‘தேன் குடிக்க’, ‘ஆசை’ உள்ளிட்ட சுயாதீனப் பாடல்களை பின்னணிப் பாடகி பிரகதி குருபிரசாத்தும், பாடகர் டிஜேவும் இணைந்து பாடியிருக்கிறார்கள். டிஜே-யுடன் இணைந்து பாடிய பாடல்களுக்கு அவர் தனக்கு ராயல்டி தருவதாக உறுதியளித்திருந்தார். ஆனால், அப்பாடல்களுக்கான தொகையை அவர் வழங்கவில்லை என்று பாடகி பிரகதி அவருடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவு ஒன்றைப் போட்டிருக்கிறார். அதற்கு பாடகர் டிஜேவும் பதில் பதிவு போட்டிருக்கிறார்.

அந்தப் பதிவில் பிரகதி, “கடந்த 10 வருடங்களாக நான் அமைதியாகவே இருந்தேன். என் சொந்தக் கதையை வெளிப்படையாகப் பேசி யாரையும் பழிக்க வேண்டும் என்றோ, யாருக்கும் கெடுதல் நினைக்க வேண்டும் என்றோ எண்ணும் நபர் நான் அல்ல.
ஆனால், இன்று நான் இந்த நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறேன் என்றால், அதற்கு எனது அமைதியை அனைவரும் அலட்சியமாகக் கருதியதுதான் காரணம். கடந்த 2013-ல் வெளியான ‘ஆசை’ பாடல் மாபெரும் வெற்றியடைந்தது.
அதைத் தொடர்ந்து, தனது அடுத்த ஆல்பத்திற்கு இன்னொரு பாடல் இணைந்து செய்யலாம் என்றும், அதற்கான பட்ஜெட் இல்லாததால் ராயல்டி பங்கீடு தருவதாகவும் டிஜே என்னிடம் கேட்டார். ஒரு நண்பனாக நானும் அதற்குச் சம்மதித்தேன்.
அப்படி உருவான ‘தேன் குடிக்க’ பாடல், உலகளவில் மிகப்பெரிய சுயாதீனத் தமிழ் ஹிட் பாடலாக மாறியது. யூடியூபில் 85 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளும், ஸ்பாட்டிஃபை தளத்தில் 49 மில்லியன் ஸ்ட்ரீம்களும் கடந்து சாதனை படைத்து வருகிறது.
அதன் பிறகு, தனது மியூஸிக் லேபிள் தன்னை ஏமாற்றிவிட்டதாகக் கூறிப் புலம்பிய டிஜே, ‘நஹிலா நஹிலா’ பாடல் மூலம் அந்த இழப்பைச் சரிசெய்துவிடலாம் என்று என்னிடம் வந்தார்.
அந்தப் பாடலுக்கும் ராயல்டி தருவதாக உறுதியளித்தார். ஆனால், என் அனுமதியின்றி அரைகுறையாக இருந்த ஒரு வெர்ஷனை அனைத்து இசைத் தளங்களிலும் அவர் பதிவேற்றினார்.
இன்றுவரை ‘தேன்குடிக்க’ அல்லது ‘நஹிலா நஹிலா’ ஆகிய இரண்டு பாடல்களிலிருந்தும் வந்த வருமானத்தில் ஒரு ரூபாய்கூட எனக்கு வந்து சேரவில்லை. டிஜேவுக்கு முறைப்படி லீகல் நோட்டீஸ் அனுப்பிய பிறகு, கடந்த ஒரு மாதத்திற்கு முன்புதான் ‘தேன்குடிக்க’ பாடலில் என் பெயரே சேர்க்கப்பட்டது.

ஆனால், இசையமைப்பாளர் ஸ்டீவ் கிளிஃப் பெயர் இன்றுவரை எந்தவொரு இசைத் தளத்திலும் இடம்பெறவே இல்லை. நானும் ஸ்டீவ் கிளிஃபும் இந்தப் பிரச்னையை அமைதியான முறையில் சுமுகமாக முடிக்க அனைத்து வழிகளிலும் முயன்றோம்.
ஆனால் பதிலுக்கு எங்களுக்கு மிரட்டல்களும் அச்சுறுத்தல்களுமே கிடைத்தன. அவருடைய ‘டீம்’ என்று கூறிக்கொண்டு அடையாளம் தெரியாத எண்களிலிருந்து நூற்றுக்கணக்கான அழைப்புகள் வந்து எங்களை மிரட்டின.
என் இசை நிகழ்ச்சிகளுக்கே வந்து மிரட்டுவதாகவும் கூறினார்கள். ஆம், எங்களுக்கு வர வேண்டிய பெரிய அளவிலான பணம் பாக்கியுள்ளது. ஆனால் அதைவிட எங்களை அதிகம் காயப்படுத்துவது என்னவென்றால்… எங்களது உழைப்பில் உருவான பாடலை வைத்து டிஜே தனது அடையாளத்தை வளர்த்துக்கொண்டார்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
டிஜே, “எனது இசை ஆல்பங்களின் படைப்பாளி, ஆசிரியர், இசையமைப்பாளர், இயக்குநர் மற்றும் அதன் அறிவுசார் உரிமை உரிமையாளர் என்ற முறையில், சமீபத்தில் எங்கள் கடந்தகால இணைப்புகள் குறித்து பிரகதி குருபிரசாத் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிப்பதும், என் தரப்பு உண்மையை விளக்குவதும் அவசியம் என நம்புகிறேன்.
இந்தக் குற்றச்சாட்டுகள் பகிரங்கமாகச் சுமத்தப்பட்ட போதிலும், அதை நிரூபிப்பதற்கான எவ்வித சான்றுகளையோ அல்லது ஒப்பந்தங்களையோ பிரகதி சமர்ப்பிக்கவில்லை.
என் ‘எனக்கு ஒரு ஆசை’ பாடலில் பிரகதி பின்னணிப் பாடகியாகப் பாடினார். அப்போது அவரது பணிகளை அவரது தாயார் கனகா குருபிரசாத்தே கவனித்து வந்தார்.
அப்பாடலில் அவர் பாடுவதற்கான நிபந்தனைகளும் ஏற்பாடுகளும் ரெபல்ஸ்டார் ரெக்கார்ட்ஸின் மேலாளர் குமார் சந்தா மூலம் ஒருங்கிணைக்கப்பட்டு, அப்பாடலுக்கான ஒருமுறை ஊதியமும் அவருக்கு வழங்கப்பட்டது.
தொடர்ந்து 2015-ல் ‘மேஸ் இன் இதயம்’ என்ற எனது இரண்டாவது ஆல்பத்தை எழுதி, இசையமைத்துப் பாடினேன். 11 பாடல்கள் கொண்ட அது ஒரு சிறு பட்ஜெட் தயாரிப்பாகும். பல சுயாதீனக் கலைஞர்கள் தங்களின் நேரத்தையும் திறமையையும் வழங்கி அதில் பங்களித்தனர்.
அதில் ஒரு பாடல்தான் ‘தேன்குடிக்க’. முந்தைய இணைப்பின் தொடர்ச்சியாக, ‘தேன்குடிக்க’ பாடலின் பெண் குரலாகவும், அதன் அதிகாரப்பூர்வ மியூசிக் வீடியோவின் கதாநாயகியாகவும் பிரகதி சம்பளமின்றிப் பங்களிக்க அவரது தாயார் ஒப்புக்கொண்டார். ஆல்பம் வெற்றிகரமாக வெளியானதைத் தொடர்ந்து, பாடல்களுக்கான மியூசிக் வீடியோ படப்பிடிப்பைத் தொடங்கினோம்.
2015-ல் ‘பொம்மை’ பாடல் முதலில் படமாக்கப்பட்டு வெளியானது. சில தனிப்பட்ட காரணங்களால் அப்போது ‘தேன்குடிக்க’ பாடலைப் படமாக்க முடியவில்லை.
பின்னர் 2016-ல், எனது ஒளிப்பதிவாளர் ஜென்சன் சிங்கராஜா மற்றும் ‘ஒளி அண்ட் ஒலி’ என்ற புதிய தயாரிப்பு நிறுவனத்தின் ஆதரவோடு ‘தேன்குடிக்க’ படப்பிடிப்பை முன்னோக்கி நகர்த்தினோம்.
அதற்குள் பிரகதி தமிழ் சினிமாவில் அறிமுகமாகவிருந்ததால், படப்பிடிப்பிற்கு வர முடியாது என அவரது தாயார் கூறிவிட்டார். எனவே, மியூசிக் வீடியோவில் ஸ்ருதி சீனிவாசனை கதாநாயகியாக நடிக்க வைக்க முடிவு செய்தோம்.
அதே சமயம், பாடலின் பாடகியாக பிரகதியின் பெயரே நீடித்தது. அந்த மியூசிக் வீடியோ டிசம்பர் 23, 2016 அன்று வெளியாகி, மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

அப்போதைக்கு இந்தப் பாடல் இவ்வளவு பெரிய வெற்றியை அடையும் என்று எங்கள் யாருக்குமே தெரியாது. ஒரு படைப்பு மாபெரும் வெற்றி பெற்ற பிறகு, அதன் நிதி ஏற்பாடுகள் வேறாக இருந்திருக்கலாம் என்று ஒருவர் திரும்பிப் பார்த்து நினைப்பது இயற்கைதான்.
ஆனால், பாடல் அடைந்த வெற்றி, அது உருவாக்கப்படும்போது இருவருக்குமிடையே இருந்த புரிதலை மாற்றிவிடாது. மேலும், ‘தேன்குடிக்க’ பாடலின் வெற்றியிலிருந்தோ அல்லது எனது பிற வெளியீடுகளான ‘முட்டு முட்டு’, ‘எனக்கு ஒரு ஆசை’, ‘ஓமியா’, ‘வானவில்’, ‘பொம்மை’ ஆகியவற்றிலிருந்தோ நான் தனிப்பட்ட முறையில் எந்த லாபமும் அடையவில்லை என்பதையும் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
நான் முன்பே கூறியது போல, எனது படைப்புகளிலிருந்து வந்த வருமானம் ரெபல்ஸ்டார் ரெக்கார்ட்ஸ் மேலாளர் குமார் சந்தாவால் அபகரிக்கப்பட்டது. இது பிரகதியின் பங்களிப்பிற்கான ஏற்பாடுகளிலிருந்து வேறுபட்ட தனிப் பிரச்னை என்றாலும், இத்திட்டங்களைப் பற்றிய கூடுதல் சூழலை விளக்குவதற்காகக் குறிப்பிடுகிறேன்” என்று விளக்கமளித்துள்ளார்.
உங்க பொண்டாட்டி பேர்ல தொழில் பண்ணா விளங்காது.. குணசேகரன் பிளான்.. எதிர்நீச்சல் தொடர்கிறது
October 20, 2026
Dorothy OTT: கலாச்சார சீரழிவு? பெரும் சர்ச்சையை கிளப்பிய டோரதி.. ஓடிடி ரிலீஸ் தேதி!
October 20, 2026
கொட்டும் மழையில் ஓடோடி வந்த சூர்யா.. இசையமைப்பாளர் தேவா படத்திற்கு அஞ்சலி!
October 20, 2026
மாநகரம் : கொலாஜ் ஓவியம்!| ஆதி தாமிரா | `சினி'ஸ்கோப் 34
October 20, 2026
இராவணனாக நடிப்பது ஈஸி.. இராமனாக நடிப்பது கஷ்டம்.. யஷ் ஓபன் டாக்
October 20, 2026
தலைவரு நிரந்தரம்.. லியோ தமிழ்நாட்டு வசூல் ரெக்கார்டு காலி.. 500 கோடி கிளப்பில் இணைந்த ஜெயிலர் 2!
October 20, 2026
A 1930 law, 50% tariffs and a new lawsuit: Trump faces fresh challenge over Canada duties
October 20, 2026
Delhi airport traffic hits record first-half high with 38.5 million passengers, eyeing expansion
October 20, 2026
Delhi AQI to slip into 'poor' category from Wednesday, pollution levels to rise
October 20, 2026
Marco Rubio in India: Can US biz diplomacy ease Trump tensions over tariffs, Russian oil and bring trade deal closer?
October 20, 2026
Michael Bloomberg backs Democrats with $80 million but remains wary of party’s leftward shift: Report
October 20, 2026
US, India ‘very, very close’ to trade deal, says Rubio
October 20, 2026