குரு (சந்தீப் கிஷன்), தன் குடும்பச் சொத்தான பழைய நூலகம் ஒன்றைச் சிரமப்பட்டு நடத்தி வருகிறார். கடன் சுமை ஒரு கோடிக்கும் மேலிருக்க, அதை எப்படியேனும் உடனே அடைக்க வேண்டும் என்ற கட்டாயம். இந்த நிலையில் சூதாட்ட/போதை மருந்து வியாபார கும்பல் ஒன்று இவரின் வாழ்க்கையில் குறுக்கிடுகிறது. மிரட்டலான வீடியோ ஆதாரங்கள், பெரியதொரு சேஃப்டி லாக்கருக்கான சாவி என அனைத்துமே இவர் கையில் வந்து விழ, அதை வைத்து குருவும் அவரின் நண்பர்களும் பணம் சம்பாதித்தார்களா என்பதே அறிமுக இயக்குநர் ஜேசன் சஞ்சய் இயக்கியிருக்கும் இந்த `சிக்மா’.

Sigma Movie Review
Sigma Movie Review

முழுநீள ஆக்ஷன் அவதாரத்தில் நிதானத்துடன் சந்தீப் கிஷன், தேவையான பணியைச் செய்திருக்கிறார். அவரின் காதலியாக ஃபரியா அப்துல்லாவுக்கு வாக்குவாதம் செய்வது, காதலிப்பது, திட்டம்போடும் தன்னுடைய டீமுடன் ஆங்காங்கே தலைகாட்டுவது போன்றவற்றைத் தவிரப் பெரிய வேலையில்லை. டாக்டராக ராஜு சுந்தரம் காமெடி மீட்டர் பிடிபடாமல் நம்மைச் சிரிக்க வைக்க ரொம்பவே சிரமப்படுகிறார். அன்புதாசனின் கவிதை கணேஷ் கதாபாத்திரம் ஐடியாவாக நன்றாக இருந்தாலும் அங்கும் காமெடி சிக்கலையே சந்திக்கிறது. சம்பத்ராஜ், ஷிவ் பண்டிட், மகாலட்சுமி, யோக் ஜேபி, கிரண் என அரை பக்கத்துக்கு அட்டெண்டன்ஸ் எடுக்கும் அளவுக்கு வில்லன்கள்! ஆனால் அவர்களின் கதாபாத்திரங்கள் பயணித்த விதத்தில் துளியும் லாஜிக் இல்லாததால் யாருடைய நடிப்பும் நம் மனதில் தங்கவில்லை.

ஒரு ஹெய்ஸ்ட் ஆக்ஷன் டிராமாவுக்கான உழைப்பைக் கொடுத்திருக்கிறது ஒளிப்பதிவாளர் கிருஷ்ணன் வசந்த்தின் கேமரா. ஆனால் படத்தொகுப்பாளர் பிரவீன் கே.எல், டிவி சீரியல் கணக்காக இத்தனை ஃபிளாஷ்கள் அடிக்கும் எடிட்டிங் பாணியுடன் படத்தை நகர்த்தியது ஏனோ?! ஆங்காங்கே முக்கியத்துவமே இல்லாமல் வரும் இந்த வகை ‘டிரான்சிஷன்கள்’ அதீத உறுத்தல்! இசையமைப்பாளர் தமனின் இசையில் ‘சுலோச்சனா’ பாடல் ஸ்பீட்பிரேக்கராக வந்தாலும் தாளம் போட வைக்கிறது. அதேபோல, ஆக்ஷன் திரைக்கதைக்கு ஏற்ற மிரட்டலான பின்னணி இசையைச் சிறப்பாகவே வழங்கியிருக்கிறார்.

Sigma Movie Review
Sigma Movie Review

பணம் தேவை என்ற நிர்ப்பந்தத்திலிருக்கும் ஓர் இளைஞனுக்குக் கோடிக்கணக்கில் பணம் கைக்கு வரும் வாய்ப்பு வந்தால், அவனுடன் அதே எண்ணத்துடன் இருக்கும் இன்னும் சில நபர்களும் டீமாக இணைந்தால் என்னவெல்லாம் நடக்கும் என்பதை ஆக்ஷன் த்ரில்லராகக் கொடுக்க நினைத்திருக்கிறார் இயக்குநர் ஜேசன் சஞ்சய். ஆனால், தொடக்கத்தில் வரும் நாயகனின் கதாபாத்திரம், அவனின் பின்னணி, காதல் அத்தியாயம் உருவாகும் இடம், காமெடிக்கு எனச் சேர்க்கப்படும் பிற பாத்திரங்கள் என அந்த டிராமாவே தேவைக்கு அதிகமாக நீள்வதால் அங்கேயே ‘டல்’ அடிக்க ஆரம்பித்துவிடுகிறது திரைக்கதை.

தியேட்டருக்குள் சூதாட்ட கிளப் நடத்தும் வில்லன், அவனுடைய ‘விசுவாசமான’ அடியாள், கொண்டா ரெட்டியின் கடத்தல் சாம்ராஜ்ஜியம், இவர்களை வைத்தே பணம் சம்பாதிக்க நினைக்கும் போதை மருந்து சப்ளையர் என வில்லன்களின் பின்னணிக்கு எழுத்தாக மெனக்கெட்டிருக்கிறார் சஞ்சய். ஆனால், அவர்கள் எடுக்கும் முடிவுகள், அதையொட்டி காட்சிகள் நகரும் விதம் என எதிலுமே நம்பகத்தன்மை இல்லை. இடைவேளையில் பார்க்கிங்கில் நடக்கும் அந்த பென் டிரைவ் – பணம் பண்டமாற்று டிராமாவும், சந்தீப் கிஷன் – ஷிவ் பண்டிட் சண்டையில் சம்பத்ராஜின் கதாபாத்திரம் உள்ளே வருவதும் நல்லதொரு டிராமா!

Sigma Movie Stills
Sigma Movie Stills

அந்த இடைவேளை காட்சி எதிர்பார்ப்பைக் கூட்டினாலும் அதன் பிறகு ஹீரோ அண்ட் கோ போடும் பிளான்கள், வில்லன்கள் நிகழ்த்தும் ஆக்ஷன் பிளாக் என எதிலுமே புதுமையும் இல்லை, லாஜிக்கும் இல்லை. ட்விஸ்ட் என வைக்கப்பட்ட விஷயங்களும் நம்மை எந்த விதத்திலும் ஆச்சர்யப்படுத்தவில்லை. ‘பிளான்’ என்ற வார்த்தை வசனங்களில் மட்டும் அதிகமாக உச்சரிக்கப்படுகிறதே தவிர, செயலில் எங்குமே புத்திசாலித்தனம் எட்டிப் பார்க்கவில்லை. ஆரம்பத்தில் அத்தனை லாக்கர்களைக் காட்டிவிட்டு, ஒரு பரபர ‘ஹெய்ஸ்ட் டிராமா’வுக்கான எதிர்பார்ப்பையும் கிளப்பிவிட்டு, பின்னர் சாதாரண ஆடு – புலி ஆட்டமாக ஏமாற்றுகிறது எழுத்து! இத்தனை கொலைகள், கடத்தல், சூதாட்ட கிளப் என எல்லாமே இருந்தும், க்ளைமாக்ஸில் மட்டுமே வந்து கதவைத் தட்டுகிறது காவல்துறை… ஆவ்வ்வ்வ்!

கதாபாத்திர வரைவுகளுக்கு மெனக்கெட்டாலும், கதை, திரைக்கதை, மேக்கிங் என எதிலும் புதுமையும், அழுத்தமும் இல்லாததால் மற்றுமொரு டெம்ப்ளேட் சினிமாவாக சிக்கித் தவிக்கிறது இந்த `சிக்மா’.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

See all 152 in Cinema →

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *