சென்னையின் சில முக்கியமான பகுதிகளில் ஓரிரு அட்டைப் பெட்டிகள் கேட்பாரற்றுக் கிடக்கின்றன. அதற்குள் வெட்டப்பட்ட மனிதக்கைகள் கண்டுபிடிக்கப்பட்டதும் காவல்துறையே பற்றிக்கொள்கிறது. சிபி-சிஐடி ஆய்வாளரான ஜே.கே, இந்த வழக்கைக் கையாள நியமிக்கப்படுகிறார். ஜேகேவோ கொஞ்ச நாட்களுக்கு முன்னர் காணாமல் போன தன் தங்கை, சாருவைத் தேடும் பணியில் மிகுந்த மனவுளைச்சலோடு இருக்கிறார். அவருக்கு இந்தப் பணியை எடுத்துக்கொள்வதில் விருப்பமில்லை. ஆனாலும் அவருக்கு வேறு வழி கிடையாது.

இந்தப் புலனாய்வின் போது, ஒரு முறை பிணவறை ஒன்றுக்கு அவர் ஆய்வுக்குப் போகிறார். உதவிக்காக உடன் வரும் இரண்டு காவல் அலுவலர்கள் துர்நாற்றத்தால் கர்ச்சீப்பால் முகத்தை மூடிக்கொள்கிறார்கள். ஆனால், ஜேகே எந்தச் சலனமும் இல்லாத, வழக்கமான அதே இறுக்கமான முகபாவத்தோடு இருக்கிறார். ஜேகே அந்த அளவுக்கு பணியில் தீவிரமும், நீண்ட அனுபவமும் கொண்ட ஓர் அதிகாரி. எந்தக் கொடூரமும் பாதிக்காத மனநிலை அவருடையது.
அதே ஜேகே, பின்னால் குற்றவாளிகளை நெருங்கிய பின்னர், ஒரு பிளாஸ்டிக் டிரம்மில் கொலை செய்யப்பட்டுக் கிடக்கும் ஓர் உடலைப் பார்த்து அதிர்ச்சியடைந்து விலகிப்போய் வாந்தியெடுக்கிறார். அப்படியானால் அந்தக் குற்றவாளிகளின் கொடூரத்தன்மை எந்த அளவுக்கு இருக்கும் என்பதை உணரச் செய்யும் காட்சி இது.
ஜேகேவின் விசாரணையின் தொடர்ச்சியாக, குடும்பத்தோடு தற்கொலை செய்துகொண்ட புருசோத்தமன் எனும் ஒரு மருத்துவரைப் பற்றிய குறிப்புகள் கிடைக்கின்றன. இன்னொரு புறம் பல இளம் பெண்கள் கடத்தப்பட்டு, பாலியல் வன்புணர்வு மற்றும் கொலைக்காளான தகவல்கள் கிடைக்கின்றன. அதன் தொடர்ச்சியாக, சமூகத்தில் பெரிய மனிதர்கள் எனும் பெயரில் இயங்கிவரும் பணக்காரர்களுக்கான பாலியல் காட்சிநுகர்வுக்காக (Voyeurism) இரண்டு காவல் துறை அதிகாரிகளின் தலைமையில் ஒரு பெரும் பாலியல் தொடர் குற்றங்கள் நடத்தப்படுகின்றன எனும் அதிர்ச்சியான உண்மையைக் கண்டுபிடிக்கிறார் ஜேகே. யாருடைய கைகள் வெட்டப்பட்டு காட்சிப் படுத்தப்படுகின்றன, பாலியல் குற்றவாளிகள் மாட்டினார்களா, கொலைக்குற்றவாளிகள் யார், அவர்கள் மாட்டினார்களா என்பது கதையின் முடிவு.

மிகத் தீவிரமான துறை சார்ந்த (Pure police procedural thriller) திரில்லர் படம் இது. காவல்துறை விசாரணையை வழக்கமான ஒரு ஹீரோவின் சாகசமாக மாற்றாமல், அதை ஒரு வேலையாகவே காட்டியது யுத்தம் செய். ஜேகேவின் உதவியாளர்கள் பாத்திரங்களும், விசாரணையின் பகுதிகளாகவே இருக்கின்றனர். வழக்கமான சினிமாத்தனங்கள் இல்லாத, ஒரு முழுமையான கிரைம் இன்வெஸ்டிகேஷன் திரில்லராக இந்தப் படம் அமைந்தது. இதற்குப் பின் வந்த ராட்சசன், தடம், போர்தொழில் போன்ற பல தமிழின் கிரைம் இன்வெஸ்டிகேஷன் படங்களுக்கு முன்னோடி என்று இதை நாம் குறிப்பிட முடியும். மிஷ்கினே யுத்தம் செய்க்குப் பிறகு, துப்பறிவாளன், சைக்கோ போன்ற குறிப்பிடத்தகுந்த கிரைம் இன்வெஸ்டிகேஷன் படங்களையும் இயக்கியிருக்கிறார்.
ஜேகேவாக இயக்குநர் சேரன் நடித்திருந்தார். ஜேகே கதாபாத்திரத்தைப் பொறுத்தவரை, மிஷ்கினின் ஆரம்பத் தேர்வு சேரன் அல்ல; ராமராஜன். காவல்துறையில் நவீனமாக படித்துவிட்டு வந்தவர்களை விடவும், கிராமத்துப் பின்னணியிலிருந்து வந்து தம் நீண்ட அனுபவத்தால் சிறப்பாகத் துப்பறியும் சில அதிகாரிகள் இருப்பார்கள். அப்படி ஒரு பாத்திரமாக ஜேகேவை உருவாக்க நினைத்து, ராமராஜனுக்குப் பொருத்தமாக இதை எழுதியதாகவும், பின்னர் சூழல் காரணமாக சேரனை அணுகியதாகவும் மிஷ்கின் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.
ஜேகே, வழக்கமான ஹீரோவுக்கான எந்த அம்சமும் இல்லாத பாத்திரம். காதல் கிடையாது, பஞ்ச் டயலாக் கிடையாது, விசாரணையின் நடுவே மாஸ் ஹீரோயிசம் காட்டும் தருணங்களும் கிடையாது. ஒரு வழக்கைத் தன் அறிவாலும், அனுபவத்தாலும் நகர்த்திச் செல்லும் ஓர் அதிகாரி மட்டுமே. அதனால்தான் இந்தப் பாத்திரத்துக்கு ஒரு மாஸ் ஹீரோ முகத்தைக் காட்டிலும், கதாபாத்திரத்துக்கு ஏற்ற ஒரு பரிச்சயமான முகம் தேவைப்பட்டிருக்கிறது. அதற்கு சேரன் சரியாகப் பொருந்திப்போனார். மிஷ்கின் விரும்பியபடியே, இதுவரை பார்த்திராத ஒரு சேரனை உருவாக்கும் முயற்சியாகவும் இது அமைந்தது.
புருசோத்தமன் எனும் மருத்துவர் பாத்திரத்தில் ஒய்.ஜி.மகேந்திரன், அவரது மனைவி அன்னபூரணியாக லட்சுமி ராமகிருஷ்ணன் இருவரும் அவர்களின் இமேஜுக்கு மாறான கொலையாளிகளாக, முற்றிலும் மாறுபட்ட வேடங்களில் நடித்திருந்தார்கள். அந்தத் தன்மை அந்தக் கதாபாத்திரங்களின் அடிப்படை வடிவமைப்பிலேயே இருந்தது அவர்களை அந்தப் பாத்திரங்களுக்கு இன்னும் பொருத்தமாக்கியது. அவர்களுக்கு உதவும் மருத்துவராக ஜெயபிரகாஷ் நடித்திருந்தார். காவல் உயரதிகாரியாக ஆடுகளம் நரேன், வில்லனாக 90-களில் ஹீரோவாக நடித்துக்கொண்டிருந்த நடிகர் செல்வா, அவருக்கு உதவியாக மாரிமுத்து போன்றோர் நடித்திருந்தனர்.

இசை கே எனும் கிருஷ்ணகுமார். இவருக்கு இது முதல் படம். பின்னாளில் ஆண்டவன் கட்டளை, பாரடைஸ், நீளிரா போன்ற குறிப்பிடத்தகுந்த படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். பாடல்களுக்கு முக்கியத்துவம் இல்லாத இந்தப் படத்தின் பலம் அதன் பின்னணி இசையில்தான் இருக்கிறது. குறிப்பாக படத்தின் இருண்ட விசாரணைச் சூழலுக்கு ஏற்ற வகையில் அமைக்கப்பட்ட தீம் இசையும், வயலின் பயன்பாடும் காட்சிகளின் பதற்றத்தை அதிகப்படுத்தியிருந்தன.
வழக்கமான சினிமாத்தங்கள் இல்லாத என்று நாம் குறிப்பிட்டிருந்தாலும், அதற்கு விதிவிலக்காக, கபிலன் எழுதி, ரக்யூப் ஆலம், எம்.எல்.ஆர். கார்த்திகேயன் பாடிய ’கன்னித்தீவு பொண்ணா’ பாடல் அமைந்திருந்தது. பாடல் மிகப்பெரிய அளவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. அந்தப் பாடலில், இயக்குநர் அமீரும், நடிகை நீது சந்திராவும் நடனமாடியிருந்தார்கள்.
கே-வைப் போலவே இந்தப் படத்தில் அறிமுகமான இன்னொரு டெக்னீஷியன், ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியன். டெக்னீஷியன்களுக்கு ஒரு சிறந்த இயக்குநரின் படத்தில் அறிமுகமாவது என்பது நல்வாய்ப்பு. அதைச் சிறப்புற பயன்படுத்திக்கொண்டிருந்தார்கள் கே-யும், சத்யனும். மிஷ்கினின் முந்தைய படமான அஞ்சாதேவை விடவும் இன்னும் மேன்மையாகவும், நிதானமாகவும் கேமராக் கோணங்களும், காட்சியமைப்புகளும் இதில் அமைக்கப்பட்டிருந்தன. சத்யன் பின்னாளில் தீரன் அதிகாரம் ஒன்று, கைதி, மாஸ்டர் போன்ற பெரிய படங்களில் பணியாற்றினார்.

படத்தைத் தயாரித்தவர், ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்டுக்காக கல்பாத்தி எஸ்.அகோரம். எழுதி இயக்கியவர் மிஷ்கின். அத்தனைத் தீவிரமாக வழக்கைத் துப்பறிந்து குற்றவாளிகளையும், புருசோத்தமன் குழுவின் பின்னணியையும் கண்டுபிடிக்கும் ஜேகே, கடைசியில் தன் தங்கை வில்லனான ஏசிபி திரிசங்குவின் பிடியில் மாட்டிக்கொண்டிருக்கிறாள் என்று தெரிந்ததும், தம் நேர்மையையெல்லாம் மறந்துவிட்டு, புருசோத்தமன் குடும்பத்தை திரிசங்குவிடம் ஒப்படைக்கத் தயாராகிறான். ஆனால், அதே புருசோத்தமனும், அவர் மனைவி அன்னபூரணியும்தான் தங்கள் உயிரைக் கொடுத்து அவனது தங்கையைக் காப்பாற்றிக் கொடுப்பார்கள். இந்த இடத்தில்தான் மற்ற கமர்ஷியல் படங்களிலிருந்து யுத்தம் செய் வித்தியாசப்படுகிறது.
நாம் எத்தனையோ படங்களைப் பார்க்கிறோம். அவற்றில் சிறப்பான திரைக்கதை அம்சம்கூட இருக்கலாம். ஆனாலும், பல படங்கள் நம்மை முழுமையாக ஈர்க்க முடியாமல் தோற்றுப் போகின்றன. கதை, திரைக்கதை சற்றே வழமையானதாக அமைந்துவிட்டாலும் கூட சில இயக்குநர்களின் படங்கள் மட்டும் எப்போதும் நம்மை ஈர்க்கத் தவறுவதில்லை. அதுதான் கலைத்தன்மை (Craftsmanship) எனப்படுகிறது. ஓவியங்களில் பல வகைமைகளும், வடிவங்களும் உண்டு. உண்மைக்கு நெருக்கமாக வரையப்படும் யதார்த்தவாதம் (Realism), அந்தக் கண நேர உணர்வை வெளிப்படுத்தும் இம்ப்ரஷனிஸம் (Impressionism), கலைஞனின் உணர்வுக்கு முக்கியத்துவம் தரும் எக்ஸ்பிரஷனிசம் (Expressionism) என பல பாணிகளும் இருக்கின்றன. அவற்றைப் பற்றிய புரிதலும், தான் இயங்கும் ஊடகம் குறித்த அறிவும், தனிப்பட்ட ரசனையும்தான் ஒரு கலைஞனின் தனித்துவமான பாணியைத் தீர்மானிக்கிறது. சினிமாவும் அப்படிப்பட்டதுதான்.

ஒரு தேர்ந்த கலைஞன், ’கன்னித்தீவு பொண்ணா’ போன்றதொரு குத்துப்பாடலை எடுத்தால் கூட அது ஓர் அழகியலோடு அமைகிறது, அமீர் மற்றும் நீதுவின் நடனத்தில் இருக்கும் ஒரு துல்லியமற்ற லைவ்லினஸ் கூட நம்மை ஈர்க்கிறது. அதுதான் யுத்தம் செய் படத்தை ஒரு கிரைம் இன்வெஸ்டிகேஷன் திரில்லர் எனும் இடத்திலிருந்து மேலானதாக்குகிறது. அதுவேதான் தமிழின் முக்கியமான மாஸ்டர் கிராஃப்ட்ஸ்மென்களுள் மிஷ்கினுக்கான ஓர் இடத்தையும் பெற்றுத் தருகிறது.!
Anbil Avan: 'இன்னும் பெரிய அளவில்!'; ரேஸிலிருந்து தள்ளிப் போகும் அசோக் செல்வன் படம் – காரணம் என்ன?
September 22, 2026
“மீசைய முறுக்கு பார்த்து சென்னைக்கு ஓடி வந்தேன்!" – ரசிகர் சொன்னதைக் கேட்டு நெகிழ்ந்த ஆதி
September 22, 2026
"ரஜினி சார் மாதிரி இருக்கேன்னு சொல்றாங்க, ஆனா..!"- 'மொத ராத்திரி' நடிகர் ரிஷிகாந்த்
September 22, 2026
jason 'அஞ்சலி' குட்டிப் பையன்; கை கொடுக்காத ஹீரோ முயற்சி, ஜேசனின் `கேர் டேக்கர்'- யார் இந்த சஞ்சீவ்?
September 22, 2026
"சங்கத்திற்காகச் சில ஆலோசனைகளும் வழங்கினார்!" – எழுத்தாளர் சங்கத்தில் இணைந்த சிவகார்த்திகேயன்
September 22, 2026
ராவணனின் வயிற்றிலேயே பாய்ந்த சூலம்.. சாமியாடி சதியை முறியடித்த குணசேகரன்..எதிர்நீச்சல் தொடர்கிறது!
September 22, 2026
சிஎஸ்கே அணி பயிற்சியாளர் பதவிக்கு நெஹ்ராவா? அஸ்வின் வெளியிட்ட பரபரப்பு தகவல்
September 23, 2026
ஐபிஎல் சூதாட்ட புகார்.. விளக்கம் கொடுத்துள்ள சிஎஸ்கே.. வீரர்களுக்கு எச்சரிக்கை
September 23, 2026
Fresh bedsheets and dusk walks: Expert tips for sleep-deprived freshers
September 22, 2026
Snedeker wants Spaun to 'make me look like an idiot' after Presidents Cup snub
September 22, 2026
NBA Star Steven Adams Says GTA 6's Launch Will Lead to a 'League-Wide' Drop in Performance for Athletes and Coaches
September 22, 2026
Get a Lenovo Legion Go S Ryzen Z2 Go Handheld Gaming PC in Excellent Condition for Under $500
September 22, 2026