நெதர்லாந்திலிருந்து மீட்கப்பட்ட சோழர் கால லெய்டன் செப்பேடுகளைத் தமிழ்நாட்டில் நிரந்தரமாகக் காட்சிப்படுத்த வேண்டும் என எம்.பி சு.வெங்கடேசன் கோரிக்கை வைத்திருந்த நிலையில், மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் ஒப்புதல் அளித்திருக்கிறார்.
இது தொடர்பாக சு.வெங்கடேசன் வெளியிட்டிருக்கும் செய்தி குறிப்பில், “நெதர்லாந்திலிருந்து மீட்கப்பட்ட சோழர் கால லெய்டன் செப்பேடுகளைத் தமிழ்நாட்டில் நிரந்தரமாகக் காட்சிப்படுத்த வேண்டும் என்று ஒன்றிய கலாச்சாரத்துறை அமைச்சர் திரு. கஜேந்திர சிங் ஷெகாவத் அவர்களுக்கு விரிவான கடிதம் எழுதியிருந்தேன். அந்த கடிதத்தில்,`நெதர்லாந்து நாட்டிலிருந்து பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு வரலாற்றுச் சிறப்புமிக்க லெய்டன் செப்பேடுகளை மீட்டுக் கொண்டுவந்த இந்திய அரசின் நடவடிக்கைக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தச் செப்பேடுகள் மீண்டும் கொண்டுவரப்பட்டிருப்பது என்பது ஒரு வரலாற்றுப் பொருளின் மீட்சி மட்டுமல்ல; இந்தியாவின் நாகரிக நினைவுகளில் ஒரு பகுதியின் மீட்சி. சோழர் காலத்தின் மிக முக்கியமான வரலாற்று ஆவணங்களில் லெய்டன் செப்பேடுகளும் ஒன்று. இவை ஒரு அரச வம்சத்தின் சாதனைகளை மட்டுமல்லாமல், தமிழர் நிலப்பரப்பை ஆசியாவின் பல பகுதிகளுடன் இணைத்த கடல்வழி வணிகத் தொடர்புகள், அறிவுசார் மரபுகள் மற்றும் பன்மைத்துவப் பண்பாட்டையும் எடுத்துரைக்கும் ஆவணங்களாகவும் இருக்கின்றன. காலனியாதிக்கக் காலத்தில் பறிக்கப்பட்ட கலாச்சார மரபுச் செல்வங்களை மீட்டெடுப்பதற்கான உலகளாவிய முயற்சியில், இச்செப்பேடுகளின் வருகை ஒரு முக்கியமான மைல்கல்.
அதேவேளையில், நம் முன் உள்ள கேள்வி இந்தப் பொக்கிஷங்கள் இந்தியாவுக்குத் திரும்பி வந்துவிட்டனவா என்பது மட்டுமல்ல; அவை உருவான, அவற்றுக்கு உயிரும் பொருளும் அளித்த பண்பாட்டுச் சூழலுக்குத் திரும்பியுள்ளனவா என்பதும்தான்.
இந்தச் செப்பேடுகள் நாகப்பட்டினத்தில் உருவானவை. தமிழ்நாட்டு மன்னர்களால் உருவாக்கப்பட்ட இவை, பெருமளவில் தமிழில் பொறிக்கப்பட்டவை. தமிழ்நாட்டின் மண்ணோடு வேரூன்றியிருந்த நிறுவனங்கள், சமூகங்கள் மற்றும் வரலாற்றுச் செயல்பாடுகளின் நினைவுகளைத் தாங்கி நிற்பவை.
இவற்றின் மீள்வருகையை ஒவ்வொரு இந்தியரும் பெருமையுடன் கொண்டாடலாம். ஆனால், மரபுச் செல்வம் தன்னுடைய வரலாற்றுப் புவியியலோடு தொடர்புபடுத்தப்படும்போதுதான் அதன் முழுமையான பொருள் வெளிப்படுகிறது.

இந்தச் செப்பேடுகளில் பதிவாகியுள்ள வரலாறு, தமிழர் நிலப்பரப்பின் டெல்டா பகுதிகள், துறைமுகங்கள், கோயில்கள், மடங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளோடு பிரிக்க முடியாத வகையில் பின்னிப் பிணைந்திருக்கிறது. இவற்றைத் தமிழ்நாட்டில் காட்சிப்படுத்துவது என்பது தனித்துவிடப்பட்ட ஒரு வரலாற்றுப் பொருளைக் காண்பதல்ல; ஒரு முழுமையான வரலாற்று உலகத்தையே எதிர்கொள்வதற்கு சமம்.
எனவே, வரலாற்றாசிரியர்கள், தொல்லியல் ஆய்வாளர்கள், பண்பாட்டுத்துறை வல்லுநர்கள் மற்றும் தமிழ்நாடு அரசு ஆகியோருடன் கலந்தாலோசித்து, லெய்டன் செப்பேடுகளைத் தமிழ்நாட்டில் உள்ள பொருத்தமான ஓர் அருங்காட்சியகம் அல்லது நிறுவனத்தில் நிரந்தரமாகக் காட்சிப்படுத்த இந்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இத்தகைய முடிவு அவற்றின் தேசிய முக்கியத்துவத்தைக் குறைத்துவிடாது. மாறாக, ஒரு நாட்டின் மரபுச் செல்வம் அது உருவான இடங்களுடனும், அதனை உருவாக்கிய சமூகங்களுடனும் தொடர்பில் இருக்கும்போதுதான் தேசிய மரபுச் செல்வம் மேலும் வலுப்பெறுகிறது என்பதையே உறுதிப்படுத்தும்.
லெய்டன் செப்பேடுகள் மீண்டும் கொண்டுவரப்பட்டதன் மூலம் வரலாற்று ரீதியிலான ஒரு இடப்பெயர்வு சரிசெய்யப்பட்டுள்ளது. அவை எடுத்துரைக்கும் வரலாறு உருவான நிலப்பரப்புக்கே அவற்றை மீண்டும் கொண்டுசெல்வதன் மூலம் இந்தப் பயணத்தை நாம் முழுமையடையச் செய்வோம்.
தங்களிடமிருந்து சாதகமான பதிலை எதிர்பார்க்கிறேன்.” என்று நான் எழுதிய கடிதத்திற்கு ஒன்றிய கலாச்சராரத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் கீழ்கண்ட பதிலை வழங்கியுள்ளார்.
“மதிப்பிற்குரிய திரு. சு. வெங்கடேசன் அவர்களுக்கு,
வரலாற்றுச் சிறப்புமிக்க லெய்டன் செப்பேடுகளை மீட்டுக் கொண்டுவந்தது தொடர்பாக, தாங்கள் 10.06.2026 அன்று எழுதிய கடிதம் எமது கவனத்திற்கு வந்தது.
இது தொடர்பாக, இந்தியாவுக்குத் திரும்பக் கொண்டுவரப்படும் தொல்லியல் மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க பழங்காலப் பொருட்கள், அவற்றின் பூர்வீகம் குறித்த ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு, நடைமுறையில் உள்ள வழிமுறைகளின்படி, பொதுவாக அவை தோன்றிய இடங்களுக்கே மீண்டும் கொண்டுசென்று ஒப்படைக்கப்படுகின்றன என்பதை தங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன்.
தங்களது அக்கறைக்கும், பாராட்டுகளுக்கும், ஆலோசனைகளுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.”
பல நூற்றாண்டுக்கு முந்தைய செப்பேடு வெளிநாட்டில் இருந்து மீட்கப்பட்டு, இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டு, மீண்டும் அது உருவான நிலப்பரப்பான தமிழகத்திற்கே வந்து சேர்வது மிக முக்கிய “வரலாற்று திரும்புதல்” ஆகும். மிகவும் மகிழ்வளிக்கிற இந்த நடவடிக்கையில் பல பத்தாண்டுகலாக ஈடுபட்ட அனைவருக்கும், இருநாட்டு இராஜாங்க நடைமுறைகளை தொடர்ந்து முன்னெடுத்த ஒன்றிய அரசுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
செஞ்சி சிறுமி மாயம்.. அடித்து ஆடும் சிபிசிஐடி டிஐஜி விக்ரமன்.. விசாரணையில் இறங்கிய 2 புதிய தலைகள்!
November 13, 2026
முடங்கிய மைக்ரோசாப்ட் சேவைகள்.. அவுட்லுக், டீம்ஸ், கோபைலட் காலியானது! பல கோடி பேர் அவதி!
November 13, 2026
விஜய் அரசுக்கு எதிராக அரசு ஊழியர்கள்.. திமுக, அதிமுகவுக்கு சாதகமாக போன தபால் ஓட்டுகள்.. பின்னணி என்ன
November 13, 2026
ஒன்றல்ல.. இரண்டல்ல.. 3 திருமணத்தை மீறிய உறவு! பெண் மோகத்தால் பதவியை இழந்த ஜென்சன் ஹுவாங்
November 13, 2026
ஐக்கிய அரபு அமீரகத்தில் கோர விபத்து! லாரி மோதி தீப்பிடித்ததில் இந்தியர்கள் உட்பட 14 பேர் பலி
November 13, 2026
‘லே' பகுதிக்குள் 60 நாள் நடமாடக்கூடாது.. நள்ளிரவில் சோனம் வாங்சுக் திடீர் வீடியோ.. வீட்டு காவலில் அடைப்பு?
November 12, 2026
செஞ்சி சிறுமி மாயம்.. அடித்து ஆடும் சிபிசிஐடி டிஐஜி விக்ரமன்.. விசாரணையில் இறங்கிய 2 புதிய தலைகள்!
November 13, 2026
முடங்கிய மைக்ரோசாப்ட் சேவைகள்.. அவுட்லுக், டீம்ஸ், கோபைலட் காலியானது! பல கோடி பேர் அவதி!
November 13, 2026
விஜய் அரசுக்கு எதிராக அரசு ஊழியர்கள்.. திமுக, அதிமுகவுக்கு சாதகமாக போன தபால் ஓட்டுகள்.. பின்னணி என்ன
November 13, 2026
ஒன்றல்ல.. இரண்டல்ல.. 3 திருமணத்தை மீறிய உறவு! பெண் மோகத்தால் பதவியை இழந்த ஜென்சன் ஹுவாங்
November 13, 2026
ஐக்கிய அரபு அமீரகத்தில் கோர விபத்து! லாரி மோதி தீப்பிடித்ததில் இந்தியர்கள் உட்பட 14 பேர் பலி
November 13, 2026
Grand Theft Auto VI (GTA 6) Everything To Know
November 12, 2026