பொதுவாக சினிமாக்களில் வில்லன்களின் கையில் கத்தி, துப்பாக்கி, வெடிகுண்டு என எந்த ஆயுதங்கள் இருந்தாலும் அவற்றால் ஹீரோவை எதுவும் செய்ய முடியாது. நமக்கும் அந்தப் பயம் ஏற்படுவதில்லை. ஆனால் நிஜத்தில், ஒரு சாதாரண சமையலறைக் கத்தி கூட ஒருவரைக் கொன்று போட்டுவிடக் கூடியது! இந்தப் படத்தின் நடுப்பகுதியில் காளியும், அன்புவும் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.
அவர்களை நான்கு ஐந்து பேர் கையில் பட்டாக்கத்தியோடு துரத்துகிறார்கள். நொடி நேரம் பிசகினாலும் உயிர் போய்விடும் என்பதான நிலைமை. ஓடிக் களைத்து ஒரு கட்டத்தில் பயமும், பதற்றமுமாய் ஒரு வண்டிக்கு பின்னால் இருவரும் மறைந்து நிற்கிறார்கள். அப்போது அந்த வண்டிக்கருகே, அவர்களைக் கொல்ல ஆட்களை அனுப்பி வைத்துவிட்டு, அந்த இடத்தில் நின்று கொண்டு போனில் கட்டளையிட்டுக் கொண்டிருக்கிறான் பெருமாள். அப்போதுதான் உச்சக்கட்ட பதற்றத்தில் யாரும் எதிர்பாராத ஒரு காரியத்தை செய்துவிடுகிறான் காளி.

அருகில் கிடந்த ஓர் இரும்புக் கம்பியால் பின்னாலிருந்து பெருமாளின் தலையில் ஒரு அடி! ஒரே அடிதான், பெருமாள் இறந்துபோகிறான். அந்தக் கம்பி நம்முள் ஒரு பயத்தை ஏற்படுத்துகிறது. இறந்துபோன பெருமாள் நமக்குள் ஒரு பயத்தை ஏற்படுத்துகிறான். அதுவரை காதலுக்கு முன்னால் உருகி நின்ற, அந்த அப்பாவி இளைஞன் காளியைப் பார்த்தால்கூட ஒரு பயம் நம்முள் ஏற்படுகிறது. காட்சிகளின் தாக்கம் அப்படியானது.
கதைகளால் உருவாகும் சினிமா என்பது ஒரு வகை. கதாபாத்திரங்களால் உருவாக்கும் சினிமா அதிலிருந்து மேம்பட்ட இன்னொரு வகை. மெட்ராஸ் இரண்டாவது வகையைச் சார்ந்த ஒரு படம். இந்தப் படத்தின் ஒவ்வொரு காரெக்டரும் அப்படிப் பார்த்துப் பார்த்து உருவாக்கப்பட்டுள்ளன. அப்படி ஆக்கப்பட்ட கதாபாத்திரங்கள் அவர்களுக்கான கதையை அவர்களே உருவாக்கிக் கொள்கிறார்கள்.
மக்கள் முன்னேற்றக் கழகம் என்று ஒரு கட்சி. மக்கள் விடுதலைக் கழகம் என்று இன்னொரு கட்சி. ஒருபுறம் கண்ணன், மறுபுறம் மாரி. இப்படியான இரு கட்சிகளின் அடிமட்டப் பொறுப்பாளர்களுக்கிடையே நடக்கும் அதிகாரத்துக்கான போட்டி. அந்த அதிகாரத்தை அடைவதற்காக அவர்கள் மேற்கொள்ளும் அடையாள அரசியல்தான் கதை! சாதியால், வர்க்கத்தால், கௌரவத்தால், பக்தியால், கவர்ச்சியால், பொய்களால் என ஒவ்வொருவரும் அவர்களுக்கான அரசியலை ஒவ்வொரு விசயத்தைக் கொண்டு வளர்த்தெடுக்கிறார்கள்.
கண்ணனும் அப்படியான ஓர் அரசியலைத்தான் செய்கிறார். அதில் சாதி இருக்கிறது, கௌரவம் இருக்கிறது, பொய் இருக்கிறது. அவரது அப்பாவின் படம் வரையப்பட்ட சுவர் ஒன்றைக் காப்பாற்றுவது அவரது அரசியலின் அடையாளம் என நினைக்கிறார். அதை நீக்க முயல்கிறது மாரியின் அரசியல் அடையாளம். இதற்கிடையே சிக்கிக்கொண்டு உயிரை விடுகிறான் காளியின் உயிர் நண்பனான அன்பு. அதற்காகத் துடித்துப்போய், அன்பு இறந்ததற்குத் தாமும் ஒரு காரணமோ எனும் குற்றவுணர்வும் சேர்ந்துகொள்ள, பழிவாங்கும் உணர்வு கொப்பளிக்கக் கொந்தளிக்கிறான் காளி. அதன் பின்னர் என்னவானது என்பது கதையின் முடிவு!

இந்தப்படம் ஒருபுறம், அடையாளத்துக்கும், அதிகாரத்துக்கும் ஆசைப்படும் அடித்தட்டு அரசியல்வாதிகளையும், அவர்களது போராட்டங்களையும், துரோகங்களையும் பற்றிப் பேசுகிறது. ஆனால், அடிப்படையில் இது அழகான, ஆழமான ஒரு காதல் கதையாக இருக்கிறது. ஆழ்ந்து சிந்திக்காத, வாழ்க்கையைப் புரிந்து கொள்ளாத, பக்குவப்படாத ஓர் இளைஞனான காளி, ஒருவேளை கலையரசி எனும் அந்தப் பெண்ணை மட்டும் காதலிக்காமல் போயிருந்தால், ஒரு கட்டத்தில் நண்பனுக்காக பழி வாங்குகிறேன் பேர்வழி என்று எதிராளிகளை கொன்று போட்டுவிட்டு ஜெயிலுக்குப் போயிருக்கவே வாய்ப்புகள் அதிகம்.
தமிழ்சினிமாவில் சிறப்பான காதல் கதைகள் அனேகம் உண்டு. ஆனால் உற்சாகமான, எப்போது பார்த்தாலும் பிடித்து போகிற காதல் காட்சிகள் அரிதானவை. இந்தப் படத்தின் காதல் காட்சிகள் தரும் உற்சாகம், அப்படிப்பட்டதுதான். படத்தின் தொடக்கத்தில் காளியின் அம்மா, தான் வரம் வாங்கிவந்து பெற்றப் பிள்ளைக்கு இந்த உலகில் இல்லாத பேரழகியைத்தான் பெண்ணாகப் பார்த்துக் கொண்டுவருவேன் என்று சொல்லி, பார்க்கும் ஒவ்வொரு பெண்ணையும் தட்டிக் கழித்துக் கொண்டிருக்கிறார். காளிக்கோ கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஆசை. ஆனால், அவனுக்கு காதல் எதுவும் கூட கை கூடவில்லை.

காளி நன்கு படித்து, ஒரு சாஃப்ட்வேர் அலுவலகத்திலே பணிபுரிந்தாலும் கூட, அவனால் பெண்களை ஈர்க்க முடியவில்லை, பெண்களுடன் பேசவும், பழகவும் தெரியவில்லை. ’படிப்பு வேறு, சமூக அறிவு வேறு, இரண்டையுமே நாம் கற்றுத் தேற வேண்டும்’ என்பதுதான் இந்தப் படம் நமக்குத் தரும் செய்தி. படத்தின் இறுதியில் அப்படியொரு வசனமே கூட வருகிறது. போலவே படிப்புக்கும், எதிர்பாலினரை ஈர்க்கும் திறனுக்கும் என்ன சம்பந்தம்? இது போதாது என, அவனது நண்பன் அன்பு, மேரி எனும் பெண்ணைக் காதலித்து மணமுடித்துக் கொண்டிருக்கிறான். அவர்களுக்கிடையே தினமும் பொங்கிவழியும் காதலின் சாட்சியாகவும் காளி இருக்கிறான். என்னதான் செய்வான் காளி! எல்லாம் சேர்ந்த ஒரு சுயகழிவிரக்கம் அவனுக்கு.

ஒருநாள், ஓரிடத்தில் காளி, அன்பு இருவரும் நண்பர்கள் கூட்டத்தோடு பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதில் காளியின் திருமணப் பேச்சுதான் கேலிப்பொருளாக ஓடிக்கொண்டிருக்கிறது. காளிக்கோ கடுப்பு, நண்பர்களுக்கோ சிரிப்பு. அப்போது அந்த இடத்தை, மிக இயல்பாகத் தாண்டி செல்கிறார் அந்த ஏரியாப் பெண்ணான கலையரசி. ’இந்தச் சுமாரான பெண்ணுக்குதான் நம் ஏரியா பசங்களுக்கூடாக மிகப்பெரிய டிமாண்ட்’ என்கிறான் ஒரு நண்பன். அவளை ஆர்வமாக எட்டிப் பார்த்துவிட்டு, மிக இயல்பாக, ’அவளுக்கு என்னடா, அவ நல்லாதானே இருக்கா’ என்கிறான் காளி. அப்போது அன்பு, அதற்காகவே காத்திருந்தவன் போல தூரத்தில் செல்லும் கலையரசியை கூப்பிட்டு, ’இவன் உன்னை உயிருக்குயிராகக் காதலிக்கிறானாம்’ என்று நகைச்சுவையாகச் சிக்கலில் இழுத்து விட்டு விடுகிறான்.

அதில் ஆடிப்போகும் காளி, அதிர்ச்சியில் அந்த இடத்தை விட்டே ஓடிப்போகிறான். அதோடு அந்தப் பெண்ணை பார்க்கும் இடமெல்லாம் ஒளிந்தும், மறைந்தும் கடக்கிறான். ஒரு கட்டத்தில், ’நண்பர்கள்தான் விளையாட்டுத்தனமாக அப்படி நடந்து கொண்டு விட்டார்கள். நான் அப்படி ஒன்றும் நினைக்கவில்லை’ என்று அவளிடம் சொல்கிறான். அவள் பதிலுக்கு, ‘ஓ அப்படி எல்லாம் ஒன்றும் இல்லையா’ என்று தொக்கி நிற்கும் ஒரு கேள்வியைக் கேட்டுவிட்டுப்போவது ரசமான ஓர் இடம். சில பெண்கள் இப்படியானவர்கள்தான். அவர்கள் மனதில் நினைப்பது ஒன்றாக இருக்கும், வார்த்தைகளில் வெளிப்படுத்துவது வேறொன்றாகத்தான் இருக்கும். அதன் பின் இன்னொருவன் வந்து காதலை வளர்க்க ஐடியா சொல்கிறேன் பேர்வழி என்று, குட்டையைக் குழப்பி விடுகிறான். அது காளி, கலையிடம் திட்டு வாங்குவதில் முடிகிறது. காளிக்கோ அதிர்ச்சி! இன்னும் ஆரம்பிக்கவே இல்லாத காதலுக்கு ஒரு தோல்வி வேறு! பிறகான நாட்களில், அவர்களுக்கிடையே ஓர் அழகான காதல் மலர்கிறது.

பின்பொரு தருணத்தில் இருவரும் தங்கள் காதலைப் பற்றிப் பேசிக்கொள்கிறார்கள். அவர்களுடைய காதல் தொடங்கிய உண்மையான தருணங்களைப் பற்றிப் பகிர்ந்துகொள்கிறார்கள். தன் பையனுக்காக ஊரெல்லாம் பெண் பார்த்துக்கொண்டிருந்த காளியின் அம்மா, தன் மகன் காதலிக்கிறான் எனும் ஒரே காரணத்துக்காக, கலையரசியிடம் இறங்கி வந்திருக்கிறாள். ‘என் பிள்ளை உம் மேல உயிரையே வைச்சிருக்காம்மா, ஏம்மா வேணாம்னு சொல்லிட்ட? எம்புள்ள ரொம்ப கஷ்டப்படுதும்மா. அவன் ரொம்ப நல்லவன்மா. எம்புள்ளைய ஏத்துக்கோம்மானு உங்கம்மா சொன்னாங்க’ என்று கலை, உணர்வுப்பூர்வமாகக் காளியிடம் சொல்கிறாள். அவளது காதல் தொடங்கிய இடமாக அதைவிடவும் பிரமாதமாக வேறொன்று இருந்துவிடமுடியுமா என்ன! அந்தத் தாயின் உணர்வுகளும், ஏக்கமும் நம்மையும் பிணைத்துக் கொள்கிறது. ஒரு கதாபாத்திரம் ஒரு காட்சியில் இல்லாமலே கூட நம்மைக் கட்டிப்போட முடியும் என்பது ஓர் ஆச்சரியம்.
கார்த்தி, காளியாக நடித்திருக்கிறார். கார்த்தியின் ஃபைனஸ்ட் நடிப்பு வெளிப்பட்ட படங்களில் மெட்ராஸ் குறிப்பிடத்தக்கது. கலையாக கேதரின் தெரசா, தொடக்கத்தில் நடந்துபோகும் சில காட்சிகள் வருகின்றன. இலக்கற்ற, ஓர் அலட்சியமான பெண்ணுக்குரிய அந்த இயல்பான நடை நம்மை ஈர்க்கிறது, காதல் வந்த பிறகு அவரது கண்களில் தெரியும் அந்தக் க்யூரியாஸிட்டி தனி அழகு. கலையரசன், ரமா, ரித்விகா, சார்லஸ் வினோத், ஜெயபாலன், நந்தகுமார், நவகீதன், மைம் கோபி என ஒவ்வொரு கேரக்டர்களிலும் நடிகர்களின் பங்களிப்பு மிகச்சிறப்பானது. ஒரு சின்னக் காட்சியில் வந்து போகக்கூடிய நடிகர்கள் கூட பிசிறு தட்டாமலிருக்கிறார்கள், காரணம் இயக்குநரின் ஆளுமைதான் என்பதில் சந்தேகமில்லை.

படத்துக்கு இசையால் உணர்வெழுச்சியைத் தந்திருப்பவர் சந்தோஷ் நாராயணன். காளி, தலையில் வெட்டுப்பட்டுக் கிடக்கும் நாட்களில் அவனைப் பார்க்க அடிக்கடி வீட்டுக்கு வந்துபோகிறாள் கலையரசி. ஒருநாள், அப்படி ஓர் ஆளில்லாத தருணத்தில், படுத்துக்கிடக்கும் அவன் மார்பில் சாய்ந்து அணைத்தபடி அவனை முத்தமிடத் துணிகிறாள் அவள். அப்போது அம்மா வந்துவிட, மூவரும் சங்கோஜமாகிப் போகும் ஓர் இடம் வருகிறது. ’அம்மா பார்த்துட்டாங்களா, பாத்துட்டாங்கதானே?’ என்று காளி புலம்பும் போது கலை, ‘ஆமா, பாத்தா என்ன இப்ப?’ என்கிறாள் வெடுக்கென்று. காதலும், மோகமும் ஊரறிந்த ரகசியம்தான் அல்லவா! அங்கே தொடங்குகிறது, ’நான் நீ நாம் வாழவே… உறவே…’ என்று நெஞ்சைத் தொடும் பாடல். அவனது ஆங்காரத்தை, காதல் சமன் செய்து அவனை அறிவின் பாதயில் அழைத்துப்போகிறது. உமாதேவியின் வரிகளைப் பாடியது சக்திஸ்ரீ கோபாலன்!
ஒளிப்பதிவு ஜி.முரளி. ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்துக்காக தயாரித்தவர் கே.இ.ஞானவேல்ராஜா! மெட்ராஸை எழுதி இயக்கியிருப்பவர் பா.ரஞ்சித்! எடுத்துக்கொண்ட கதையை அதன் உணர்வுகள் சிதையாமல் படமாக்கிவிடுவது மட்டும்தான் ஓர் இயக்குநரின் கடமை. அதைக் கச்சிதமாக செய்திருக்கிறார் இரஞ்சித்.

மாரிக்கும், கண்ணனுக்கும் ஒரு மிகப்பெரிய அரசியல் விரோதம் இருக்கிறதுதான். ஆனால், அந்த விரோதத்தை விடவும் அரசியலில் லாபக்கணக்குகள்தான் முதலிடம் பிடிக்கின்றன. கண்ணனுக்கு ஒன்று தேவைப்படும் போது அவன், மாரியிடம் இறங்கி வருகிறான். அதனால் கிடைக்கும் லாபத்தைக் கணக்கில் கொண்டு மாரி பதிலுக்கு ஒன்றைத் தர வேண்டியிருக்கிறது. அதன் பெயர் நம்பிக்கைத் துரோகம்! மனிதர்கள்தான் நமக்கு நம்பிக்கையைத் தருகிறார்கள், அதுதான் இந்தப் பெருவாழ்வைக் கடக்கும் வலுவினை நமக்குத் தருகிறது. சமயங்களில் அவர்களே அதைச் சிதைக்கவும் செய்துவிடுகிறார்கள். அந்த வகையில், அரசியலின் ஆபத்தான பக்கங்களை என்றும் நமக்கு நினைவூட்டிக்கொண்டே இருக்கும் மெட்ராஸ்!
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
Jailer 2 Box Office: கூலி வசூல் கன்ஃபார்ம் காலி.. ஜெயிலர் 2 முதல் நாள் வசூல் கணிப்பு இதோ! வேறமாறி!
October 14, 2026
என்கிட்ட மேட்டர் வீடியோவும் இல்ல.. ஆதாரமும் இல்ல.. வாகிதா வெளியிட்ட அடுத்த அதிரடி!
October 14, 2026
நாய், பன்னி குட்டி போடுது.. திருநங்கைகளை அசிங்கப்படுத்திய மோகன் ஜி.. கார்த்திக் சுப்புராஜ் கண்டனம்
October 14, 2026
40 கோடி வசூலை கடந்த ஜெயிலர் 2.. இந்தி பெல்ட்டில் மட்டும் இப்படியொரு பிரச்னையா?
October 13, 2026
TVK Fail: யூனிட் ரூ35க்கு மின்சாரம்.. நிர்வாகத்துல தோத்துட்டீங்க.. தவெக ஆட்சியை தோலுரித்த ஜூலி!
October 13, 2026
பொம்பளைங்க உங்களுக்கு அடிமையா? பீரோ மேல கையை வச்சு அலறிய கரிகாலன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது
October 13, 2026
Eight months of work down the dumps? Bittu Tabahi finds Ajnar River choked with garbage again
October 14, 2026
Ashok Lavasa: Ex-EC urges poll panel to regain public trust amid calls for Gyanesh Kumar’s resignation
October 14, 2026
Gigantic prehistoric snake discovered in India may have been one of the largest ever
October 14, 2026
'No excuses' – but is Villa's stadium rebuild affecting team?
October 14, 2026
'Don't think PM Modi is so weak,' 'likes to be critiqued', says Shekhar Suman as he defends comments made on show
October 14, 2026
Jailer 2 Box Office: கூலி வசூல் கன்ஃபார்ம் காலி.. ஜெயிலர் 2 முதல் நாள் வசூல் கணிப்பு இதோ! வேறமாறி!
October 14, 2026