விக்ரம், நுணுக்கமான உணர்வுகளைப் புரிந்து கொள்கிறவனாகவும், புத்திசாலியாகவும் இருக்கிறான். அவன் ஒரு பைக் ஆர்வலனும் கூட! அவனிடமிருக்கும் பழைய பைக் ஒன்றின் ஸ்பேர்பார்ட்டுக்காக ஒரு கடையில் காத்திருக்கிறான். புதிதாக வேலையில் சேர்ந்து இப்போது அவனது குழுவிலிருக்கும் கான்ஸ்டபிள் சந்தானமும் அவனுடனேயே நின்று கொண்டிருக்கிறான். அப்போது என்கவுண்டர்களைப் பற்றிய சந்தானத்தின் கேள்விகளுக்குப் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறான் விக்ரம்.
”உனக்கு குழப்பமாத்தான் இருக்கும் சந்தானம். ஆனா எனக்கு எந்தக் குழப்பமும் இல்லை. ஏன்னா நான் கொல்லுற யாரும் இன்னொசண்ட் இல்லைன்னு எனக்கு நல்லாத் தெரியும். முகத்தைப் பார்த்தாலே அவங்க யாரு, எப்படிப் பட்டவங்கன்னு என்னால சொல்லிட முடியும். இப்பக் கவனி, இந்தக் கடைக்காரன் வந்து, செயின் ஸ்ப்ராக்கெட் மட்டும் கிடைக்கல சார்னு சொல்லுவான் பாரு”
அவன் சொன்னதைப் போலவே, அந்தக் கடைக்காரன் வந்து, ”நல்லாத் தேடிப் பாத்துட்டேன் சார், செயின் ஸ்ப்ராக்கெட் மட்டும் கிடைக்கல” என்று சொல்கிறான்.

ஆனால், விக்ரம் ஓர் இன்னொசண்டைக் என்கவுண்டரில் கொலை செய்திருக்கிறான் என்பது பின்னர் வேதா சொல்லும் கதை மூலமாக வெளிப்படுகிறது. அப்போது வேதா அவனுக்காக, அவன் தேடிக் கொண்டிருக்கும் செயின் ஸ்ப்ராக்கெட்டையும் பரிசாக அனுப்புகிறான். இத்தனை நுணுக்கமாகவும், ரசனையாகவும் எழுதப்பட்டிருந்தது விக்ரம் வேதாவின் திரைக்கதை.
நேர்மையான ஒரு காவல் அதிகாரி விக்ரம். அவனது தலைமையிலான ஒரு காவல்துறைக் குழு, கடுமையான குற்றவாளிகளை என்கவுண்டரில் கொலை செய்வதில் நிபுணத்துவம் பெற்றதாக இருக்கிறது. விக்ரமுக்கு அதில் எவ்விதக் குற்றவுணர்ச்சியும் இல்லை. அப்படியான குற்றவாளிகளால் இந்தச் சமூகம் எத்தனைச் சீரழிவுகளைச் சந்திக்கிறது என்பது அவனது கருத்து.
போலவே இன்னொரு புறம் வேதா எனும் பெரிய கேங்ஸ்டர், கடத்தல் உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறான். விக்ரமின் என்கவுண்டர் பட்டியலில் அவனே பிரதானமாக இருக்கிறான். அவனைக் கொல்லும் முன்னேற்பாட்டு நடவடிக்கைகளில் அவனது கூட்டாளிகளின் மீது என்கவுண்டர்கள் நடக்கின்றன. அந்நேரத்தில் யாரும் எதிர்பாராத விதமாக வேதா நேரில் வந்து போலீஸில் சரணடைகிறான். வேதா எதற்காகச் சரணடைந்தான், விக்ரமால் வேதாவைக் கொல்ல முடிந்ததா என்பதுதான் கதை!
அடிப்படையில் விக்ரம் வேதா படத்தின் கதை ’ஹூடனிட்’ வகையைச் சேர்ந்த ஒரு சாதாரண கிரைம் கதைதான். சில போதாமைகளும் கூட இருந்தன. குறிப்பாக வேதா, நிரபராதியான தன் தம்பி புள்ளி என்கவுண்டர் செய்யப்பட்டதைப் பொறுக்காமல்தான், விக்ரமுடன் இப்படி ஓர் ஆட்டத்தில் இறங்குகிறான். ஆனால், புள்ளி நிரபராதியா என்று கேட்டால், ஒரு பார்வையாளனாக நமக்கு அது சந்தேகமாகத்தான் இருக்கிறது.
ஒப்புக்கு இப்படியொரு தொழிலைச் செய்ய வேண்டாமென்று அண்ணனைக் கேட்டுக் கொள்கிறானே தவிர புள்ளி வேறு உருப்படியாக எதுவும் செய்வதில்லை. அத்தோடு வேதா தன் குற்றச்செயல்களின் மூலம் கொண்டு வரும் பணத்தைக் கொண்டு தொழில் செய்து அதை வெள்ளையாக்கவும் வழி சொல்லிக் கொடுக்கிறான். அதற்காக நாம் புள்ளி கொலை செய்யப்பட்டது சரிதான் என்று சொல்ல வரவில்லை.

விக்ரம் வேதா, என்கவுண்டருக்கு ஆதரவாகவோ, எதிராகவோ தன் கருத்தைப் பதிவு செய்யும் படமல்ல என்பதால் அந்த விவாதத்துக்குள் போகாமல்; இதனால் வேதா, விக்ரமை மடக்கும் அந்த முக்கியமான பகுதி வலுவில்லாமல் போய்விடுகிறது என்பது மட்டுமே நமது கருத்து. ஆனாலும், இதன் திரைக்கதை அமைப்பு இந்தச் சிறு குறைகளையெல்லாம் தாண்டி, படத்தை வேறொரு தளத்துக்கு எடுத்துச் சென்றது.
இந்தியாவின் புகழ்பெற்ற பழங்கதைகளுள் ஒன்றான ’விக்ரமாதித்யனும் வேதாளமும்’ எனும் கதையின் வடிவில் இந்த ’விக்ரம் வேதா’வின் திரைக்கதை புனையப்பட்டிருந்தது. விக்ரமாதித்யன் கதைகள்; வேதாளத்தைப் பிடித்துவரும் விக்ரமாதித்யனிடம், வேதாளம் புதிர்த்தன்மை கொண்ட ஒரு கதையைச் சொல்லி, அதன் முடிவை அவனிடமே கேட்பதாக அமைக்கப்பட்டிருக்கும். அப்படியே, வெவ்வேறு சூழல்களில் விக்ரமைச் சந்திக்கும் வேதா, விக்ரமிடம் மூன்று கதைகளைச் சொல்கிறான். அந்தக் கதைகள் மூலமாகவே ஏற்கனவே போடப்பட்ட முடிச்சுகள் கட்டவிழ்ந்து, புதிய கேள்விகள் உருவாகின்றன. இந்த திரைக்கதை அமைப்பு அசாதாரணமான, புதுமையான ஓர் உணர்வைப் பார்வையாளர்களுக்குக் கொடுத்தது.

விக்ரமாக மாதவனும், வேதாவாக விஜய் சேதுபதியும் நடித்திருந்தார்கள். 2000-ல் அலைபாயுதே எனும் கிளாசிக் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவுக்குள் வந்த மாதவன், அடுத்த பத்து வருடங்கள் வெற்றிகரமான ஹீரோவாக இங்கே வலம் வந்தார். அதன் பிறகு இரண்டாவது ஹீரோவாகவும், குணச்சித்திர வேடங்களிலும் அவர் நடிக்கத் தொடங்கிய போது, இந்தப் படம் அவரது திரைப்பயணத்தில் குறிப்பிடத்தகுந்த படமாக அமைந்தது. தான் செய்வது தவறே இல்லை எனும் தீர்க்கமான முடிவுடன் இயங்கிக்கொண்டிருக்கும் விக்ரமை, ஒரு கதையின் மூலமாக வேதா மடக்கும் காட்சியில், நாம் சரியான திசையில்தான் போகிறோமா என்று விக்ரம் சந்தேகத்துக்குள்ளாகும் காட்சிகளில் மாதவன் மிளிர்ந்தார்.
இப்போது ஹீரோ, வில்லன், கேமியோ, டபுள் ஹீரோக்களில் ஒருவர் என்று இமேஜைப் பற்றிய கவலைகளின்றி சினிமா, டிவி, ஓடிடி பல தளங்களிலும் அடித்து ஆடிக் கொண்டிருக்கும் விஜய் சேதுபதியை மிக வித்தியாசமான வேதா பாத்திரத்தில் காட்டிய இந்தப்படம் அவரது கேரியரில் முக்கியமான படமாகவும் இருக்கிறது. விக்ரமிடம் பணிவையும், மிரட்டலையும் ஒரு சேர வெளிப்படுத்துவது போன்ற அவரது உச்சரிப்பும், நடிப்பும் செம்மையாக அமைந்திருந்தது. விக்ரமின் மனைவியாக ஷ்ரத்தாவும், வேதாவின் தம்பியாக கதிரும் நடித்திருந்தார்கள். வரலட்சுமி சரத்குமார், ஹரீஷ் பேரடி, அச்யுத் குமார் போன்ற பலரும் முக்கியமான பாத்திரங்களில் நடித்திருந்தார்கள்.
படத்தின் இசையமைப்பாளர் சாம்.சி.எஸ்! இந்தப் படத்தின் பின்னணி இசையும், பாடல்களும் மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றன. விஜய் சேதுபதி கமிஷனர் அலுவலகத்துக்குச் சரணடைய வரும் காட்சியின், அட்டகாசமான தீம் இசையில் ரசிகர்கள் ஒன்றிப்போனார்கள். அனிருத், சக்திஸ்ரீ கோபாலன் பாடிய ”யாஞ்சி, யாஞ்சி”; பிரதீப் குமார், நேகா வேணுகோபால் பாடிய ”போகாத என்னை விட்டு”; முகேஷ், கார்த்திகேயன், மகாலிங்கம், குணா ஆகியோர் பாடிய ”டசக்கு டசக்கு” என அனைத்து பாடல்களுமே மிகப்பெரிய ஹிட் பாடல்களாக அமைந்தன.
ரிதம், ஆரண்யகாண்டம் போன்ற முக்கியமான படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த பி.எஸ்.வினோத் இந்தப் படத்துக்கான ஒளிப்பதிவைச் செய்திருந்தார். மாதவன், விஜய் சேதுபதி தோன்றும் ஃபேஸ் ஆஃப் காட்சிகளை இவர் காட்சிப்படுத்திய விதம், படத்துக்கான பெரிய பலமாக அமைந்தது.

ஒய் நாட் ஸ்டுடியோஸ் சார்பாக இந்த படத்தை தயாரித்தவர் சஷிகாந்த். படத்தின் கதை திரைக்கதையை எழுதி, இயக்கியிருந்தவர்கள் புஷ்கர் -காயத்ரி. கணவன் மனைவியான இவர்கள் இருவரும் தங்களது காட்சிமொழிப் பயணத்தை விளம்பரப்பட உலகிலிருந்து தொடங்கியவர்கள். 2007 ஆம் ஆண்டு வெளியான ஓரம்போ படத்தின் மூலமாக இயக்குனர்களாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்கள். அந்தப் படத்தின் வசனத்தை எழுதியது தற்போது பிரபல இயக்குனராக இருக்கும் தியாகராஜன் குமாரராஜா. புஷ்கர் காயத்ரியின் திரைக்கதை அணுகுமுறையும், மேக்கிங் ஸ்டைலும் தனித்துவமானதாக இருந்தது. இதுவரை நான்கைந்து படங்களை மட்டுமே இயக்கியிருக்கும் இவர்களின் அடையாளமாகவே விக்ரம் வேதா மாறிப்போனது.
விக்ரம் வேதா படத்தின் வசனத்தை எழுதியது மணிகண்டன். தற்போது பிரபலமான நடிகராக அறியப்படும் மணிகண்டன், தொடக்கத்தில் உதவி இயக்குனராகவும் திரைக்கதை மற்றும் வசன எழுத்தாளராகவும் சினிமாவில் பணியை தொடங்கியவர். இந்தப் படத்தில் சந்தானம் எனும் ஒரு சிறிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். இதன் பிறகுதான் காலா, ஜெய்பீம் என குறிப்பிடத்தகுந்த கதாபாத்திரங்களில் நடித்துப் புகழ்பெற்றார்.
வேதா மொத்தம் மூன்று கதைகளை விக்ரமுக்குச் சொல்கிறான். முதல் கதை, அவனே முன்வந்து சரணடைந்த போது நடக்கும் விசாரணையின் போது சொல்லப்படுகிறது. அது வேதாவின் பின்னணியை விளக்குகிறது. அதுவே விக்ரமை வேதாவின் உலகத்துக்குள்ளும் இழுத்து வருகிறது. அடுத்த முறை, தப்பிவிட்ட வேதாவை இன்னும் ஆவேசத்தோடு துரத்திப் பிடிக்கிறான் விக்ரம். அங்கே இரண்டாவது கதை சொல்லப்படுகிறது. அதன் முடிவில்தான் ’நான் யார் பக்கம் நிற்கவேண்டும் சார்? புள்ளியா? சேட்டாவா?’ என்று வேதாளத்தைப் போலக் கேட்கிறான் வேதா.
விக்ரமாதித்யனின் இடத்தில் இருக்கும் விக்ரமின் வாயிலிருந்து அந்தப் பதில் வருகிறது,
”நான் புள்ளியின் பக்கம் நிற்பேன். ஏன்னா புள்ளி ஒரு இன்னொசண்ட்”

மொத்தக் கதையுமே பிரமிப்பை ஏற்படுத்தும் இடம் இது. அங்கே விக்ரமைத் தாக்கிவிட்டுத் தப்புகிறான் வேதா. முடிவில் மூன்றாவது கதையைச் சொல்கிறான் வேதா. மூன்று கதைகளுமே விக்ரம் ஏற்கெனவே நம்பிக்கொண்டிருக்கும் சில விஷயங்களைக் கேள்விக்குள்ளாக்குகின்றன.
விக்ரமும் வேதாவும் இறுதியில் எதிரெதிரே நிற்கும்போது, யார் சரி, யார் தவறு என்ற கேள்விக்குப் படம் ஒரு எளிய பதிலைத் தருவதில்லை. குற்றவாளி யார் என்று கண்டுபிடிப்பதைப் போலவே, ஒரு குற்றத்துக்குப் பின்னால் இருப்பவர்களின் நோக்கங்களையும் சூழல்களையும் கசடற புரிந்துகொள்வதும் மிக முக்கியம் என்பதையும்; மனிதர்களைக் கருப்பு, வெள்ளை என்று இரண்டாக மட்டுமே அடையாளப்படுத்திவிட முடியாது என்பதையும் வேதா, விக்ரமுக்கும், நமக்கும் உணர்த்திச் செல்கிறான்.!
ஜேசனும் நானும்.. அதை சொல்ல நீங்க யார்?.. கிசுகிசு வதந்திக்கு சாந்தினி கொடுத்த பதிலடி!
October 23, 2026
உதட்டை கடிங்க மேடம்.. கன்றாவியா இருக்கும்.. கவர்ச்சி பட இயக்குநர்களை வறுத்தெடுத்த ஷகீலா!
October 23, 2026
Jailer 2 Day 8 Box Office – ஜெயிலர் 2 8வது நாள் வசூல் இவ்வளவா?.. பாக்ஸ் ஆஃபிஸ் நிலைமை என்ன?
October 23, 2026
திருமணத்துக்கு ராஷ்மிகா மந்தனாவை கெஞ்ச விட்ட விஜய் தேவரகொண்டா.. இதெல்லாம் ரொம்ப ஓவர் பாஸ்
October 23, 2026
Haiku: "ஹிப் ஹாப் ஆதி அண்ணா எங்களை பாட வச்ச அந்த மொமன்ட்..!" – அதிர்ச்சி அருண் பேட்டி
October 22, 2026
ஜெயிலர் 2 முரட்டு வில்லன்.. நீச்சல் குளத்தில் யாருடன் குளிக்கிறாரு பாருங்க.. மனைவி போட்ட கமெண்ட்!
October 22, 2026
Vaikunta Ekadasi celebrations to begin on December 9 at Srirangam temple
October 23, 2026
ஏழைக்கு ஏத்த BSNL.. அடுத்த 80 நாட்களுக்கு வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. 300 எஸ்எம்எஸ்!
October 23, 2026
T.N. BJP chief Nainar Nagenthran condemns arrest of farmers seeking waiver of loans
October 23, 2026
Why Bavuma turned away during Smith's catch? SA captain explains viral reaction
October 23, 2026
Loader Monteith expands red-brick bungalow within "remarkably compact footprint" near Manchester
October 23, 2026
BCCI appoints pacer who played two T20Is as Junior Selection Committee chief
October 23, 2026