’எங்க பரம்பரையில எவனும் ஜாகுவார் காரைக் கழுவுனது கூட கிடையாது. அப்படிப்பட்ட பரம்பரையில வந்துட்டு அப்படி ஒரு காரை ஓட்டியிருக்கேன்னா, அதுக்காக ஒரு வேலை இல்ல, நூறு வேலை கூட போகலாம்’ என்று சொல்கிறான் சேகர்.

அதில் கவரப்பட்ட பகலவன், ’உங்க திங்கிங் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு பாஸ்’ என்கிறான். அதற்குப் பதிலாக சேகர்,

’நயன்தாராவுக்கு கோயில் கட்டினவனுக்கெல்லாம் என் திங்கிங் பிடிக்கத்தான் செய்யும்’ என்று சொல்கிறான்.

என்னவொரு அழகான சுயவிமர்சனம்!

கேசவனும், சேகரும் நண்பர்கள். சென்னையில் ஒரே அறையில் தங்கியிருக்கிறார்கள். புதிதாக அவர்களோடு வந்து சேர்ந்து கொள்கிறான் கேசவனின் நண்பன் பகலவன். கேசவன் வேலைக்குச் சென்றதும், சேகர் எழுந்து, அலுவலகம் கிளம்பும் பரபரப்போடு குளித்துக் கிளம்பி, திருநீறிட்டுக்கொண்டு அமர்ந்து குடிக்க ஆரம்பிக்கிறான். அவனை அதிசயமாய்ப் பார்த்துக்கொண்டே அவனருகே வந்து ஆசையாய் இணைந்துகொள்கிறான் பகலவன்.

சூது கவ்வும்
சூது கவ்வும்

இருவரும் பல விசயங்களையும் பேசிக்கொண்டே குடிக்கிறார்கள். அதில், தான் பார்த்துக்கொண்டிருந்த ஃபைவ்ஸ்டார் ஹோட்டல் பார்க்கிங் ஸ்டாஃப் வேலை எப்படிப் பறிபோனது என்பது குறித்து பகலவனுக்கு விளக்கமாகச் சொல்லுகிறான் சேகர். ஒரு கஸ்டமரின் ஜாகுவார் காரைத் திருட்டுத்தனமாக எடுத்து ஓட்டியதற்காக அவனை வேலையிலிருந்து விரட்டியிருப்பார்கள். அதைப் பற்றிக் குறிப்பிடுகையில்தான் மேற்கண்ட உரையாடல் நிகழ்கிறது.

தவுசண்ட்வாலா சரவெடியைக் கொளுத்திப் போட்டது போல அப்படி ஒரு திரைக்கதை! முதல் காட்சியில் தொடங்கி, ரோலிங் டைட்டில் போடும் வரை ஆடியன்ஸை திரையிலிருந்து நொடி நேரமும் விலகாதபடி கட்டிப்போட்டது சூது கவ்வும். இதற்கு முன்பு பார்த்திராதபடியான ஒரு கதைக்களம், கதாபாத்திரங்கள், காட்சியமைப்புகள், அட்டகாசமான வசனங்கள் என ஒரு புதுவெள்ளமாய்ப் பாய்ந்தது சூது கவ்வும்.

பீட்சா – கார்த்திக் சுப்புராஜ், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் – பாலாஜி தரணீதரன், இன்று நேற்று நாளை – ஆர்.ரவிக்குமார், காதலில் சொதப்புவது எப்படி -பாலாஜி மோகன், முண்டாசுப்பட்டி – ராம்குமார், பண்ணையாரும் பத்மினியும் – எஸ்யு.அருண்குமார் என 2010-களின் தொடக்கத்தில் ஒரு பெரிய புதுவரவு அலையே தமிழ் சினிமாவில் நடந்தது. இவர்களில் பலரும் நாளைய இயக்குநர் டிவி நிகழ்ச்சியின் மூலமாக தமிழ் சினிமாவுக்குள் வந்தவர்கள். இவர்களுள் சூது கவ்வும் படத்தின் திரைக்கதையை எழுதி, இயக்கிய நலன் குமாரசாமி மிகவும் குறிப்பிடத்தகுந்தவர். சூது கவ்வும் திரைக்கதை காட்சிக்கு காட்சி மிகவும் புதுமையாகவும், நகைச்சுவையாகவும், ரசனையோடும் எழுதப்பட்டிருந்தது.

கேசவன், சேகர் இருவரில் கேசவன் மட்டுமே ஓரளவுக்கு ஒழுங்கு. சேகர் ஒரு ஜாகுவார் காரை ஓட்டிப்பார்க்க வேண்டுமெனும் ஆசையில் வேலையையே இழந்தவன். அதில் அவனுக்கு எந்தக் குற்ற உணர்ச்சியும் இல்லை. அவர்களோடு நயன்தாராவுக்கு கோயில் கட்டிய ஒருவன் மூன்றாவதாக வந்து இணைந்து கொள்கிறான்.

அந்த நேரத்தில் கேசவனுக்கும் வேலை போய்விடுகிறது. மூவருமாக ஒரு பாரில் மதுவருந்தப் போகிறார்கள். அங்கு நடக்கும் ஒரு பிரச்சினையில் தாஸ் என்பவனுக்கு உதவப்போய் அவனோடு நட்பாகிறார்கள். தாஸ் ஒரு விநோதமான ஆள். தனக்கென சில வரையறைகளை வைத்துக்கொண்டு, ஒரு குடிசைத்தொழில் போல ஆட்கடத்தல் செய்து அதன் மூலம் பணம் சம்பாதித்துக் கொண்டிருக்கிறான். அவனோடு இவர்கள் குழு சேர்கிறார்கள். ஒரு பெரிய அரசியல்வாதியின் மகனைக் கடத்தும் வாய்ப்பு வருகிறது. அதன் பின் வரிசையாக விதிமீறலும், அதனால் சொதப்பலுக்கு மேல் சொதப்பலாகவும் நடந்தேற இறுதியில் என்னவாயிற்று என்பதுதான் கதை. மிக எளிமையான கதைதான். ஆனால், இந்தக் கதையின் ஒவ்வொரு நிமிடத்தையும் தன் திரைக்கதையால் சுவாரசியப்படுத்தியிருக்கிறார் நலன்.

சூது கவ்வும் படத்தில்

அந்த பாரில் என்ன நடக்கிறது?

ஒருபுறம், அன்றையக் கடத்தல் நிகழ்ச்சி சொதப்பிய சோகத்தில், ஷாலுவுடன் பேசியபடி மதுவருந்திக் கொண்டிருக்கிறான் தாஸ். கேசவனுக்கு வேலை போனது பற்றிய வாக்குவாதத்தில் நம் மூவர் குழு, இன்னொரு புறம் மதுவருந்திக் கொண்டிருக்கிறார்கள். நடுவில் ஒரு சின்ன ரவுடி தாஸைத் தாக்க வருகிறான். யாரவன்? கொஞ்சம் முன்பாக தாஸிடம் ’மணி என்ன?’ என்று கேட்ட அவனைப் பார்த்து சரியாகக் கவனிக்காமல், ’சில்லறை இல்லை, போப்பா’ என்று சொல்லிவிடுகிறான் தாஸ்.

அந்த அவமானத்தைப் பொறுக்கமுடியாமல்தான் தாஸைத் தாக்க வருகிறான் அவன். அதற்கு அவன் எடுக்கும் பியர் பாட்டிலோ பக்கத்து மேசையிலிருந்த பகலவனுடையது. அடுத்த வேளை சாப்பாட்டுக்கு வழியில்லாமல் நிற்கும் நம் குழு எப்படி ஒரு பியர் பாட்டிலை இழக்கும்? ஒரு பியர் பாட்டிலைக் காப்பாற்றுவதற்காக களம் புகுகிறது நம் குழு.

தாஸ் எந்த வகையில் விநோதமானவன்?

தாஸின் கடத்தல் விதிமுறைகள் சீரியஸாகவும் இல்லை, நகைச்சுவையாகவும் இல்லை. பார்வையாளர்களான நமக்கே உள்ளூர ’நல்லாத்தானே இருக்கு, நாம கூட முயற்சிக்கலாம் போலிருக்கே’ எனும் ஃபேண்டசி கற்பனையை எழுப்பக்கூடியவையாக இருக்கின்றன. தாஸுக்கு ஸ்கிசோஃப்ரினியா (Schizophrenia) எனும் மனப்பிறழ்வு இருக்கிறது. அந்தச் மனநிலையை, இல்லாததை இருப்பதாகக் கற்பனை செய்துகொள்ளும் மனநோய் என ஒரு நகைச்சுவைப் படத்துக்கே உரிய லாஜிக்கில் முற்றிலும் கேளிக்கைக்காகப் பயன்படுத்தியிருக்கிறது சூது கவ்வும்.

தாஸ் அவனோடு கூடவே ஷாலு எனும் அவனது காதலி எப்போதும் இருப்பதான ஹலுசினேஷனில் இருக்கிறான். எத்தனை சீரியஸான காட்சியிலும், ஷாலு முழு மேக்கப்பில், சம்பந்தமில்லாத ஆடையலங்காரத்தில் இருக்கிறாள். எந்த லாஜிக்கல் சிக்கலுக்கும் ஆளாகாத விநோதமான கதாபாத்திரம். அத்தனை ரசனையான அமைப்பு. தொடக்கச் சில காட்சிகளில் அவள் ஒரு ஹலுசினேஷன் தோற்றம் என்பது நமக்குத் தெரியாது. தாஸ் ஒரு கடத்தலின் போது கார் ஸ்டார்ட் ஆகாத சிக்கலில் பதறிக்கொண்டிருக்கிறான், ஆனால் ஏன் இந்த ஷாலு எந்தப் பரபரப்புமில்லாது ஐஸ்கிரீம் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறாள் என்று நாம் குழப்பமாக உணர்கிறோம். விஷயம் தெரியவரும் போதுதான் ’அட’ எனும் உணர்வு ஏற்படுகிறது.

சூது கவ்வும் படத்தில் இடம்பெறும் எல்லாம் கடந்து பாடல்

இவை மட்டுமல்ல, கேசவனுக்கு ஏன் வேலை போகிறது? அப்படியென்ன கடத்தல் விதிமுறைகளை தாஸ் வைத்திருக்கிறான்? ஆட்களைக் கடத்திய பின்னர் தாஸ் சம்பந்தப்பட்டவர்களிடம் பணத்துக்காக எப்படிப் பேரம் பேசுவான்? அந்தத் தொகையை எப்படி பெற்றுக்கொள்வான்? அவனோடு இந்தக்குழு எப்படி இணைந்துகொண்டது? அவர்களுக்கு அருமைநாயகத்தைக் கடத்தும் வாய்ப்பு எப்படி அமைந்தது? என இப்படி எந்தக் காட்சியை எடுத்துக்கொண்டாலும், அதில் ஒரு ’அட’ இருக்கும்.

ரவுடி டாக்டர், சைகோ இன்ஸ்பெக்டர், அமைச்சர் ஞானோதயம் என இன்னும் ஏராளமான கதாபாத்திரங்களும் இருக்கின்றன. படம் முழுதும் அப்படியான ’அட’க்களுக்குப் பஞ்சமே இருக்காது. முடிவில், மோசமான குணங்கள் கொண்ட அருமைநாயகம் அரசியலில் வெற்றி பெறுவது போலவும், தாஸ் தன் கடத்தல் தொழிலைத் தொடர்வது போலவும் படம் நிறைவுற்றதை மட்டும் ஒரு குறையாகப் பதிவு செய்யலாம். இத்தனை செய்த நலன், முடிவையும் திருத்தமாகவே செய்திருக்க முடியும், அதனால் படத்துக்கு எவ்விதக் குறைவும் வந்திருக்காது என்பது நம் கருத்து.

தாஸ் எனும் அட்டகாசமான கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்தார். இன்று மிகப்பெரிய ஸ்டாராக இருக்கும் விசேவின் தொடக்க கால படங்களுள் ஒன்றான இந்த சூது கவ்வும், படத்தின் நகைச்சுவைத் தன்மையையும் தாண்டி விசே எத்தகைய திறன்வாய்ந்த நடிகர் என்பதற்கான சான்றாகவும் அமைந்தது. கேசவன் – சேகர் – பகலவன் மூவர் குழுவாக முறையே அசோக் செல்வன் – ரமேஷ் திலக் – பாபி சிம்மா ஆகியோர் நடித்திருந்தனர். ஷாலுவாக சஞ்சிதா ஷெட்டி, அருமைநாயகமாக கருணாகரன், சைகோ இன்ஸ்பெக்டராக யோக் ஜேப்பி, அமைச்சர் ஞானோதயமாக எம்.எஸ்.பாஸ்கர், ரவுடி டாக்டராக அருள்தாஸ் என பலரும் நடித்திருந்தார்கள். ஓரிரு காட்சிகளில் வந்து போகும் சிறிய கதாபாத்திரங்களில் யோகிபாபு, முனிஷ்காந்த் ஆகியோரையும் பார்க்க முடிகிறது.

படத்தின் ஒளிப்பதிவு தினேஷ் பி. கிருஷ்ணன். இசை சந்தோஷ் நாராயணன். அட்டகத்தி, பீட்சா போன்ற படங்களுக்கு இசையமைத்திருந்த சந்தோஷுக்கு சூது கவ்வும் பெரிய அளவில் பெயர் வாங்கிக்கொடுத்தது. பின்னணி இசை பெரும் ஈர்ப்போடு அமைந்திருந்தது. ’மாமா டவுசர்’, ’கம்னா கம்’, ’காசு பணம் துட்டு’ என இந்தப் படத்தில் இடம்பெற்றிருந்த பாடல்கள் அனைத்துமே படத்தின் காமெடி உணர்வுக்கு ஏற்பவே அமைக்கப்பட்டிருந்தன.

திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் சார்பாக படத்தைத் தயாரித்தவர் சி.வி.குமார். அட்டகத்தி, பீட்சா படங்களைத் தயாரித்திருந்த சி.வி.குமாருக்கு சூது கவ்வும் பெருவெற்றிப்படமாக அமைந்தது. இதைத் தொடர்ந்து மேற்குறிப்பிடப்பட்ட இளம் தலைமுறை இயக்குநர்களோடு இணைந்து பல வெற்றிப் படங்களைத் தயாரித்தார்.

சைகோ இன்ஸ்பெக்டர் பிரம்மா தன் வேட்டையைத் தொடங்கியதும், தாஸ் குழு பயப்படுகிறது. ஒரு தடவை சிகரெட் பற்றவைக்க தீப்பெட்டிக்காக அருகில் வரும் பிரம்மாவுக்குப் பயந்து ஓடி, வம்பில் மாட்டிக்கொள்கிறார்கள். கடைசி நிமிடத்தில் எதிர்பாராத விதமாக பிரம்மாவையே தாக்கிவிட்டுத் தப்பிக்கிறார்கள். இறுதியில் முக்கியப் பிரச்சினை தீர்ந்துவிட்டாலும், பிரம்மாவிடம் அவனைத் தாக்கிய வன்மம் மிச்சமிருக்கிறது.

கிளைமாக்ஸில் ஒரு கும்மிருட்டு அறையில், நான்கு பேரையும் அடைத்துப் போட்டு, நைட்விஷன் கண்ணாடியைப் போட்டுக்கொண்டு போட்டுக் கும்மாங்குத்து குத்துகிறான் பிரம்மா. அப்போது அவர்கள் மீதான பரிதாபத்துக்குப் பதிலாக, அவர்களின் உடல்மொழியைப் பார்த்து நமக்கு சிரிப்புதான் வருகிறது. அடி தாங்க முடியாமல் ஆளாளுக்குப் புலம்பிக் கொண்டிருப்பார்கள்.

’டேய் பொறம்போக்கு, தைரியமிருந்தா வெளிச்சத்துல கூட்டிட்டுப் போய் அடிடா’ என்று தாஸ் ஒரு பக்கம் கத்துவான். வெளியே போனாலும் அவன்தான் அடிக்கப்போகிறான், இங்கே தைரியத்துக்கு என்ன தேவை வந்ததோ தெரியவில்லை. அதற்கும் தாஸின் முகத்திலேயே குத்து விழும். அதன் பலனாக சில விநாடிகள் ஃபிளாஷ்கட்டில், ஷாலுவோடு ’நான் உனைப் பார்க்கிறேன்’ எனும் டூயட்டுக்குப் போய்விட்டு வருவான் தாஸ்!

அப்போது அடி தாங்க முடியாமல் உளறிக்கொண்டிருக்கும் பகலவன் திடீரென சிரிக்க ஆரம்பிப்பான். என்னவாயிற்று என அவனது நண்பர்களோடு சேர்ந்து நாமும் ஆச்சரியமாகப் பார்த்துக்கொண்டிருக்கும் போது, ’டேய் சேகரு, இதுக்குப் பேருதான் இருட்டு அறையில் முரட்டுக் குத்தாடா?’ என்று சுயபகடி செய்துகொள்ள, அத்தனை வலியிலும் நான்கு பேரும் வெடித்துச் சிரிக்க ஆரம்பிப்பார்கள். அவர்களோடு சேர்ந்து தியேட்டரும் வெடிச்சிரிப்பில் ஆழ்ந்தது நன்றாக நினைவிருக்கிறது.

இப்போது இந்த மீள்வாசிப்பிலும், அந்தக் காட்சியில் அவர்களோடு சேர்ந்து சிரிக்க முடிகிறது. ஒரு படம் நம்மை இவ்வளவு இயல்பாகத் தன்னுடைய உலகத்துக்குள் இழுத்துக்கொண்டு போய், அதன் அபத்தங்களையெல்லாம் அருகில் உட்கார வைத்து ரசிக்கவைப்பது அபூர்வம். இப்படி ஒரு குதூகலமான நகைச்சுவைப் பொழுதுபோக்கு படம், இன்னொன்று கிடைக்காதா எனும் ஏக்கம் எழுவதைக் கட்டுப் படுத்தமுடியவில்லை.!

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

More in Cinema
விஜய் கண்டிப்பாக வருவார் பாருங்க.. உறுதியாக நம்பிக்கை வைத்த உதயநிதி மனைவி.. இப்படியும் நடந்ததா? விஜய் கண்டிப்பாக வருவார் பாருங்க.. உறுதியாக நம்பிக்கை வைத்த உதயநிதி மனைவி.. இப்படியும் நடந்ததா? September 30, 2026 டாஸ்க்கும் வேணாம்.. ஒன்னும் வேணாம்.. ரூ.5 லட்சம் பணப்பெட்டியுடன் வெளியேறிய போட்டியாளர்! டாஸ்க்கும் வேணாம்.. ஒன்னும் வேணாம்.. ரூ.5 லட்சம் பணப்பெட்டியுடன் வெளியேறிய போட்டியாளர்! September 30, 2026 என் மகனை பார்ப்பதற்காகவே அமெரிக்கா வந்தார்.. பாரதிராஜா, பாக்யராஜ் பற்றி நெப்போலியன் உருக்கம் என் மகனை பார்ப்பதற்காகவே அமெரிக்கா வந்தார்.. பாரதிராஜா, பாக்யராஜ் பற்றி நெப்போலியன் உருக்கம் September 30, 2026 இளையராஜா முன்னாடி நிக்கணும்.. கானா பாட்ட சினிமாவுக்குள் கொண்டு வந்தது இதற்காகத்தான்.. தேவா பளிச்! இளையராஜா முன்னாடி நிக்கணும்.. கானா பாட்ட சினிமாவுக்குள் கொண்டு வந்தது இதற்காகத்தான்.. தேவா பளிச்! September 30, 2026 Dorothy Box Office: டல் அடித்த டோரதி.. 5 நாளில் கார்த்திக் சுப்புராஜ் படத்துக்கு வந்த வசூல் எவ்வளவு? Dorothy Box Office: டல் அடித்த டோரதி.. 5 நாளில் கார்த்திக் சுப்புராஜ் படத்துக்கு வந்த வசூல் எவ்வளவு? September 30, 2026 Yezhu Kadal Yezhu Malai First Review – ராமின் ஏழு கடல் ஏழு மலை முதல் விமர்சனம்.. வன்முறை இருக்காம் Yezhu Kadal Yezhu Malai First Review – ராமின் ஏழு கடல் ஏழு மலை முதல் விமர்சனம்.. வன்முறை இருக்காம் September 30, 2026

See all 145 in Cinema →

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *