ஒரு கிராமத்து சினிமா தியேட்டரில் வைத்து பதைபதைப்பை ஏற்படுத்தும் ஒரு சம்பவம் நடக்கிறது. வடக்கூரான் எனப்படும் நரசிம்மன், சினிமா ஓடிக்கொண்டிருக்கும்போது நடுவே கழிப்பறைக்குச் செல்வதற்காக எழுந்து தனியே போகிறான். அதற்காகவே காத்திருந்த சிவசாமியின் பையன் முருகனும் அவனுக்குப் பின்னாலேயே செல்கிறான். வடக்கூரான் ஆதிக்கச் சாதியைச் சார்ந்தவன். பெரும் செல்வந்தன். ஊரில் பெரும் செல்வாக்கு மிக்கவன். முருகனோ ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த, எந்தப் பின்புலமும் இல்லாத ஓர் இளைஞன். முருகன் தன்னைத் தாக்க வருவதைப் பார்த்து, எதிர்த்து அடிக்க வருகிறான் வரக்கூரான். ஆனால், இளமைத் துடிப்புக்கு முன்னால் அவனால் நிற்கமுடியவில்லை.

அசுரன்

காலில் போட்டிருந்த செருப்பைக் கழற்றி, வடக்கூரானின் செவிட்டில் பளார் பளார் என கோபம் கொப்பளிக்க அறைந்து தீர்க்கிறான் முருகன். எந்நேரமும் ஆள் அம்பு என்று சுற்றிக் கொண்டிருக்கும் வடக்கூரான் அப்படியொரு சம்பவம் தனக்கு நடக்கும் என்பதைக் கற்பனை கூட செய்து பார்த்திருக்க முடியாது. இனியும் அப்படி ஒரு சம்பவம் நடந்ததை அவன் யாரிடமும் சொல்லி அமைதியுற முடியாது. வாழ்நாள் முழுதும் உள்ளுக்குள் குமைந்துகொண்டிருக்க வேண்டியதுதான்.

முருகன் குடும்பத்துக்குச் சொந்தமான இடத்தின் மீது வடக்கூரானின் தேவை உச்சத்திலிருக்கிறது. சுற்றிலுமிருக்கும் அவனது இடத்தை முழுமையாக்க விடாமல் அது தடுத்துக்கொண்டிருக்கிறது. அதனால் சிவசாமியின் மீது பெருவன்மத்தோடு இருக்கிறான் வடக்கூரான். அது நிலத் தேவை என்பதை விடவும், ஒரு தாழ்த்தப்பட்ட சாதிக்காரனிடம் வேண்டி நிற்கும் நிலைமை ஏற்பட்டுவிட்டதே என்பதுதான் உண்மையான காரணம். பிள்ளைகளின் எதிர்காலம் கருதி சிவசாமியாலும் அதை விட்டுக்கொடுக்க முடியவில்லை.

வயலுக்குத் தண்ணீர் பாய்ச்சும் தகராறில் முருகனின் அம்மா பச்சையம்மாளை கை நீட்டி அடித்துவிடுகிறான் வடக்கூரானின் பையன். அதைப் பார்த்து அவனை அடித்து விரட்டுகிறான் முருகன். அதற்குப் பதிலாக முருகனைச் சிறையில் வைத்துக்கொண்டு முருகனின் தந்தை சிவசாமியை வீடுவீடாகக் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்க வைக்கிறார்கள். அது தெரிந்த முருகன் அதன் தொடர்ச்சியாகச் செய்த காரியம்தான் நரசிம்மனை இப்படித் தனிமையில் செருப்பால் அடித்து அவமானப்படுத்தியது. இனி இது இத்தோடு நிற்கப்போவதில்லை என்று நாம் பதைபதைத்தபடியே தொடர் நிகழ்வுகள் நடந்தேறுகின்றன.

முருகன் கொடூரமாகக் கொல்லப்படுகிறான். இருக்கும் மற்ற இரு பிள்ளைகளுக்காக சிவசாமி தாங்கொணாத துயரத்தை விழுங்கிக்கொண்டு வாழத் தலைப்படுகிறான். ஆனால், இதனால் தந்தையை வெறுக்கும் இரண்டாவது பிள்ளை சிதம்பரம் யாரும் எதிர்பாராத ஒரு காரியத்தைச் செய்துவிடுகிறான். அவன் செய்தது என்ன? அவனைக் காக்க சிவசாமி என்னவெல்லாம் செய்ய வேண்டியிருந்தது என்பதையெல்லாம் விவரிக்கிறது இந்த அசுரன்.

அசுரன்

சிவசாமி கதாபாத்திரத்தில் தனுஷ், தன் உடல்மொழியிலும் குரலிலும் ஒரு முதிர்ந்த மனிதனின் வயதையும் அனுபவத்தையும் கொண்டுவந்திருந்தார். சிவசாமி வன்முறையின் விளைவுகளை ஏற்கெனவே அனுபவித்தவன். அதனால், குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக மான, அவமானம் பாராது அடங்கிப் போகிறான். அவனுடைய மௌனத்துக்குப் பின்னால் பயமும், கடந்த கால அனுபவமும், குடும்பத்தின் மீதான பொறுப்பும் இருக்கின்றன. இந்த முரண்பாடுகளை தனுஷ் ஒரே கதாபாத்திரத்தில் கச்சிதமாக வெளிப்படுத்தியிருந்தார். தனுஷ் இந்தத் தலைமுறையில், தமிழின் சிறந்த நடிகர் என்பதைத் தயக்கமின்றிச் சொல்லலாம். இந்தக் கதாபாத்திரத்துக்காக அவருக்கு 67-வது தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த நடிகருக்கான விருது கிடைத்தது.

தனக்கு இணையாக நடித்த மஞ்சு வாரியரை விட 5 வயது இளையவர் தனுஷ் என்பது ஒரு கூடுதல் சுவாரசியமான அம்சம். பொதுவாக தமிழ்ப் படங்களில் இப்படியான ஒரு சேர்க்கையைப் பார்ப்பது அரிது. நெல்லை மாவட்டத்தின் ஒரு கிராமத்துப் பெண்ணான பச்சையம்மாளாகவே முழுமையாக மாறிவிட்டிருந்தார் மஞ்சு வாரியர். நடிப்புக்காக தேசிய விருது வென்ற புகழ்பெற்ற மலையாள நடிகையான அவருக்கு இது முதல் தமிழ்ப் படம்.

இவர்களின் இளைய மகன் சிதம்பரமாக நடிகர் கருணாஸின் மகன் கென் நடித்திருந்தார். தனுஷ் மற்றும் மஞ்சுவுக்கு இணையாக, படம் நெடுக வரும் முக்கியமான கதாபாத்திரம் அவருடையது. மூவரும் மிகச்சிறப்பாகச் செய்திருக்கிறார்கள்.

சிவசாமியின் மூத்த மகன் முருகனாக டீஜே அருணாசலம், பச்சையம்மாளின் அண்ணனாக பசுபதி, வழக்கறிஞர் வேணுகோபால் சேஷாத்ரியாக பிரகாஷ் ராஜ், வடக்கூரான் நரசிம்மனாக ஆடுகளம் நரேன் ஆகியோர் தங்கள் கதாபாத்திரங்களுக்குப் பொருத்தமாக அமைந்திருந்தார்கள். அம்மு அபிராமி, பாலாஜி சக்திவேல், ஏ.வெங்கடேஷ், பவன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

ஒளிப்பதிவு ஆர். வேல்ராஜ். வெம்மையான நிலப்பரப்பில் முருகன் கொல்லப்பட்டுக் கிடக்கும் காட்சி நம்மைப் பதறவைத்தது. ஃப்ளாஷ்பேக்கில் வரும் கடந்த கால கிராமத்தின் வாழ்க்கைச் சூழல் சிறப்பாகப் பதியப்பட்டிருந்தது. பீட்டர் ஹெய்ன் வடிவமைத்திருந்த சண்டைக்காட்சிகள் குறிப்பிடத் தகுந்தவை. மகனுக்காக சிவசாமி தன் கூட்டிலிருந்து வெளியேறிக் களமிறங்கும், ஆற்றங்கரை மணற்பரப்புச் சண்டைக்காட்சி வேல்ராஜின் ஒளிப்பதிவில் தகித்தது.

இசை ஜி.வி. பிரகாஷ் குமார். படத்தின் உணர்வுகளையும் பதற்றத்தையும் தாங்கிச் செல்லும் பின்னணி இசையும், பாடல்களும் படத்துக்குப் பலம் சேர்த்தன. மகனின் இழப்பைத் தாங்க முடியாமல் மனம் பேதலித்து அலையும் பச்சையம்மாளின் ஏக்கம், ’எள்ளு வய பூக்கலையே’ பாடலாக வெளிப்பட்டு கண்ணீரைத் துளிர்க்கச் செய்தது. அதை எழுதியது யுகபாரதி, பாடியது சைந்தவி. ’வா அசுரா வா’ பாடலை எழுதிப் பாடியிருந்தவர் அருண்ராஜா காமராஜ். பிற பாடல்களும் பெருமளவில் கவனிக்கப்பட்டன.

அசுரன்

கலைப்புலி எஸ். தாணு அவருடைய வி கிரியேஷன்ஸுக்காக இந்தப் படத்தைத் தயாரித்திருந்தார். எழுத்தாளர் பூமணியின் ’வெக்கை’ எனும் நாவலைத் தழுவி, இந்தப் படத்தின் திரைக்கதை எழுதப்பட்டிருந்தது. அதை வெற்றிமாறன், மணிமாறன் இணைந்து உருவாக்கியிருந்தார்கள். வசனம் எழுதியவர் எழுத்தாளர் சுகா. படத்தை இயக்கியது வெற்றிமாறன். ஏற்கெனவே பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை படங்களின் மூலம் தொடர்ச்சியாக இணைந்து பணியாற்றியிருந்த தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணி, இந்தப் படத்திலும் தங்களது திறமையை நிரூபித்தது. இந்தப் படத்தில் நெல்லை மண்ணின் பேச்சுவழக்கு மிக இயல்பாக பதிவாகியிருந்தது, அதற்கு சுகாவின் மேற்பார்வை காரணமாக அமைந்திருக்கலாம்.

வெக்கை நாவலின் கதை, சிதம்பரம் வடக்கூரானைக் கொல்லும் இடத்தில் தொடங்குகிறது. ஏழு நாட்கள் போலீஸிலும், எதிரிகளிடமும் சிக்காமல் காடு, மேடெல்லாம் சிதம்பரம், தன் தந்தையுடன் (சிவசாமி என்ற பெயர் நாவலில் இல்லை, சொல்லப்போனால், சிதம்பரம் எனும் பெயரைத் தவிர, வேறு எந்த கதாப்பாத்திரங்களின் பெயரும் நாவலில் கிடையாது) சுற்றித் திரிந்துவிட்டுப் பின்னர் தகுந்த ஏற்பாடுகளுடன் இருவரும் கோர்ட்டில் சரணடையக் கிளம்புவதோடு முடிகிறது. அந்த ஏழு நாட்களும், அவர்கள் எப்படி சரியான உணவு இல்லாமல், உறங்க இடமில்லாமல், அரைகுறைத் தூக்கத்தோடும், பதட்டத்தோடும் அலைந்து திரிந்தார்கள் என்பதுதான் வெக்கை! இடையிடையே, சிதம்பரம் யாரை, எதற்காகக் கொலை செய்தான் என்பதும், அதன் பின்னணியும், தந்தையின் பூர்வீகமும் போகிறபோக்கில் சொல்லப்படுகிறது.

ஆனால், அசுரனில் அவர்களின் அலைச்சல் என்பது ஒரு பகுதி மட்டுமே! வெக்கையில் விவரிக்கப்படாத பல இடங்கள் அசுரனில் விவரிக்கப்பட்டுள்ளன. வெக்கையில் இல்லாத கூடுதல் விஷயங்கள் அசுரனில் பேசப்பட்டுள்ளன. வெக்கையில் சாதியும், நில உரிமையும், வடக்கூரானின் பிரச்சினை. ஆனால், அசுரன் இந்தப் பின்னணியை இன்னும் விரிவுபடுத்துகிறது. பஞ்சமி நில அபகரிப்பு, தீண்டாமை, சாதிக்கொடுமை, கீழ்வெண்மணியை நினைவூட்டும் கொலைகள், அதற்குப் பழிக்குப் பழி போன்ற வெக்கையில் இல்லாத, ஆனால் அதற்கு நெருக்கமான விசயங்களனைத்தும் அசுரனில் சிவசாமியின் பூர்வீகக்கதையில் பேசப்படுகிறது. ’சாதிய வன்மம் கொண்ட பணக்காரர்களும், அவர்களுக்குத் துணைபோகும் அதிகாரமும்’ என்பதுதான் சிதம்பரம் எனும் முதிரா இளைஞனின் வாயிலாக வெக்கை முன்வைக்கும் கேள்வி. அதுவே அசுரனிலும் தொடர்கிறது.

தனுஷ் – வெற்றி மாறன் இணையும் அசுரன்

மேலோட்டமான வாசிப்பில் வெக்கையை ஒரு சினிமாவுக்கான கதையாக யாரும் கருதமுடியாது. அதற்குள்ளிருந்த அருமையான சினிமாவைக் கண்டுகொண்டிருக்கிறார் வெற்றிமாறன்.

சாதியின் நிஜமான கோரமுகம் எப்படிப்பட்டது என்பது இன்றைய தலைமுறைக்குத் தெரிந்திருக்க வாய்ப்புகள் மிகவும் குறைவு. நமக்கு மிக சமீபமான ஒரு காலத்தில் செருப்பு அணியவும், மேற்சட்டை அணியவும், தண்ணீர் எடுக்கவும் கூட ஒடுக்கப்பட்டவர்கள் எத்தகைய ஒடுக்குமுறைகளை எதிர்கொண்டார்கள், அவர்களின் உயிர் எத்தனை மலிவாக இருந்தது என்பதையும் படம் பதிவு செய்திருக்கிறது. இன்னும் இந்தக் கொடூரங்கள் நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. தமிழ்நாடு இந்த அசிங்கத்திலிருந்தெல்லாம் சற்றே மீண்டு வந்திருக்கிறது எனினும் இன்னும் நாம் பயணிக்க வேண்டிய தூரம் அதிகம். அதற்கு நாம் வரலாற்றிலிருந்து பாடம் கற்கவேண்டும். அல்லது, வரலாறு மீண்டும் அந்தப் பாடத்தை நமக்குக் கற்பிக்கும்.

இறுதியாக சிவசாமி, சிதம்பரத்திடம் ஒன்றைச் சொல்கிறான்.

”நம்மிடம் நிலமிருந்தால் பிடுங்கிக் கொள்வார்கள், நம்மிடம் காசு பணம் இருந்தால் எடுத்துக்கொள்வார்கள். கல்வி ஒன்றுதான் யாராலும் அபகரிக்க முடியாத சொத்து. எப்படியாவது படிச்சிரு செதம்பரம். படிச்சி மேல வந்த பிறகு அவன் நமக்கு செஞ்சதை, நாம யாருக்கும் செய்யக்கூடாது”

’கேடில் விழுச் செல்வம் கல்வி’ என்று வள்ளுவம் சொல்லுவதும் இதைத்தான். பிற்போக்குச் சக்திகள் புதிய பலம் பெற்று வீறுகொண்டிருக்கும் தற்காலத்தில் மீண்டும் சாதிய அழுக்குகளுக்குள் நாம் வீழாதிருக்க வேண்டுமானால், கல்வியும் பகுத்தறிவும்தான் நம்மிடமிருக்கும் ஒரே ஆயுதம்.

அசுரன் அதையே நமக்கு நினைவூட்டுகிறான்.!

More in Cinema
Priya Bhavani Shankar: "போதை கணமே குடையாய் இரு நீ!" – காதலரைக் கரம் பிடித்த பிரியா பவானி ஷங்கர் Priya Bhavani Shankar: "போதை கணமே குடையாய் இரு நீ!" – காதலரைக் கரம் பிடித்த பிரியா பவானி ஷங்கர் November 11, 2026 Scene vs Mookuthi Amman 2: தீபாவளி ரேஸ்.. மூக்குத்தி அம்மன் 2வை முடித்து விட்ட சீன்.. தப்பித்த தனுஷ்! Scene vs Mookuthi Amman 2: தீபாவளி ரேஸ்.. மூக்குத்தி அம்மன் 2வை முடித்து விட்ட சீன்.. தப்பித்த தனுஷ்! November 11, 2026 சீன் வெற்றி.. சூர்யாவுக்கு ஹாட்ரிக் ஹிட்.. ஜோதிகாவுடன் சேர்ந்து கொண்டாட்டம்.. 8 கிராம் தங்க நாணயம் சீன் வெற்றி.. சூர்யாவுக்கு ஹாட்ரிக் ஹிட்.. ஜோதிகாவுடன் சேர்ந்து கொண்டாட்டம்.. 8 கிராம் தங்க நாணயம் November 11, 2026 Teejay: "அதை அவர் பொதுவெளியில் கொண்டு வந்ததை தவறான நகர்வாக பார்க்கிறேன்!" – டீஜே பேட்டி Teejay: "அதை அவர் பொதுவெளியில் கொண்டு வந்ததை தவறான நகர்வாக பார்க்கிறேன்!" – டீஜே பேட்டி November 11, 2026 கீர்த்தி சுரேஷ் கையை பிடித்த தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ்.. ஒட்டி உரசுறாருனு பேச்சு.. என்ன இதெல்லாம்? கீர்த்தி சுரேஷ் கையை பிடித்த தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ்.. ஒட்டி உரசுறாருனு பேச்சு.. என்ன இதெல்லாம்? November 11, 2026 மானிய பணம் மக திருமணக்கு போதும்னு இருந்தேன், மறுத்துட்டாங்க‌!- பிதாமகன் தயாரிப்பாளர் வி.ஏ துரை மனைவி மானிய பணம் மக திருமணக்கு போதும்னு இருந்தேன், மறுத்துட்டாங்க‌!- பிதாமகன் தயாரிப்பாளர் வி.ஏ துரை மனைவி November 10, 2026

See all 169 in Cinema →

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *