கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருக்கும் ‘டோரதி’க்கு நல்ல விமர்சனங்களும், பாராட்டுகளும் கிடைத்து வருகின்றன. கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த், சனந்த் ஆகியோரின் நடிப்பு பாராட்டைப் பெற, இளையராஜாவின் இசையும் கொண்டாடப்படுகிறது.
தமிழ் சினிமா இதுவரை நகர்ந்திடாத களத்தையும் இந்த ‘டோரதி’ துணிச்சலாகத் தொட்டுப் பேசியிருக்கிறது.
இந்நிலையில், ‘டோரதி’ பேசும் அரசியல் எத்தனை தேவையானது, இப்படம் ஏன் இத்தனை முக்கியமான சினிமா என்பது குறித்து சிலரிடம் பேசினோம்.

முதலில் நம்மிடையே பேசிய திரைக்கலைஞரும், எழுத்தாளருமான திருநங்கை நேகா, “தமிழ் சினிமாவில் இதுவரை திருநங்கைகளை ரொம்பவும் பரிதாபத்திற்குரிய மனிதர்களாக மட்டுமே காட்டியிருக்கிறார்கள்.
வீட்டை விட்டு வெளியே அனுப்புவது, வேலை வாய்ப்புகள் இல்லாமல் இருப்பது, பிச்சை எடுப்பது அல்லது பாலியல் தொழிலில் ஈடுபடுவது போன்ற விஷயங்களை மட்டுமே மீண்டும் மீண்டும் பதிவு செய்திருக்கிறார்கள்.
ஆனால், குடும்பங்களுக்குள் அவர்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளை இந்தச் சமூகம் எப்படிப் பார்க்கிறது என்பது பற்றி யாரும் பேசவில்லை.
ஆணாதிக்கச் சிந்தனைதான் குடும்பத்தில் ஒரு திருநங்கை உருவாகும்போது அவர்களை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. உண்மையிலேயே நாம் ‘திருநங்கை’ என்று மட்டும் சுருக்கிவிடக் கூடாது. அது ‘திருநர் இனம்’. திருநங்கைகள், திருநம்பிகள் என அனைவரையும் உள்ளடக்கியது. குறிப்பாக, திருநம்பிகள் சந்திக்கும் வன்முறைகள் மிக அதிகம்.
ஆனால் அதைப் பற்றி யாரும் பேசுவதில்லை. தற்போது வரை திருநங்கைகளைப் பற்றி மட்டுமே பேசி வருகிறார்கள். அந்த வகையிலான வன்முறையை என் சொந்தக் குடும்பத்திலேயே நான் சந்தித்திருக்கிறேன்.
நான் திருநங்கை என்பதை வெளிப்படுத்தியபோது, என் சொந்தத் தந்தையே என்னைக் கொலை செய்யத்தான் நினைத்தார். இது எனக்கு மட்டுமல்ல, பெரும்பாலான திருநங்கைகளின் வாழ்க்கையிலும் நடந்த கசப்பான உண்மை.

‘டோரதி’ படம் இந்த வன்முறையை மையப்படுத்திப் பேசுவதை மிக முக்கியமான ஒன்றாகப் பார்க்கிறேன். படத்தில் நடிகர் சனத் கேட்கும் கேள்விகளுக்குப் பதிலாக, ‘பாலினப் பாகுபாடு பார்க்காதீர்கள்; சாதி, மதம் அற்ற ஒரு பிறப்புதான் நாங்கள்’ என்பது போன்ற வசனங்கள் மிக ஆழமானவை.
இன்றைய சூழலில் குடும்ப வன்முறைகளைச் சந்திக்கும் திருநங்கைகளைப் பாதுகாக்கப் போதிய சட்டங்கள் இல்லை. நடைமுறையில் இருக்கும் சட்டம்கூட எங்கள் இருப்பையே கேள்விக்குள்ளாக்குகிறது.
இத்தகைய வன்முறைகளுக்கு அந்தச் சட்டம் எந்தத் தீர்வையும் தருவதில்லை. எனவே, இது போன்ற படங்கள் வரும்போதுதான் வீடுகளுக்குள் நடக்கும் கொடுமைகள் குறித்து மக்களுக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்படும். பத்து திருநங்கையரிடம் கேட்டால், அதில் எட்டு பேர் அவர்களுக்கு நடந்த சித்திரவதைகளைச் சொல்வார்கள். இரண்டாவதாக, இசைஞானி இளையராஜா அவர்களின் இசை இந்தப் படத்திற்கு மிகப் பெரிய பலம்.
பல வருடங்களாக தமிழ் சினிமாவில் திருநங்கைகளைக் கேலி செய்து பாடல்கள் வந்த சூழலில், இன்று இளையராஜா சாரின் வரிகளிலும் குரலிலும் பாடல் வந்தது எங்களுக்கு நடந்த அர்ச்சனையைப் போல உணர்ந்தேன்.
இப்படியான விஷயங்கள் பற்றிப் பேசத் தயங்கிய திரையுலகில் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் மிகத் தைரியமாக இந்த முயற்சியைக் கையில் எடுத்திருக்கிறார்.
‘இப்படிப் பேசினால் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், தயாரிப்பாளர் நஷ்டப்படுவார்’ என்ற சினிமா வட்டாரத்தின் பொதுவான பார்வையை ‘டோரதி’ உடைத்திருக்கிறது.
திரையரங்கில் என்னருகே அமர்ந்திருந்த ஒரு பெண் படத்தைப் பார்த்து அழுததைப் பார்த்தேன். இதுவே மக்களிடம் ஏற்பட்டுள்ள பெரிய மாற்றம். வழக்கமாக ‘சிஸ்-ஜெண்டர்’ நடிகர்கள் திருநங்கை கதாபாத்திரங்களில் நடிப்பதைக் கடுமையாக எதிர்க்கும் நபர் நான். இப்படத்தில் ஜீவா அக்கா மட்டுமன்றி, பல உண்மையான திருநங்கைகளும் நடித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

மேலும், ஜீவா அக்காவை டொராண்டோ திரைப்பட விழா வரை அழைத்துச் சென்றது எங்களுக்குப் பெரிய நம்பிக்கையையும் மனநிறைவையும் தந்திருக்கிறது. இந்தியளவில் வந்த திருநங்கை பற்றிய படங்கள் ‘எங்களை வீட்டை விட்டுத் துரத்திவிட்டார்கள்’ என்பதோடு நிறுத்திவிடும்.
ஆனால், துரத்தப்படும்போது அங்கு என்ன நடந்தது? ஆணாதிக்கமும் சாதியக் கட்டமைப்பும் எப்படி ஒரு திருநங்கையின் கழுத்தை நெரிக்கிறது என்பதை இந்தப் படம் மிகத் துல்லியமாகக் காட்டியுள்ளது.
பெற்றோரின் புகைப்படத்திற்கு நடுவே மகனின் புகைப்படத்தைத் தூக்கி எறியும் ஒரு காட்சி மட்டுமே அதற்குச் சிறந்த சான்று. இந்தப் படத்திற்காக இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் மிகப் பெரிய ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளார் என்பது புரியவருகிறது.
திருநங்கைகளிடம் பேசாமல், அவர்களின் இலக்கியப் படைப்புகளைப் படிக்காமல் இதை உருவாக்கியிருக்க முடியாது. எழுத்தாளர் சரவணன் சந்திரனும், இயக்குநர் கார்த்திக் சுப்பராஜும் இத்தகைய தீவிரமான ஆராய்ச்சியை மேற்கொண்டிருப்பது பாராட்டுக்குரியது,” எனப் பேசினார்.
இப்படம் பற்றிய தன்னுடைய பார்வையைப் பகிர்ந்துகொண்ட திரைப்பட விமர்சகர் கார்த்திக் கிருஷ்ணா, ”நான் இந்தப் படத்தை ஒரு அரசியல் திரைப்படமாகப் பார்க்கவில்லை. இயக்குநர் கார்த்திக் சுப்பராஜும் ஒரு பேட்டியில், “இதை பால் புதுமையினர் ஆதரவுப் படமாகப் பார்க்காதீர்கள்” என்று கூறியிருந்தார்.
சக மனிதரை மதிக்க வேண்டும் என்பதை உணர்த்துவதாகப் பார்க்கிறேன். பெண்ணாக மாறுபவர்களுக்கு இந்தச் சமூகத்தில் அளிக்கப்படும் மரியாதை என்ன, அது எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்த ஒரு விழிப்புணர்வை உருவாக்க கார்த்திக் சுப்பராஜ் முயன்றிருக்கிறார். இந்தப் படத்திற்கு நேர்மறையாகவும், எதிர்மறையாகவும் பல விமர்சனங்கள் வந்தாலும், ஒரு முக்கியமான உரையாடலை இப்படம் தொடங்கி வைத்திருக்கிறது.

அதுவே மிக முக்கியமான விஷயம். நீங்கள் பால் புதுமையினர் கருத்துக்களுக்கு ஆதரவாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை. ஆனால், அவர்களை ஒதுக்கித் தள்ளக் கூடாது என்ற பார்வையை முன்வைக்கும் படம் இது.
ஆணாகப் பார்த்த ஒருவரைத் திடீரெனப் பெண்ணாகப் பார்ப்பது கடினமாகத்தான் இருக்கும். ஆனால், அப்படியான மனத்தடையை மாற்றுங்கள் என்றுதான் இந்தப் படம் சொல்கிறது.
மேலும், இந்தப் படத்தின் திரைமொழியும் என்னைக் கவர்ந்தது. கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய படங்களை விட, இந்தப் படத்தின் திரைமொழி மிகவும் நேர்த்தியாகவும் நுட்பமாகவும் இருந்ததாக நினைக்கிறேன். முதல் 10 நிமிடங்களிலேயே நம்மை அந்த உலகத்திற்குள் கொண்டு சென்று விடுகிறார்.
ஒளிப்பதிவு, படத்தொகுப்பு என அனைத்துத் துறைகளும் சிறப்பாக அமைந்தால் மட்டுமே இத்தகைய அனுபவம் சாத்தியமாகும். மதுரையின் வெயிலை உணர வைக்கும் வகையிலான ஒளிப்பதிவும் படத்தில் இருந்தது.
முக்கியமாக, இளையராஜா சாரின் பின்னணி இசை இந்தப் படத்தின் ஆன்மாவாக இருக்கிறது. கார்த்திக் சுப்பராஜ், இப்படி ஒரு கதைக் கருவை யோசித்து, அதை வெகுஜன சினிமாவில் கொண்டு வரத் துணிந்ததே பெரிய விஷயம்.
தமிழ் சினிமாவில் இரண்டு கதாநாயகர்களில் ஒருவரைத் திருநங்கையாக வைத்து, அவர்களின் மாற்றத்தையே முதன்மைக் கதையாக உருவாக்கியிருப்பது இதுவே முதல் முறை என நினைக்கிறேன். இதற்கு முன் இயக்குநர் மிஷ்கின் தன்னுடைய படங்களில் திருநங்கை கதாபாத்திரங்களைக் கண்ணியமாகச் சித்தரித்திருக்கிறார்.

ஆனால், ஒரு படத்தில் திருநங்கையை முதன்மைப் பாத்திரமாக வைப்பது அரிது. கடந்த 2024-ம் ஆண்டு ‘நீல நிறச் சூரியன்’ என்ற சுயாதீனப் படம் வந்தது. ஒரு திருநங்கையின் நிஜ வாழ்க்கைப் போராட்டத்தைப் பதிவு செய்த அந்தப் படம் பெரியளவில் கவனிக்கப்படவில்லை.
ஆனால், ஒரு வெகுஜன சினிமாவில் திருநங்கைகளின் தனிப்பட்ட வாழ்க்கைப் போராட்டத்தையும், அவர்கள் சந்திக்கும் மனப் போராட்டங்களையும் முதன்மையாக வைத்து எடுத்த வகையில் ‘டோரதி’ படம் தனித்து நிற்கிறது” என்றார்.
‘டோரதி’யின் முக்கிய அம்சங்கள் குறித்து விவரித்த இயக்குநர் சசி, “இங்கே ஆண், பெண் என்பதைத் தாண்டி மூன்றாம் பாலினம் என்று ஒன்று இருப்பதே பல கோடிக்கணக்கான மக்களுக்குத் தெரியவில்லை. அதை ஏதோ தவறான ஒரு பிறவி என்றோ, குணம் கெட்டுப்போன விஷயம் என்றோ தவறாகப் புரிந்து வைத்திருக்கிறார்கள்.
ஆனால், அது இயல்பான ஒரு பிறப்பு என்பதை அழுத்தமாகச் சொன்ன படம் ‘டோரதி’. முன்பு வந்த ‘பேரன்பு’ படத்தில் ஒரு ஆண் திருநங்கையைத் திருமணம் செய்து கொள்வதைக் காட்டியிருப்பார்கள்.
மலையாளப் படமான ‘காதல் தி கோர்’ திரைப்படத்தில் ஒரு ஆண் தன் விருப்பத்திற்கேற்ப இன்னொரு ஆணோடு சேர்வதை மிக மென்மையாகக் கூறியிருப்பார்கள்.
ஆனால், நண்பனாக இருந்த ஒருவன் பெண்ணாக மாறிய பிறகு, அந்த நட்பே காதலாக மாறுவதை இவ்வளவு அழுத்தமாகவும் பொட்டில் அறைந்தாற்போலவும் வேறு எந்தப் படமும் சொன்னதில்லை. ‘பேரன்பு’ அல்லது ‘காதல் தி கோர்’ போன்றவை சாஃப்ட்டான பின்னணியில் பேசப்பட்டவை.

ஆனால், ‘டோரதி’ ஒரு நவீன பாணியைக் கையிலெடுத்து, திரைப்பட வடிவில் இந்த விஷயத்தைத் துணிச்சலாகப் பேசியிருக்கிறது. தமிழ் சினிமா மிகவும் பெருமைப்பட்டுக்கொள்ள வேண்டிய ஒரு படைப்பு இது.
சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டைப் பெற்றிருந்தாலும், வெகுஜன பார்வையாளர்கள் இதை ஏற்றுக்கொள்வார்களா என்ற பயம் நிச்சயமாக இயக்குநர் கார்த்திக் சுப்புராஜுக்கு இருந்திருக்கும்.
தான் சொல்ல நினைத்த கருத்தை மக்களுக்கும் பிடிக்கும் வகையில் தைரியமாக முன்வைத்திருக்கிறார் கார்த்திக் சுப்பராஜ். தன் நண்பன் பெண்ணாக மாறியதும், அவளை வெறும் மனிதராக மட்டுமன்றி, “என் மனைவியாகவே ஏற்றுக்கொள்கிறேன்” என்று அரவணைக்கும் இடத்திற்கு நகர்ந்ததுதான் இந்தப் படத்தின் ஆகப்பெரிய சிறப்பு,” எனப் பகிர்ந்துகொண்டார்.
டாஸ்க்கும் வேணாம்.. ஒன்னும் வேணாம்.. ரூ.5 லட்சம் பணப்பெட்டியுடன் வெளியேறிய போட்டியாளர்!
September 30, 2026
Yezhu Kadal Yezhu Malai First Review – ராமின் ஏழு கடல் ஏழு மலை முதல் விமர்சனம்.. வன்முறை இருக்காம்
September 30, 2026
பகத் பாசில் நடிக்கும் 'டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்' படத்தின் கதை இதுதான்.. சூர்யா சூப்பர் பேச்சு!
September 29, 2026
8 years of Pariyerum Perumal: "சில பயணங்கள் நம்மை விட்டு என்றென்றுமே பிரிவதில்லை" – கதிர் நெகிழ்ச்சி
September 29, 2026
ஜனனி காலில் விழுந்து கதறிய கதிர்.. பணத்தைத் திருப்பித் தந்த லக்ஷ்மணன்.. எதிர்நீச்சல தொடர்கிறது
September 29, 2026
"சிறுத்தை" கார்த்தி மகளா இது? கதாநாயகி ரேஞ்சுக்கு மாறிய லேட்டஸ்ட் போட்டோஸ்!
September 29, 2026
டாஸ்க்கும் வேணாம்.. ஒன்னும் வேணாம்.. ரூ.5 லட்சம் பணப்பெட்டியுடன் வெளியேறிய போட்டியாளர்!
September 30, 2026
யாரு சாமி அவன்.. 8400mAh பேட்டரி.. 100W சார்ஜிங்.. SONY கேமரா.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
September 30, 2026
A Lok Sabha bypoll in Tamil Nadu that triggered the first Motion of Confidence in Indian legislature
September 30, 2026
Yezhu Kadal Yezhu Malai First Review – ராமின் ஏழு கடல் ஏழு மலை முதல் விமர்சனம்.. வன்முறை இருக்காம்
September 30, 2026
T.N. government proposes memorial for 5 icons on University Union Grounds at Chetpet in Chennai, sports teachers object
September 30, 2026
'The Train Isn't Stopping' — Diablo 4 Director Promises the Game Will Still Receive Support Well After Diablo 5 Launches
September 29, 2026