அது ஜனவரி 31, 1976.
கபிலனும், வேம்புலியும் குத்துச்சண்டை வளையத்துக்குள் மோதிக் கொண்டிருக்கிறார்கள். அது ஒரு பரபரப்பான முக்கியமான ஆட்டம். ரங்கன் வாத்தியாரைப் பொருத்தவரை அது ஒரு கௌரவப் பிரச்னை. அந்த ஆட்டம் நடந்துகொண்டிருக்கும் போது, காவல் துறை உள்ளே புகுந்து ரங்கனைக் கைது செய்ய வருகிறது. காரணம் அன்றுதான் தமிழ்நாட்டை ஆண்டுகொண்டிருந்த, கலைஞர் கருணாநிதி தலைமையிலான திமுக அரசு, மத்திய அரசால் கலைக்கப்படுகிறது. மாநிலம் முழுதும் திமுக பிரமுகர்கள் கைது செய்யப்பட்ட நாள் அது. அன்றைய நாட்களில் காவல்துறை இப்போதிருந்ததைப் போலக் கிடையாது. குறைவான மனித வளத்தோடு இயங்கிய துறை. ரங்கன் காவலதிகாரியைப் பார்த்து ஆவேசமாகச் சொல்கிறார்,
”கழகத்தோட உடன்பிறப்பு நான். யாருக்கும் அஞ்சமாட்டேன். இங்கேயேதான் இருப்பேன். முடியப்போற ஆட்டம்யா இது.. பாத்தா தெரியல? இது முடிஞ்சதும் என்னை எங்க வேணா கூட்டிகினு போ. டேய் சந்திரா, இவங்கள ஒரு ஓரமா நிப்பாட்டுடா!”

அது 1975 காலகட்டத்தின் வடசென்னை. அப்போது அந்தப் பகுதி மக்களிடையே பிரபலமாக விளங்கிய குத்துச்சண்டைப் போட்டிகளை மனப்பூர்வமாக விரும்புகிறான் கபிலன் எனும் இளைஞன். ஆனால், அவனது அம்மா, அவனது விருப்பத்துக்கு மாறாக, மிகக் கடுமையாக நடந்து கொள்கிறாள். ஒரு வேலைக்குச் செல்லவும், கல்யாணம் செய்துகொள்ளவும் அவனை வற்புறுத்திச் செய்யவைக்கிறாள். அவளுக்கு ஏன் குத்துச்சண்டை விளையாட்டின் மீது அப்படியொரு வெறுப்பு?
தாயின் விருப்பப்படியே சுமைக்கூலி வேலைக்குச் செல்லும் கபிலனின் மானசீக அணியாக, அவன் தந்தை விளையாடிய அணியான சார்பட்டா பரம்பரையே இருக்கிறது. போலவே அந்த அணியின் பயிற்சியாளரான ரங்கன் வாத்தியாரையே தன் குருவாகவும் மனதுக்குள் வரிந்து கொண்டிருக்கிறான் கபிலன்.
சார்பட்டா அணியின் தற்போதைய வீரர்களின் ஆணவமும், இடியப்ப அணியிடம் அவர்கள் சந்திக்கும் தொடர் தோல்விகளும் ரங்கன் வாத்தியாரை மனமுடையச் செய்கின்றன. ஒரு பொழுதில், அதைக் காணச் சகியாமல் இடியப்ப அணியின் நட்சத்திர வீரனான வேம்புலியைத் தான் வீழ்த்துவதாகக் களமிறங்குகிறான் கபிலன். அதைத் தொடர்ந்துதான் மேற்சொன்ன அந்த ஆட்டம் நடக்கிறது.
சுமார் 170 நிமிடங்கள் ஓடும் இந்தப் படத்தின் கதை, முதல் 100 நிமிடங்கள் வரை முழுக்கவும் ஒரு ஸ்போர்ட்ஸ் டிராமாவைப் போல குத்துச்சண்டையைச் சுற்றி மட்டுமே நகர்கிறது. அதன் பிறகுதான் கதை சமூக அரசியல் எனும் வேறு தளத்துக்குப் போகிறது. திரைக்கதை இலக்கணங்களுக்கு மீறிய வடிவம்தான் இது. ஆனால், ஒரு கலைப் படைப்புக்கான இலக்கணத்தை அந்தக் கலைஞனே முடிவு செய்கிறான்.
கபிலனும் வேம்புலியும் மோதிக்கொள்ளும் அந்த ஆட்டத்தின் முடிவு என்னவாயிற்று? ரங்கன் கைதானாரா? கபிலனின் தாய் குத்துச் சண்டையை வெறுத்தமைக்கான காரணம் என்ன? அதன் பிறகு கபிலன் என்னவானான் என்பதெல்லாம்தான் கதையின் தொடர்ச்சியும், முடிவும்!

கபிலன் கதாபாத்திரத்தில் ஆர்யா நடித்திருந்தார். நான் கடவுள், மதராசப் பட்டினம் போன்ற படங்களில் பெருமளவு கவனிக்கப்பட்ட ஆர்யா, இந்தப் படத்துக்காக மேற்கொண்ட உடல்ரீதியான தயாரிப்பு ரசிகர்களை வியப்பிலாழ்த்தியது. ஒரு குத்துச்சண்டை வீரருக்குரிய உடலமைப்பை உருவாக்கியதோடு, குத்துச்சண்டை நுணுக்கங்களை தீவிரப் பயிற்சியின் மூலம் கற்றுக்கொண்டு திரையில் அதை நம்பகத்தன்மையுடன் வெளிப்படுத்தியிருந்தார். அவமானத்தால் வீழ்த்தப்பட்டு, வாழ்க்கையை இழந்ததாக நினைக்கும் நிலையிலும், பின்னர் இறுதி வெற்றிக்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணிக்கும் வீரனாகவும் வாழ்ந்திருந்தார்.
மாரியம்மாவாக வரும் துஷாரா விஜயன், கபிலனின் மனைவி என்ற அளவுக்குள் சுருங்கிவிடாமல், தனக்கென ஒரு தனித்துவமும் உறுதியும் கொண்ட பெண்ணாகத் தோன்றினார். கபிலனின் அம்மாவாக அனுபமா குமார் நடித்திருந்தார்.
சார்பட்டா பரம்பரை அணியின் பயிற்சியாளரான ரங்கன் வாத்தியாராக வரும் பசுபதி படத்தின் இன்னொரு முக்கியமான தூணாக அமைந்தார். குத்துச்சண்டை மீதான அவரது காதல், பரம்பரையின் பெருமை, திராவிட அரசியல் பணி என்று பலதரப்பட்ட உணர்வுகளை மிக இயல்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். எதிர்த்தரப்பான இடியப்பப் பரம்பரையின் பயிற்சியாளர் துரைக்கண்ணுவாக மூத்த நடிகர் ஜி.எம்.சுந்தர் பெருமளவில் கவனிக்கப்பட்டார். டான்சிங் ரோஸாக வரும் ஷபீர் கல்லரக்கல், வேம்புலியாக வரும் ஜான் கொக்கன் இருவருமே தங்கள் தனித்துவமான உடல்மொழியாலும் நடிப்பாலும் கவனம் ஈர்த்தார்கள். மேலும் கலையரசன், காளி வெங்கட், முத்துக்குமார், சந்தோஷ் எனப் பலரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பாத்திரங்களைச் சரியாகப் பயன்படுத்தியிருந்தார்கள்.

ஒளிப்பதிவாளர் ஜி. முரளியும், கலை இயக்குநர் தா.ராமலிங்கமும் எழுபதுகளின் வடசென்னையைத் திரையில் மீண்டும் உருவாக்கியிருக்கிறார்கள். சுப்ரமணியபுரத்துக்குப் பிறகு, ஒரு தமிழ்த் திரைப்படத்தில் கடந்தகாலத் தமிழ்நாடு இவ்வளவு பிரம்மாண்டமாக மீளுருவாக்கம் செய்யப்பட்டிருந்தது. அக்காலத்து வீடுகள், தேநீர்க் கடைகள், குத்துச்சண்டைப் பயிற்சிக் கூடங்கள், போட்டி நடைபெறும் அரங்குகள் என ஒவ்வொரு இடமும் அந்தக் காலத்தைப் பிரதிபலித்தன. குத்துச்சண்டைப் போட்டிகளின்போது வீரர்களின் உடலசைவுகள், வேகம், பார்வையாளர்களின் பரபரப்பு எனக் களத்தின் ஒவ்வொரு அசைவையும் நமக்கு நெருக்கமாகக் கொண்டுவந்து நிறுத்தியது ஒளிப்பதிவாளரின் பணி.
சந்தோஷ் நாராயணனின் இசை படத்தின் வேகத்துக்கும் உணர்ச்சிக்கும் துணை நின்றது. குத்துச்சண்டைப் போட்டிகளின்போது பின்னணி இசை ஏற்படுத்தும் உத்வேகம் ஒருபுறம் என்றால், கதாபாத்திரங்களின் உணர்வுகளைத் தாங்கி வரும் பாடல்கள் மறுபுறம். கபிலனின் மீட்சிக்காக வரும் ‘நீயே ஒளி’ பாடலை சந்தோஷ் நாராயணன், நவ்ஸ்-47 குழு, ஷான் வின்செண்ட் இணைந்து பாடியிருந்தார்கள். எழுதியது ஷான் வின்செண்ட் மற்றும் அறிவு.
கே9 ஸ்டுடியோஸ்க்காக படத்தைத் தயாரித்திருந்தவர் சண்முகம் தக்கன்ராஜ். படத்தின் திரைக்கதை, வசனத்தை ரஞ்சித், தமிழ்ப் பிரபா இருவரும் இணைந்து எழுதியிருக்கிறார்கள். இயக்கியவர் பா.ரஞ்சித். ஒரு விளையாட்டை மையமாகக் கொண்ட படத்தில் வெற்றி, தோல்வி, பழிவாங்குதல், மீண்டெழுதல் போன்ற வழக்கமான அம்சங்கள் இருந்தாலும், அவற்றுக்குப் பின்னால் ஒரு சமூகத்தின் வரலாற்றையும் அரசியலையும் இணைத்திருப்பதுதான் இந்தச் சார்பட்டா பரம்பரையின் தனித்துவம். குத்துச்சண்டைப் போட்டிகள் வெறும் விளையாட்டுப் போட்டிகளாக மட்டும் சித்தரிக்கப்படவில்லை. அவை ஆங்கில ஆட்சியின் எஞ்சிய சமூக அடையாளம், தனிமனிதர்களின் அதிகாரப் போட்டி, அரசியல் செல்வாக்கு, குற்றச் செயல்களோடு தொடர்பான வன்முறை ஆகியவை மோதும் களங்களாகவும் இருந்ததைப் பதிவு செய்திருக்கிறது இந்தப்படம்.

1975 முதல் 1978 வரையிலான காலகட்டம், தொடக்கத்தில் ஆங்கிலேயர்களும் ஆங்கிலோ-இந்தியர்களும் பொழுதுபோக்காகப் பயிற்சி செய்த இந்த விளையாட்டில், உள்ளூர் தொழிலாளர்களும் மீனவச் சமூகத்தினரும் காட்டிய ஆர்வம், சார்பட்டா, இடியப்பம் போன்ற வினோதமான பெயர்களில் இயங்கிய குத்துச்சண்டைக் குழுக்கள், அதைப் பார்வையிட வந்த முகமது அலி, இந்திராகாந்தி அறிவித்த நெருக்கடி நிலை (Emergency), தமிழ்நாட்டில் நடந்த திமுக ஆட்சிக்கலைப்பு என தமிழ்நாட்டின் ஒரு குறிப்பிட்ட வரலாற்றுச் சூழலில் நடக்கிறது இந்தப் படத்தின் புனைகதை. ஓர் நேர்காணலில், தனது படைப்புகள் புனைவுக்கும் உண்மைக்கும் இடைப்பட்ட தளத்தில் உருவாவதாக பா. ரஞ்சித் கூறியிருக்கிறார்.
மிக நீண்ட தமிழ் சினிமா வரலாற்றில் பகுத்தறிவு, பெண்ணுரிமை, வர்க்கப்போராட்டம், கம்யூனிச சிந்தனைகள், தலித்திய சிந்தனைகள் என்று எத்தனையோ சமூக அரசியல் கருத்துகள் பேசப்பட்டிருக்கின்றன. ஆனால், தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் கோலோச்சிய திராவிடச் சிந்தனைகளையும், திராவிட இயக்கங்களையும் பற்றிப் பேசிய படங்கள் மிக குறைவுதான். இந்தப் படம் அந்த குறையைப் போக்கிவிட்டது என்று சொல்லமுடியாது, ஆயினும் ஓரங்கமாகத் தொட்டுச் சென்றது எனலாம். ரங்கன் வாத்தியார்களின் நெஞ்சுரத்தை தமிழ்நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் வாழும் கழகக் களவீரர்களிடம் இன்றும் காணமுடியும்.
குத்துச் சண்டைக் குழுக்களிடையே விளையாட்டுகள், போட்டி மனப்பான்மையையும் தாண்டி கௌரவப் பிரச்சினையாக, ஒரு போதையாக மாறி நிற்கிறது. அரசியல் கட்சிகள் அந்தந்தப் பகுதி மக்களிடையே தங்களின் அடையாளங்களாக, இன்ஃப்ளூயன்சர்களாக குத்துச்சண்டை வீரர்களை முன்னிறுத்த முயலுகின்றன. வீரர்களை நைச்சியமாகப் பேசி சமூகவிரோதக் காரியங்களில் ஈடுபடுத்துகிற சிக்கல்களும் நிலவுகின்றன. அதில் கொல்லுதலும், கொல்லப்படுதலும் நடக்கிறது. எல்லாவற்றையும் தாண்டி, சாதிப் பாகுபாடும் பார்வைக்குப் புலப்படாத மலையளவு வளர்ந்து நிற்கிறது. சக சாதி வீரனிடம் தோற்பதை ஏற்றுக்கொள்ள முடிகிற ஒருவனால், ஒடுக்கப்பட்ட சாதியிலிருந்து வரும் ஒரு வீரனிடம் தோற்பதை ஏற்கமுடியவில்லை. இறுதியில் அவர்களின் வழக்கமான ஆயுதங்களைத் தூக்குகிறார்கள். ஆடையை உருவி அவமானப்படுத்தும் கொடூரமெல்லாம் நிகழ்கிறது. சாதிய வன்மத்தின் வீரமென்பது இவ்வளவு இழிவானதாகத்தான் எப்போதும் இருந்திருக்கிறது.

மனமொடிந்து போகும் கபிலன் எதிலும் ஈடுபாடின்றிப் போகிறான். குத்துச்சண்டைதான் அவனுடைய அடையாளம். அவனுக்குள் இருந்த தன்னம்பிக்கையும் சுயமரியாதையும் அந்த விளையாட்டின் வழியாகத்தான் வெளிப்பட்டன. குத்துச்சண்டையின் ஆதாரமான உடலையே சாராயத்துக்கு முன்னால் கைவிடுகிறான். உடலையே இழந்த பிறகு, வாழ்க்கையின் மீதான பிடிப்பையும் இழக்கிறான் அவன். அவமானம் அவனைச் சண்டை வளையத்துக்கு வெளியே மட்டுமல்ல, அவனுடைய சொந்த வாழ்க்கையிலிருந்தும் வெளியே தள்ளிவிடுகிறது. பெற்ற தாயைத் தாக்க முயலுகிறான். கட்டிய மனைவியையும் பிள்ளையையும் கைவிடுகிறான். இந்தப் படத்தின் நாயகனான கபிலன் ஆசானாலும், அம்மையாலும், அகம் கொண்டவளாலும் இறுதியில் மீட்கப்பட்டுவிடுகிறான். ஆனால், நிஜத்தில் எத்தனைக் கபிலன்கள் மீளமுடியாமலேயே அழிந்து போனார்களோ எனும் நினைப்புதான் துயர் தருகிறது.
இறுதி ஆட்டம் நடக்கிறது. கபிலனின் நாக்-அவுட் குத்தில் வேம்புலி வீழ்ந்ததும் தனது அடிபட்ட இடக்கையைக் கபிலன் தொடுவது போன்றொரு காட்சித்துண்டு வருகிறது. அமெரிக்காவின் லூயிஸ்டன் நகரில் நடந்த உலகப் புகழ்பெற்ற போட்டி ஒன்றின், முதல் சுற்றிலேயே சோனி லிஸ்டனை, முகமது அலி நாக்-அவுட் செய்த போது ஒரு புகைப்படம் எடுக்கப்பட்டது. விளையாட்டு உலக வரலாற்றிலேயே மிகச் சிறந்த புகைப்படங்களுள் ஒன்றாகக் கருதப்படும் அந்தப் புகைப்படத்தை நினைவூட்டும் வண்ணம் கபிலனின் அந்த இறுதி வெற்றித் தருணம் படமாக்கப்பட்டிருந்தது. அலி மிகச் சிறந்த குத்துச்சண்டை வீரர், ஆயினும் அவர் அவரது அரசியல் நிலைப்பாடுகளுக்காகவே எப்போதும் நினைவுகூரப்படுகிறார். போலவே சார்பட்டாவின் கபிலனும் அவனது அரசியலுக்காகவே நினைவுகூரப்படுவான்.!
John Doe: 'என் வாய்ஸ் கேட்டு நிறைய பேர் கிண்டல் பண்ணுவாங்க, ஆனா.!'- அர்ஜுன் தாஸ்
November 13, 2026
John Doe Cheyyaru Balu Review – ஜான் டோ செய்யாறு பாலு விமர்சனம்.. பாசிட்டிவ்வா? நெகட்டிவ்வா?
November 13, 2026
தனுஷ் சொன்ன வாழ்த்து.. ட்ரோல் செய்யும் ப்ளூ சட்டை மாறன்.. என்ன செஞ்சாலும் கிண்டலா?
November 13, 2026
John Doe Review: ஜான் டோ விமர்சனம்.. அர்ஜுன் தாஸ் சைக்கோ கில்லரை கண்டு பிடித்தாரா? இல்லையா?
November 13, 2026
அனிருத்திடம் ஆசையை சொன்ன கலாநிதி மாறன்.. மாமனாரின் ஆசையை நிறைவேற்றுவாரா அனி?
November 13, 2026
Scene Box Office: ஏரோப்பிளேன் போல 7வது நாளிலும் எகிறிய வசூல்.. ‘சீன்’ பாக்ஸ் ஆபீஸ் இத்தனை கோடியா?
November 13, 2026
Silver Beach in Cuddalore gets coveted Blue Flag tag
November 13, 2026
Five more resorts near Anaikatti closed over lack of approvals
November 13, 2026
TVK faces criticism from its ally over law and order in Tamil Nadu, allegations against Kallakurichi MLA
November 13, 2026
Microsoft Struggling to Fix Global System Outage Impacting Email Systems and More, Admits Initial Repairs 'Not Taking as Expected'
November 13, 2026
AIADMK slipped to third place in Tamil Nadu elections because of its ‘Kumbhakarna sleep’: Minister Sengottaiyan
November 13, 2026
A nonagenarian from Virudhunagar on a mission to spread Gandhi’s message
November 13, 2026