நள்ளிரவு நேரம். போக்குவரத்தற்ற நடுச்சாலை. வின்னிங்கின் கைப்பிடியில் ஒரு சிறுவன் மாட்டிக் கொண்டிருக்கிறான். வின்னிங் துப்பாக்கியை அந்தச் சிறுவனின் தலையில் வைத்திருக்கிறான். வின்னிங்கின் காதில் இன்ஸ்பெக்டர் நீலகண்டன் இன்ஸ்ட்ரக்ஷன்ஸ் கொடுத்துக் கொண்டிருக்கிறார். இவர்களுக்கு எதிரே அந்தச் சிறுவனின் தந்தை, சென்னையின் மிகப்பெரிய தாதாவான பாண்டியன் பதற்றத்தோடு நின்று கொண்டிருக்கிறான். அடுத்து என்ன நடக்கப்போகிறது?
முன்னதாக யார் இந்த வின்னிங் என்று பார்க்க வேண்டியதிருக்கிறது. மல்லி என்பவன் தலைமையிலான ஒரு சிறிய ரவுடி கும்பல், குழந்தைகளைக் கடத்திச் சென்று, பெற்றோரிடம் கட்டப்பஞ்சாயத்து செய்து கொண்டிருக்கிறார்கள். அந்தக் குழுவில் புதிதாக வந்து சேர்ந்தவன்தான் வின்னிங். மல்லி போன்றோருக்கு திறமையான, வெட்டுக்குத்துக்கு அஞ்சாத ஆட்கள் மட்டுமல்லாது சொன்னதை மட்டுமே செய்யக்கூடிய, அதிகமாக சிந்திக்காத ஆட்களுமே கூட தேவைப்படுவார்கள் போலிருக்கிறது. இக்கட்டான நேரங்களில் அவர்களை மாட்டிவிட்டுவிட்டு இவர்கள் தப்பிச் செல்லும் பிளான் ’பி’யாக உதவக்கூடும் என்று கூட மல்லி, வின்னிங்கை வேலைக்குச் சேர்த்துக் கொண்டிருக்கலாம்.

அவனை ஒரு பள்ளியிலிருந்து கார்த்திக் எனும் மாணவனை கடத்திக் கொண்டு வரச்சொல்லுகிறார்கள். அந்தப் பையனுக்காக கடைக்குப் போய், ”ஒரு ரூபா சாக்லெட் பத்து கொடுங்க” என்று சாக்லெட் வாங்குகிறான் வின்னிங். அது கொடுக்கப்பட்டதும் கடைக்காரரிடம், ”எவ்வளவு ஆச்சு?” என்று கேட்கிறான். அப்படிப்பட்டவன்தான் வின்னிங். அவனா ஒரு வகுப்பிலிருக்கும் நான்கு கார்த்திக்குகளிலிருந்து சரியான கார்த்திக்கை அழைத்து வந்திருக்கப் போகிறான்? அவன் தவறுதலாகக் கூட்டிக்கொண்டு வந்ததோ, தாதா பாண்டியனின் பையனை!
இப்போது மல்லி என்ன செய்யப்போகிறான்? பாண்டியன் சாதாரண ஆள் கிடையாது, பல விதமாக யோசித்துப்பார்த்தும், பாண்டியன் நம்மை சும்மாவிடமாட்டான் எனும் உண்மையை உணர்ந்து நடப்பது நடக்கட்டும் என்று ரிஸ்க்கியான ஒரு முடிவை எடுக்கிறான் மல்லி. இந்த விவாதத்தின் போது, பையனை ஊனப்படுத்தி அனுப்பிவைத்துவிடலாம் எனும் பேச்சு வருகிறது. அப்போது இன்னொருவன், பையன் நம்மைப் படம் வரைந்து காண்பித்துவிட்டால் என்ன செய்வது என்று கேட்கும் போது, ’படம் வரைந்து காண்பிக்க பெரிய படிப்பெல்லாம் படிச்சிருக்கணும். பையன் 5ம் வகுப்புதான் படிக்கிறான். அவனால் முடியாது’ என்கிறான் வின்னிங். படம் வரையத் தெரியாமலிருப்பதற்காக இப்படி ஒரு காரணத்தைச் சொல்லி நாம் யாரும் கேள்விப்பட்டிருக்கவே முடியாது.

இப்படித்தான் இந்தப் படத்தின் கதாபாத்திரங்கள் அத்தனை பேருமே, திரைக்கதை எழுதும் எழுத்தாளரைப் பற்றிக் கவலைப்படாமல் அவர்களாகவே சொந்தமாக ஒரு முடிவெடுக்கிறார்கள், செயல்படுகிறார்கள். வெவ்வேறு கூறுகளை ஒன்றிணைத்து உருவாக்கப்படும் ஓர் அற்புதமான கொலாஜ் ஓவியத்தைப் போல, அந்தப் பாத்திரங்களுக்கு ஊடாகப் பயணித்து, லாஜிக்கலான, சுவாரசியமான திரைக்கதையைப் பின்னிக் கொண்டு வந்து நம்மிடம் கொடுத்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.

பரணி என்னும் ஓர் இளைஞன் வேலை தேடி சென்னைக்கு வருகிறான். ஒரு ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் ஆர்த்தி எனும் பெண்ணின் உதவியால், அவளுடைய நிறுவனத்திலேயே அவனுக்கு வேலையும் கிடைக்கிறது. ஜீவா என்னும் இன்னொரு இளைஞன், சற்று முரடனாக இருந்தாலும் நல்லவன். அவன் ஆர்த்தியை காதலிக்கிறான். ஆர்த்திக்கும் அவன் மீது காதல் இருக்கிறது. அவனுடைய சித்தப்பா இன்ஸ்பெக்டர் நீலகண்டன். ஆர்த்தியின் பின்னால் சுற்றிக் கொண்டிருக்கும் ஒரு ரவுடியை ஜீவா தாக்குவதால், அவர்களது பதில் நடவடிக்கையில் தவறுதலாக பரணி சிக்குகிறான். வின்னிங் எனும் ஒரு முட்டாள் கார்த்திக் எனும் தவறான பையனைக் கடத்திவிடுவதால் இவர்களோடு, மல்லியும், பாண்டியனும், நட்ராஜ் எனும் டிரைவரும் கதைக்குள் வருகிறார்கள். அந்த ஓரிரவில் பல்வேறு தொடர்ச்சியான சம்பவங்கள் நடந்துகொண்டே இருக்கின்றன. ஒவ்வொன்றுக்கும் இடையே மிக நுணுக்கமான தொடர்புகளும் இருக்கின்றன.
மாநகரத்தின் கதை, திரைக்கதையை எழுதி இயக்கியிருந்தவர் லோகேஷ் கனகராஜ். இப்படி ஒரு தொய்வில்லாத, அட்டகாசமான திரைக்கதையால் லோகேஷ் கனகராஜ், தமிழ் சினிமாவில் தன் வருகையை மிக அழுத்தமாகப் பதித்தார். இதன் தொடர்ச்சியாக கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ, கூலி என அடுத்தடுத்து மிகப்பெரிய வளர்ச்சியடைந்தார் லோகேஷ். ஆனாலும் மாநகரமும், கைதியும் ஏற்படுத்திய சிறப்பான ரசிக அனுபவத்தை அதன் பிறகு அவர் தரவே இல்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கதுதான்.
பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ்க்காக இந்தப் படத்தைத் தயாரித்திருந்தவர் எஸ்.ஆர்.பிரபு. படத்தின் ஒளிப்பதிவு எஸ்.கே.செல்வகுமார். இது சினிமாவா அல்லது ஓவியக் கண்காட்சியா என்று நம்மை வியக்கவைக்கும் வண்ணமிருந்த ’மெகந்தி சர்க்கஸ்’ படத்தின் ஒளிப்பதிவாளரான செல்வகுமாரின் முதல் படம் இந்த மாநகரம். ஒரு காட்சிக்கு ஊடாக இன்னொன்று என வித்தியாசமாகச் செய்யப்பட்டிருந்த பிலோமின் ராஜின் எடிட்டிங் படத்துக்கு, ஒரு புதிய பலத்தைச் சேர்த்திருந்தது. இசையமைப்பாளர் ஜாவித் ரியாஸ். கதைக்குப் பொருத்தமான பரபரப்பான பின்னணி இசையோடு பாடல்கள் களம் விலகாமலிருந்தன. பெரும்பாலான பாடல்களை லதானந்த் எழுதியிருந்தார். சூரஜ் ஜெகன் பாடிய ’வாழ்வே ஒரு போரோ’, ’இரவு வேட்டையாடுதே’ போன்ற பாடல்கள் குற்றப்பின்னணி, திரில்லர் பின்னணிக்குப் பொருத்தமாக அமைந்தன.

பரணி கதாபாத்திரத்தில் ஸ்ரீ நடித்திருந்தார். வழக்கு எண் 18/9-ல் அறிமுகமான ஸ்ரீக்கு இந்தப் படம் ஒரு முக்கியமான படமாக அமைந்தது. தெலுங்கில் அறிமுகமாகி, இப்போதும் தெலுங்கில் தொடர்ந்து இயங்கி வரும் சந்தீப் கிஷன் அட்டகாசமான ஆக்ஷன் கதாபாத்திரமான ஜீவாவாகவும், ரெஜினா கஸாண்ட்ரா ஆர்த்தியாகவும் மிகப் பொருத்தமான நடிப்பைக் கொடுத்திருந்தனர். மல்லியாக அருண் அலெக்ஸாண்டர், பாண்டியனாக மதுசூதன், நட்ராஜாக சார்லி, நீலகண்டனாக ரவி வெங்கட் ஆகியோர் நடித்திருந்தார்கள். வின்னிங்காக முனிஷ்காந்த் பட்டையைக் கிளப்பியிருந்தார்.

நாம் கடத்தி வந்தது பாண்டியனின் பையன் என்று தெரிந்ததிலிருந்து மல்லியின் குழுவிடமிருந்து தப்பிச் செல்லும் யோசனையிலிருக்கிறான் வின்னிங். ஒரு தடவை மல்லியின் ஆட்டோ ஸ்டார்ட் ஆகாததால், அவனது உதவியாளனிடம் மெக்கானிக்கை கூட்டிவருகிறேன் என்று சொல்லிவிட்டுச் செல்லுகிறான் வின்னிங். எப்போது வேண்டுமானாலும் அவன் தப்பிக்கக்கூடும் என்பது தெரிந்திருந்தும் அதற்கு அனுமதித்திருக்கிறான் அந்த உதவியாளன். தப்பிச் செல்லும் வின்னிங்கும், ரொம்ப சின்சியராக மெக்கானிக்கிடம் ’ராஜினாமா’ கடிதமெல்லாம் எழுதிக் கொடுத்தனுப்பிவிட்டுத்தான் சென்றிருக்கிறான். என்ன ஒரு சின்சியாரிடி!
அப்படி அவசரமாக அவன் எங்கே தப்பிச் சென்றானாம்? சந்தேகக் கேஸில் போலீசிடம் மாட்டிக்கொள்வதற்காகத்தான்! போலீஸ் ஜீப்பில் உட்கார்ந்திருக்கும் வின்னிங்கைப் பார்த்து, ’இவன்லாம் ஒரு ஆள்னு புடிச்சி வைச்சிருக்கியா, மூஞ்சியைப் பார்த்தால் தெரியவேண்டாமா, இவன்கிட்ட இருக்கிறதை பிடுங்கிக்கொண்டு அனுப்பிவிடுய்யா’ என்று கான்ஸ்டபிளிடம் சொல்கிறார் நீலகண்டன். அந்தக் கான்ஸ்டபிள், வின்னிங்கை ’இறங்கிப் போடா’ என்று சொன்னால், ’என்ன… என்கவுண்டர்ல என்னைப் போடப் பாக்குறீங்களா, நான் போக மாட்டேன்’ என்று பயத்தில் பிடிவாதம் பிடிக்கிறான் வின்னிங். அவன் பயத்திலும் நியாயம் இல்லாமலில்லை. பாண்டியன் பையனைக் கடத்திய வழக்கில்தான் தன்னைப் பிடித்துவைத்திருக்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டிருக்கிறான் அவன். அப்போது அவன் கொடுக்கும் தகவல்களிலிருந்துதான் நீலகண்டன் மொத்தக் கதையுமே விளங்கிக்கொண்டு, அவனுக்கென்று ஒரு தனித் திட்டத்தையும் போட்டுக்கொள்கிறான்.
ஜீவா, பரணி போன்ற பிரதான கதாபாத்திரங்களைப் பற்றிப் பேச விடாமல் இன்னும் வின்னிங் நம்மை ஆக்கிரமித்திருக்கிறான். ஏனென்றால் வின்னிங் ஒரு முட்டாள் மட்டுமே என்றும் சொல்லிவிட முடியாது. இக்கட்டான சில நேரங்களில் சரியாகவும் சிந்திக்கிறான் அவன். இப்படி ஒரு சுவாரசியமான கதாபாத்திரத்தை நாம் மிக அரிதாகத்தான் சினிமாக்களில் பார்க்க முடியும்.
மேற்குறிப்பிட்ட அந்த இறுதிக் காட்சிக்கே மீண்டும் வருவோம். பலராலும் அலைக்கழிக்கப்பட்டு யார் நம்மோடு விளையாடுகிறார்கள் என்பது புரியாமல் மிகப்பெரிய குழப்பத்திலும், கோபத்திலும் நின்றுகொண்டிருக்கிறான் பாண்டியன். கேங்ஸ்டர் ஆகும் கனவெல்லாம் நமக்கு செட் ஆகாது என்பதை புரிந்துகொண்டு அந்தமானுக்கே போய்விடலாம் என்று கிளம்பிய வின்னிங், இப்போது நீலகண்டனின் சூழ்ச்சியால் பாண்டியனுக்கு எதிராக நிறுத்தப்பட்டிருக்கிறான். அவனுடைய பெரிய சந்தேகம், நாம் இந்தப் பாண்டியனை மிரட்டிப் பணத்தைப் பெற்றுக்கொண்டு, சிறுவனை சரியாக ஒப்படைத்துவிட முடியுமா? அப்படி முடிந்தாலும் இந்தப் பாண்டியன் அதன் பின்னர் நம்மைச் சும்மா விட்டுவிடுவானா? இன்ஸ்பெக்டர் நீலகண்டன் பேசியபடி நம் பங்கைத் தருவானா என்பதுதான்.

இந்த நிலையில் செய்வதறியாமல் பதறியபடி நிற்கிறான் வின்னிங். தன் காதலி, முதல் முறையாகப் பச்சைக்கொடி காண்பித்திருக்கிறாள், நாம் இப்போது வெளியூர் செல்லவேண்டாம் எனும் முடிவோடு பயணத்தை ரத்து செய்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருக்கும் ஜீவா இந்தக் காட்சியைப் பார்க்கிறான். தாம் போலீசிடம் ஒப்படைத்த பையன் எப்படி இவன் கையில், அதுவும் துப்பாக்கி முனையில் என்ற குழப்பமும், அதிர்ச்சியும் அவனுக்கு. அந்த நேரத்தில், ’துப்பாக்கியைப் பையன் தலையில் வை’, ’பணப்பையைத் தூக்கிப் போடச்சொல்’ என்று போனில் வின்னிங்கின் ஒவ்வொரு அசைவையும் கட்டுப் படுத்திக்கொண்டிருக்கும் நீலகண்டனிடம் ஒரு கேள்வியைக் கேட்கிறான் வின்னிங்.
”என்ன சார் பைத்தியக்காரன் மாதிரி பேசிகிட்டிருக்கீங்க? நாம ரெண்டு பேரும் பேசிகிட்டிருந்ததைத்தான் இவ்வளவு நேரம் பையன் கேட்டுகிட்டிருந்தானே, அவனை விட்டதும் அப்படியே அதையெல்லாம் அவன் அப்பன்கிட்ட போட்டுக் குடுத்துட மாட்டானா… எனக்குப் பிரச்சினை இல்ல, நான் அந்தமானுக்குப் போயிடுவேன், நீங்க மாட்டிப்பீங்களே?”
பாண்டியனிடமிருந்தோ, நீலகண்டனிருந்தோ வின்னிங் இன்னும் தப்பிக்கவே இல்லை, அதற்குள் அவர் பாதுகாப்பாக அந்தமானுக்குப் போய்விடுவாராம். கூடவே, அந்த நிலையிலும் தன்னைக் கட்டாயப்படுத்தி பாண்டியனுக்கு எதிராக இப்படி நிறுத்தியிருக்கும் நீலகண்டனின் பாதுகாப்பைப் பற்றிய அக்கறை வேறு! நீலகண்டனுக்கும், அப்போதுதான் தன் திட்டத்திலிருக்கும் பெரிய ஓட்டையே தெரிகிறது. ஜீவாவின் தலையீட்டால் பையன் காப்பாற்றப்பட்டு, வின்னிங்கும் சேதாரமில்லாமல் தப்புகிறான்.

ஒரு மாநகரத்தில் லட்சக்கணக்கான மனிதர்கள் தங்களுக்கான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், ஒரு ரவுடியின் சிறிய தவறால், ஒரு கார் டிரைவரின் பரிவினால், ஒரு அப்பாவியின் முட்டாள்தனத்தால், ஒரு போலீஸ்காரனின் பேராசையால், ஒரு காதலியின் அன்பினால் முன் பின் தெரியாத சிலரின் வாழ்க்கைகள் ஓரிரவில் ஒன்றுக்கொன்று குறுக்கிடுகின்றன. அந்தச் சிறிய குறுக்கீடுகள் எவ்வளவு பெரிய விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்பதைத்தான் ‘மாநகரம்’ இத்தனை பரபரப்பாகச் சொல்கிறது. அதனால்தான் இந்தப் படத்தை ஓர் இயக்குநர் இயக்கிச் செல்கிறார் என்ற உணர்வே நமக்கு வருவதில்லை. தங்களுடைய வாழ்க்கையைத் தாங்களே நடத்திக்கொண்டிருக்கும் இந்த மனிதர்கள்தான், ஒருவரை ஒருவர் எதிர்பாராதவிதமாகச் சந்தித்து, விலகி, சண்டையிட்டு, உதவிக்கொண்டு ஒரு கதையை உருவாக்கிக் கொண்டுவிட்டார்கள் என்ற மாயையை ஏற்படுத்திவிடுவதுதான் இந்த மாநகரத்தின் வெற்றி.
Teejay: "கடந்த 10 வருடங்களாக நான் அமைதியாகவே இருந்தேன்" – டீஜே மீது பிரகதி புகார்; பின்னணி என்ன?
October 20, 2026
உங்க பொண்டாட்டி பேர்ல தொழில் பண்ணா விளங்காது.. குணசேகரன் பிளான்.. எதிர்நீச்சல் தொடர்கிறது
October 20, 2026
Dorothy OTT: கலாச்சார சீரழிவு? பெரும் சர்ச்சையை கிளப்பிய டோரதி.. ஓடிடி ரிலீஸ் தேதி!
October 20, 2026
கொட்டும் மழையில் ஓடோடி வந்த சூர்யா.. இசையமைப்பாளர் தேவா படத்திற்கு அஞ்சலி!
October 20, 2026
இராவணனாக நடிப்பது ஈஸி.. இராமனாக நடிப்பது கஷ்டம்.. யஷ் ஓபன் டாக்
October 20, 2026
தலைவரு நிரந்தரம்.. லியோ தமிழ்நாட்டு வசூல் ரெக்கார்டு காலி.. 500 கோடி கிளப்பில் இணைந்த ஜெயிலர் 2!
October 20, 2026
A 1930 law, 50% tariffs and a new lawsuit: Trump faces fresh challenge over Canada duties
October 20, 2026
Delhi airport traffic hits record first-half high with 38.5 million passengers, eyeing expansion
October 20, 2026
Delhi AQI to slip into 'poor' category from Wednesday, pollution levels to rise
October 20, 2026
Marco Rubio in India: Can US biz diplomacy ease Trump tensions over tariffs, Russian oil and bring trade deal closer?
October 20, 2026
Michael Bloomberg backs Democrats with $80 million but remains wary of party’s leftward shift: Report
October 20, 2026
US, India ‘very, very close’ to trade deal, says Rubio
October 20, 2026