்பதைப் பார்க்கப்போகிறோமா என்பது நமது தேர்வு.
கிட்டத்தட்ட அப்படியான ஒரு படம்தான் இந்தப் பசங்க. அன்புவும், ஜீவாவும் சந்திக்கும் முதல் காட்சியிலேயே முட்டிக்கொள்கிறார்கள். சண்டைக்குத் தயாராகி, ஆ, ஊவென இருவரும் வீடு கட்டி முடித்துவிட்டு அடித்துக் கொள்வார்கள். அப்போது இருவர் மீதும் மற்றவரின் ஓர் அடி கூட உருப்படியாக விழாது. வெறுமனே இருவரின் வாயிலிருந்தும் ‘டிஸூம், டிஸூம்’ என்று சத்தம்தான் வந்துகொண்டிருக்கும். நம் குழந்தைகளுக்கு நாம் சொல்லும் பாட்டி வடை சுடும் கதையில் அந்தப் பாட்டியும், காக்காவும், வடையும் நம் மனதுக்குள் என்னவாக இருக்கின்றன என்பது முக்கியமல்ல. அவை குழந்தைகளின் மனதில் எப்படியான கற்பனையாக இருக்கின்றன என்பதுதான் முக்கியம்.
அன்பு எனும் சிறுவனது குடும்பம் புதிதாக ஒரு வீட்டுக்குக் குடிவருகிறது. அன்பு நல்ல பையன். படிப்பிலும், விளையாட்டிலும் சூட்டிகையான பையன். ஆனால், அவனது வீட்டில் அப்பா வெள்ளைச்சாமிக்கும், அம்மா போதும்பொண்ணுவுக்கும் எப்போதும் சண்டை சச்சரவாக இருக்கிறது. அதற்கு ஏழ்மை காரணமாக இருக்கலாம். ஒருவர் மீது ஒருவர் காரணங்களை அடுக்கிக் கொண்டிருக்கிறார்கள். அன்புவுக்கு, ஒரு தங்கை, ஒரு தம்பி இருக்கிறார்கள். கூடவே சித்தப்பா மீனாட்சி சுந்தரம்.

எதிர் வீட்டிலிருக்கும் ஜீவாவின் அப்பா சொக்கலிங்கம், அவன் படிக்கும் பள்ளியிலேயே ஆசிரியராக இருக்கிறார். அம்மா முத்தடக்கி, ஓர் அக்கா சோபிக்கண்ணு எனும் கோப்பெருந்தேவி. ஜீவாவுக்கு சொந்த வீடு, சொந்தமாக சைக்கிள், ஆசிரியராக இருக்கும் அப்பா, கைச்செலவுக்குக் காசு என பெருமையடித்துக் கொள்ள நிறைய இருக்கிறது. அதனால் உருவான ஒரு கர்வம், சேட்டை, பிடிவாதம்! கூடவே அதற்குத் தூபம் போட பக்கடா, குட்டிமணி என்று இரண்டு வால் பையன்கள் அவனுடன் எப்போதுமிருக்கிறார்கள்.
முதலில் அன்பு, ஜீவா இருவருக்குள்ளும் முட்டிக்கொள்கிறது. ஒரு முறை வெள்ளைச்சாமி, வாசலில் வைத்து எதிர்வீட்டிலிருக்கும் சொக்கனுக்கு வணக்கம் சொல்கிறார். சொக்கன் அதைக் கவனித்தாரோ, இல்லை கவனிக்கவில்லையோ பதில் வணக்கம் வைக்கவில்லை. அதிலிருந்து அந்த அப்பாக்களுக்குள்ளும் ஒரு சின்ன மோதல் போக்குதான் இருக்கிறது.
அடுத்தென்ன, இருவரும் பெரிய அளவில் மோதிக்கொள்ளப் போகிறார்களா? இரண்டு வீட்டுப் பெண்களுக்குள்ளும் அதே மோதல் வெடிக்கப்போகிறதா? மீனாட்சிக்கும், சோபிக்கண்ணுவுக்கும் தனியே ஒரு காதல் கதை வேறு போய்க்கொண்டிருக்கிறதே, அது என்னவாகப் போகிறது? இப்படி நிறைய கேள்விகள் எழுகின்றன. அந்த நிலையில், ஒரு முறை குடும்பத்தோடு இரண்டு வீட்டினரும் தெருவில் இறங்கி மோதிக்கொள்கிறார்கள். ‘என் பிள்ளையை எப்படிய்யா நீ அடிக்கலாம், போலீஸ்ல கம்ப்ளைண்ட் பண்ணிடுவேன்’ என்கிறார் வெள்ளைச்சாமி. ‘இந்த வாடகை வீட்ட காலி பண்ணி உன்னை ஓட வைக்கிறேன் பார்’ என்கிறார் சொக்கன். ஆனால், அப்படியெல்லாம் எதுவுமே நடப்பதில்லை. இறுதியில் வரும் அன்புவின் விபத்தைத் தவிர்த்து வேறெந்த சினிமாத்தனமான டிராமாக்களும் நிகழவே இல்லை, அதெதுவும் இந்தக் கதைக்குத் தேவைப்படவும் இல்லை.

பெண்கள், புன்னகைத்துக் கொள்கிறார்கள். ஆண்கள் கண்ணியம் காக்கிறார்கள். காதலர்கள் இயல்பு மீறவில்லை. சின்னப் பிள்ளைகளின் சண்டை, காற்றோடு போய்விடுகிறது. ஆனாலும், ஒரு சினிமாவாக எல்லாம் போதுமானதாக இருந்தது. படம் முடியும் போது, பார்வையாளர்களின் மனம் நிறைந்துதான் இருந்தது. அவ்வளவுதான் சினிமா. வாழ்க்கை அழகானது. சினிமா எளிமையானது.
அன்புவாக கிஷோர், ஜீவாவாக ஸ்ரீராம் என இரண்டு சிறுவர்கள் நடித்திருந்தனர். கிஷோருக்கு இது முதல் படம். கற்றது தமிழ் படத்தில் அறிமுகமான ஸ்ரீராமுக்கு இது இரண்டாவது படம். இருவருமே அவரவர் பாத்திரங்களில் மிகச்சிறப்பான பங்களிப்பைக் கொடுத்திருந்தார்கள். இரண்டு பேருமே அந்த ஆண்டுக்கான சிறார் நடிப்புக்கான தேசிய விருதைப் பகிர்ந்துகொண்டதில் அது முழுமையடைந்தது.
ஜீவாவின் அம்மா, அப்பாவாக சுஜாதா, ஜெயப்பிரகாஷ் ஆகியோரும், அன்புவின் பெற்றோராக செந்திகுமாரி, சிவக்குமார் ஆகியோரும் நடித்திருந்தனர். பொற்காலம், தவசி, செல்லமே போன்ற பிரபலமான பல படங்களைத் தயாரித்திருந்த ஜெயப்பிரகாஷை ஒரு கம்பீரமான கேரக்டர் ஆர்டிஸ்டாக அறிமுகம் செய்த படம் இந்தப் பசங்க. இதில் தொடங்கி தமிழ், தெலுங்கு, மலையாளம் என பிரபலமான நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார் அவர். மீனாட்சியாக விமல் இந்தப் படத்தில் நடித்திருந்தார். விஜய் சேதுபதி, விதார்த் போல அனேக படங்களில் கூட்டத்தில் ஒருவராகத் தலைகாட்டிக்கொண்டிருந்த விமலை, ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் அறிமுகம் செய்தது இந்தப் படம். சோபிக்கண்ணுவாக வேகா நடித்திருந்தார்.

படத்தின் ஒளிப்பதிவாளர் சி.பிரேம்குமார். பின்னாளில் 96, மெய்யழகன் எனும் மெல்லுணர்வுகளைப் பேசும் இரண்டு அருமையான படங்களை இயக்கிய பிரேம்குமார் ஒளிப்பதிவாளராக அறிமுகமான படம் ‘பசங்க’. ஒரு சினிமாவில் டெக்னீஷியன்களின் இருப்பு தனியே தெரியக்கூடாது என்று சில கலைஞர்கள் நினைப்பதுண்டு. அவர்கள் இயக்குநரோடும், கதையோடும் அப்படியே ஒத்திசைந்து போய்விடுவார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர் பிரேம்குமார் என்று சொல்லலாம். ஆனாலும், அவரது அழகுணர்ச்சியை பல இடங்களில் ரசிக்க முடிந்தது. குறிப்பாக, ‘ஒரு வெட்கம் வருதே’ பாடலின் அத்தனை ரசனையான மாண்டாஜ் காட்சிகளில் பிரேம்குமாரை நாம் உணர்கிறோம்.
இசை ஜேம்ஸ் வசந்தன். சுப்ரமணியபுரத்தைத் தொடர்ந்த இரண்டாவது படம் இது அவருக்கு. அருமையான பின்னணி இசையோடு, சில அழகான பாடல்களையும் தந்திருந்தார். ’ஒரு வெட்கம் வருதே’ பாடலை தாமரை எழுதிட, நரேஷ் மற்றும் ஷ்ரேயா கோஷல் பாடியிருந்தார்கள். ’அன்பாலே அழகாகும்’ பாடலை யுகபாரதி எழுதிட, பழம்பெரும் இசைக்கலைஞர் பாலமுரளி கிருஷ்ணா பாடியிருந்தார்.
இந்தப் படத்தைத் தயாரித்திருந்தது கம்பெனி புரடக்ஷன்ஸ் சார்பாக இயக்குநர் சசிகுமார். கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருந்தது பாண்டிராஜ். சேரன், தங்கர்பச்சான், சிம்புதேவன் ஆகியோரிடம் உதவியாளராக இருந்த பாண்டிராஜ், இயக்குநராக அறிமுகமான படம் இது. இந்தப் படத்துக்காக சிறந்த படம், சிறந்த திரைக்கதை என இரண்டு தேசிய விருதுகளைப் பெற்றார் இவர். சமீபத்தில் வெளியான ’தலைவன் தலைவி’, ’பரிமளா அண்ட் கோ’ வரை தொடர்ந்து பாண்டிராஜ், படங்களை இயக்கி வந்தாலும், ‘பசங்க’ போன்ற ஓர் இயல்பான மற்றும் உணர்வுப்பூர்வமான ஒரு படத்தை அவர் அதற்குப் பிறகு உருவாக்கிடவில்லை.

அத்தனை அழகான கதாபாத்திரங்களை இந்தப் படத்தில் பாண்டிராஜ் எழுதியிருந்தார். சொக்கலிங்கம் ஒரு நல்ல ஆசிரியர். ஒரு சிறுவன் சொல்லும் யோசனைகளுக்கும்கூட செவி கொடுக்கிறார். அவனது எதிர்பார்ப்புகளை மிக இயல்பாகப் புரிந்து கொள்கிறார். உள்ளுக்குள் பாசமிருந்தாலும் தன் மகனே ஆனாலும், ஜீவாவின் சேட்டைகள் அவருக்குப் புரியாமலில்லை. ஜீவாவும், அன்புவும் கிரவுண்டில் சண்டையிட்டுக் கொண்டிருப்பதாகவும், வந்து அதை நிறுத்தும்படியும் அவரைக் கேட்டுக்கொள்ளுகிறாள் ஒரு குழந்தை. ‘ரொம்ப முக்கியம்’ என்று சொல்லிவிட்டு அதில் அவரால் தலையிடாமல் இருந்துவிட முடிகிறது.
மின்சாரம் போய்விட்டதால், கசகசத்துப்போய் குடும்பத்தோடு வெளியே வந்தமரும் அவர், எதிர்வீட்டில் ஒரு கணவன் – மனைவி விவாதம் போய்க் கொண்டிருப்பதை அறிந்து அனைவரையும் மீண்டும் வீட்டுக்குள் அழைத்துப் போய்விடும் கண்ணியம் இருக்கிறது அவரிடம். தன்னோடு சண்டைக்கு வந்தாலும், எதிர்வீட்டுக்காரர் வெள்ளைச்சாமி மீது அவருக்கு எந்த வன்மமும் இல்லை. மாறாக, பெற்றோரின் சண்டை எப்படிக் குழந்தைகளைப் பாதிக்கும் என்பதை, தன் சொந்த அனுபவத்திலிருந்து அந்த மனிதனுக்குப் புரியவைக்க முயலுகிறார்.
“எங்க வீட்டிலயும் நாங்க சண்டை போட்டுக்கிட்டுதான் இருந்தோம் சார், ஒரு காலத்துல! எம் பொண்ணு சோபிக்கண்ணுவை அது ரொம்பப் பாதிச்சதுனு ஒரு கட்டத்துல எனக்கு புரிஞ்சது. நான் விட்டுக்கொடுக்க ஆரம்பிச்சேன் சார், என் பொண்ணுக்காக! ஆனா, அதுக்காக என் மனைவியும் உடனே விட்டுக்கொடுத்தெல்லாம் போகல சார். ஆனா, ஒரு கட்டத்துல என்னைப் புரிஞ்சிகிட்டு என் பொண்ணு என் மீது அன்பு செலுத்த ஆரம்பிச்சா. அதைப் பார்த்து, ஒரு நாள் என் மனைவிக்கும் புரிஞ்சுது. தப்பா எடுத்துக்காதீங்க சார், இது என் கதை, என் கருத்து. அவ்வளவுதான். உலகத்துலயே சீப்பாக கிடைப்பது அட்வைஸ் மட்டும்தான். அதைச் செய்யறது என் நோக்கமில்ல, என் கரிசனமெல்லாம் ஒரு வாத்தியாரா, ஒரு நல்ல மாணவனான அன்புவோட படிப்பைப் பற்றித்தான். யோசிங்க சார்” என்ற சொக்கனின் கருத்து வெள்ளைச்சாமியை சிந்திக்க வைக்கிறது.

வீட்டுக்குப் போய் மனைவியிடம் மன்னிப்புக் கோரிவிட்டுப் பேசுகிறார். அந்தப் பேச்சில் அவரது கண்கள் பனிக்கின்றன. அதைத் தாளமுடியாமல் பூஞ்சையாக இருக்கும் அவரது பெண்குழந்தையின் கைகள் அவரது கண்ணீரைத் துடைக்கின்றன. அதைவிடவும் வேறென்ன வேண்டும் ஒரு தகப்பனுக்கு? மனைவியும் சமாதானமாகிறாள்.
அப்போது அவர் சொல்கிறார், “முதல்ல பசங்களுக்கு திருஷ்டி சுத்திப்போடு, அந்த வாத்தியாரு கண்ணு வைச்சிட்டாரு”. தன் குடும்பத்துக்காக சிந்தித்த, நல்லறிவு போதித்த ஒரு மனிதன், தன் பிள்ளையை ‘நல்ல மாணவன்’ என்று சொன்ன ஒரு சொல் திருஷ்டியாகிவிட்டதாம். ஆனால் அதில் பகைமையெல்லாம் இல்லை, குழந்தைகளின் மீதான பேரன்புதான் இருக்கிறது. அது மனித இயல்பு. அன்பு அத்தனை எளிமையானதுதான்.
(தொடரும்)
பிக் பாஸ் முதல் எவிக்ஷன்.. 24 மணி நேரத்துல போன வருஷம்.. இப்போ ஆன் ஸ்டேஜிலேயே.. யாரு தெரியுமா?
September 5, 2026
கட்டா குஸ்தி 2 சக்சஸ்.. மீனு டீச்சர் தான் இந்த வெற்றிக்குக் காரணம்.. ஐஸ்வர்யா லெக்ஷ்மி!
September 5, 2026
அய்யானாருக்கு கட்டு கட்ட நான் ரெடி.. மரண பயத்தில் VK.. எதிர்நீச்சல் தொடர்கிறது!
September 5, 2026
அப்போ மஞ்சுமெல் பாய்ஸ்.. இப்போ பெத்லகேம் குடும்ப யூனிட்.. கமல்ஹாசனை சந்தித்த படக்குழு!
September 5, 2026
நேத்து பக்தி பரவசம்.. இன்னைக்கு கவர்ச்சி அவதாரம்.. நெட்டிசன்களை கிறங்கடித்த நடிகை கிரண்!
September 5, 2026
பெல் இயக்குநர் படத்துக்கு ஹைப்பே இல்லையாம்.. ஏற்கனவே ரசிகர்கள் வாங்கிய அடி அப்படி!
September 5, 2026
Taylor Swift Says She Tried to Channel Randy Newman on ‘I Knew It, I Knew You’
September 5, 2026
How Crystal Palace exposed Fulham's defence
September 5, 2026
Tears, blood & triumph – Taylor's iconic career in pictures
September 5, 2026
Jones stuns Trump to set up final against Selby
September 5, 2026
Fritz and Cobolli shocked as men's seeds tumble
September 5, 2026