தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 70-ஆம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நடிகர் சங்க உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர். மேலும், இந்தக் கூட்டத்தில் சில தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.

தென்னிந்திய நடிகர் சங்கம்

இதில் திரைப்படப் படப்பிடிப்பில் கலந்துகொள்ளும் துணை நடிகர்களின் எண்ணிக்கையில் 50 சதவீத வாய்ப்பு தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பாகக் கலந்துகொள்ளும் கலைஞர்களுக்கு வழங்கப்பட வேண்டும் எனவும், நடிகர், நடிகைகள் குறித்து அவதூறான கருத்துகளைப் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

இது தொடர்பாக நடிகர் சங்கம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும், நமது சங்கத்திற்கும் இடையே போடப்பட்ட 26.07.2007 தேதியிட்ட உடன்பாட்டின் விதிகளின்படி நடைமுறைப்படுத்தப்படாமல் இருந்த அம்சமான, மேற்காண் இரு சங்கங்களைச் சார்ந்த பிரதிநிதிகள் மட்டுமே கொண்ட உயர்மட்டக் குழு அமைப்பது குறித்தும், உறுப்பினர்களின் நலனைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட புதிய உடன்படிக்கையில் மேலும் காலதாமதமின்றி கையொப்பமிட்டு நடைமுறைப்படுத்தவும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தை அன்புடனும், பணிவுடனும் வலியுறுத்தும் தீர்மானத்திற்கு பேரவையின் ஒப்புதல் பெறப்பட்டுத் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

நடிகர் சங்கம் 70-வது பொதுக்குழு கூட்டம்
நடிகர் சங்கம் 70-வது பொதுக்குழு கூட்டம்

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும் இடையே முன்பே ஏற்பட்ட உடன்படிக்கையின் அடிப்படையில், திரைப்படப் படப்பிடிப்பில் கலந்துகொள்ளும் துணை நடிகர்களின் எண்ணிக்கையில் 50 சதவீத வாய்ப்பு தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பாகக் கலந்துகொள்ளும் கலைஞர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என 26.07.2007 தேதியிட்ட ஒப்பந்தம் மூலமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு தொடர்ந்து கேயார், கலைப்புலி எஸ். தாணு, விஷால், முரளி ராமசாமி என தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கடந்த காலத் தலைவர்கள் அனைவராலும் நடைமுறைப்படுத்தப்பட்டு இருந்த நிலையில், கடந்த சில வருடங்களாக அது பின்பற்றப்படாமல் இருப்பதற்கும், அதைத் தடுக்கும் விதமாகச் செயல்படும் தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் சார்ந்த பிரதிநிதிகளுக்கும் கடும் கண்டனம் தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பேரவையில் ஒப்புதல் பெறப்பட்டுத் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

திரைப்படங்களில் பிரதான கதாபாத்திரங்களில் நடிக்கும் நமது சங்க உறுப்பினர்கள் இனி தயாரிப்பு நிறுவனங்களோடு ஒப்பந்தம் செய்துகொள்வதைக் கட்டாயமாக்கும் தீர்மானத்திற்கு பேரவையில் ஒப்புதல் பெறப்பட்டுத் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. தயாரிப்பு நிறுவனங்களோடு ஊதியம் சார்ந்த மற்றும் பிற புகார்களை நமது சங்கத்தில் வழங்கும்போது பிரதான கதாபாத்திரங்களில் நடிப்பவர்கள் உரிய ஒப்பந்த நகலையும் இணைத்து வழங்கினால் மட்டுமே (இது இனி முற்றிலும் புதிதாகப் பங்கெடுக்கும் படப்பிடிப்புகளுக்கு மட்டுமே பொருந்தும்) அந்தப் புகார் குறித்த நடவடிக்கை எடுக்கப்படும் என்ற தீர்மானத்திற்கு பேரவையில் ஒப்புதல் பெறப்பட்டுத் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. திரைப்படப் படப்பிடிப்புகளில் காட்சிப்படுத்தும் பின்னணி மற்றும் கூட்டத்தில் பொதுமக்களாகப் பணியாற்றும் தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு, படப்பிடிப்பு நடந்த ஒரு வார காலத்திற்குள் திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் உரிய ஊதியம் வழங்க வேண்டும்.

நடிகர் சங்கம் 70-வது பொதுக்குழு கூட்டம்
நடிகர் சங்கம் 70-வது பொதுக்குழு கூட்டம்

அவ்வாறு ஊதியம் வழங்கத் தவறினால், ஊதியம் வழங்கப்படும் வரையில் தொடர்புடைய தயாரிப்பு நிறுவனத்துடன் நமது சங்க உறுப்பினர்கள் வேலை ஒத்துழைப்பு அளிக்காமல் தவிர்க்கும் தீர்மானத்திற்கு பேரவையில் ஒப்புதல் பெறப்பட்டுத் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

சமூக வலைத்தள ஊடகங்களில் பார்வையாளர்களைக் கவர்ந்திழுக்கும் நோக்கத்துடன் பிரபலமான நடிகர் / நடிகையர்களைக் குறித்து அவதூறாக, ஆபாசமாக, சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனங்களை முன்வைத்தும், முகாந்திரமற்ற தங்களது கற்பனைக் கருத்துகளை முன்வைத்து பரப்புபவர்கள், நமது சங்க உறுப்பினர்களாக இருந்தாலும் கூட, அவர்கள் மீது நமது சங்கம் மூலமாக காவல்துறையில் புகார் அளித்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்குச் சட்டப்பூர்வமாகக் கடுமையான தண்டனை பெற்றுத் தருவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்க சங்க நிர்வாகத்திற்கு அதிகாரம் வழங்கும் பேரவையின் ஒப்புதல் பெறப்பட்டுத் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.” எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

See all 189 in Cinema →

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *