சட்டமன்றக் கூட்டத்தொடரில், காவல்துறை மானியக் கோரிக்கையின்போது முதல்வர் அளித்த ஆவேச உரை, அரசியல் அரங்கில் பலத்த சர்ச்சையையும் விமர்சனத்தையும் உருவாக்கியிருக்கிறது. இந்த நிலையில், த.வெ.க அரசுக்கு ஆதரவு அளித்துவரும் கம்யூனிஸ்ட் கட்சிகள், த.வெ.க கூட்டணிக் கூட்டத்தையும் புறக்கணித்திருக்கின்றன. மேலும், ‘வரலாற்றைப் படியுங்கள்’ என மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகம் ஆளுங்கட்சியினரை அறிவுறுத்தியிருக்கிறார்.
பரபரப்பான இந்தச் சூழலில், மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினரும் முன்னாள் எம்.எல்.ஏ-வுமான பாலபாரதியிடம் நமது கேள்விகளை முன்வைத்தோம்…
“த.வெ.க அரசின் ஆட்சியை எப்படிப் பார்க்கிறீர்கள்?”
கடந்த தி.மு.க ஆட்சியின்போது, போதை கலாசாரம், சிறுமிகள் பலாத்காரம் என ‘சட்டம் – ஒழுங்கு பிரச்னை’ குறித்துதான் த.வெ.க-வினர் அதிகம் கேள்வி எழுப்பினர். ஆனால், இன்று அதே த.வெ.க-வின் 100 நாள் ஆட்சியில் ‘சிங்கப் பெண்கள் படை’ அமைத்ததைத் தவிர, சிறுமிகள் பாலியல் வன்கொடுமை -படுகொலை, போதை பொருள் புழக்கம் என சட்டம் ஒழுங்கு மிக மோசமாகவே இருக்கிறது.
ஶ்ரீவைகுண்டத்தில், த.வெ.க-வைச் சேர்ந்த பெண் ஒருவரே கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுகிறார். இந்த விவகாரத்தில் குற்றவாளிகளைப் பாதுகாப்பதில் த.வெ.க எம்.எல்.ஏ-வும் உடந்தையாக இருந்திருக்கிறார். ஆனால், இப்போது பாதிக்கப்பட்ட பெண்ணையே புகாரை வாபஸ் பெற வைத்துவிட்டார்கள். இதுமட்டுமல்ல, லாக்கப் டெத், போராட்டங்களுக்கு கட்டுப்பாடு, மாணவர் போராட்டங்களை ஒடுக்குவது என இந்த அட்டூழியங்கள் எல்லாம் 100 நாள் ஆட்சியில் அரங்கேறிவருகின்றன. இவ்விவகாரங்களில் த.வெ.க அரசு, என்ன நிலைப்பாடு எடுக்கிறது என்பதையெல்லாம் கூர்ந்து கவனித்து, அரசின் நடவடிக்கை சரியாக இருந்தால் அதை வரவேற்பதும், சரியில்லாத திட்டங்களின் மீது எங்களின் விமர்சனங்களை வைப்பதோடு, அதை எதிர்த்துப் போராடவும் செய்கிறோம்.”
“தமிழ்நாட்டில், பா.ஜ.க ஆதரவு கட்சி ஆட்சிப் பொறுப்புக்கு வந்துவிடக் கூடாது என்று த.வெ.க அரசுக்கு ஆதரவளித்த கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இது ஏமாற்றத்தை தந்திருக்கிறது என்கிறீர்களா?”
“பொருளாதார கொள்கை என்று வரும்போது கார்ப்பரேட் நிறுவனங்களையும் தனியார் மயத்தையும்தான் முழுமையாக அமல்படுத்தி வருகிறது மத்திய பா.ஜ.க அரசு. கடந்தாகால தி.மு.க ஆட்சியும்கூட சேலம், கோவை குடிநீர் விநியோகத்தை சூயஸ் என்ற தனியார் நிறுவனத்தின் கீழ் கொண்டுவந்தது. அண்மையில் த.வெ.க அரசின் பட்ஜெட்டிலும் மின் உற்பத்தி, விநியோகம், மேலாண்மை உள்ளிட்ட விவகாரங்களில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்புகள் குறித்துதான் அதிகம் சொல்லப்பட்டிருக்கின்றன.
ஆக கடந்தகால அரசுகள் எந்தப் பாதையில் பயணித்தார்களோ அதே பாதையில் இன்னும் கூடுதலாக தனியாரை உள்ளே கொண்டுவருவதற்கான முயற்சியில்தான் த.வெ.க அரசு இருக்கிறது. இதெல்லாம் பொருளாதார சமத்துவத்தை வலியுறுத்துகிற இடதுசாரி கொள்கைகளுக்கு எதிரானது. கம்யூனிஸ்ட்டுகளுக்கு இது ஏமாற்றமா, இல்லையா என்பதைவிடவும், மக்களுக்கான நலத்திட்டங்களில் த.வெ.க அரசு தனியார் மயத்தை ஊக்குவிக்காமல் இருக்கவேண்டும் என்பதுதான் இங்கே முக்கியம்.

எனவேதான், தமிழக அரசின் நடவடிக்கைகளைத் தொடர்ந்து கண்காணித்து, நல்ல திட்டங்களை பாராட்டுகிறோம்; மக்கள் விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து போராட்டம் நடத்தி எங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்துவருகிறோம்.”
“கடந்த 100 நாள் ஆட்சியில் த.வெ.க அரசு அறிவித்திருக்கும் திட்டங்கள் வரவேற்கக்கூடியவையாக இருக்கின்றனவா?”
“ஏற்கெனவே தி.மு.க ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களின் பெயரை மட்டும் கொஞ்சம் வெட்டி ஒட்டி மாற்றிவிட்டு திட்டத்தை அப்படியே தொடர்கிறார்கள். கூடுதலாக ஒன்றிரண்டு நலத்திட்டங்களை அறிவித்திருக்கிறார்கள். ஆனால், அதற்கான நிதி ஆதாரத்துக்கு என்ன செய்யப்போகிறார்கள் என்ற தெளிவான விளக்கங்கள் எதையும் இப்போதுவரை இந்த அரசு சொல்லவில்லை.
ஏனெனில், கடந்த ஐந்து ஆண்டுக்கால தி.மு.க ஆட்சியின்போது, மத்திய பா.ஜ.க அரசு தமிழ்நாட்டுக்குத் தேவையான நிதி ஒதுக்கீட்டைத் தராமல் கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராகவே செயல்பட்டு வந்தது. இயற்கைப் பேரிடர், கல்வித் திட்டம், ஜி.எஸ்.டி வரி பாக்கி என மத்திய அரசு சம்பந்தப்பட்ட அனைத்து நிதி விவகாரத்திலும் தமிழ்நாடு வஞ்சிக்கப்பட்டது.”
“ஆனால், மத்திய பா.ஜ.க அரசுடன் இணக்கமாக இருந்து திட்டங்களை நிறைவேற்றுவோம் என்கிறார்களே த.வெ.க ஆட்சியாளர்கள்?”
“நிதிப்பகிர்வு விவகாரத்தில் தமிழ்நாடு தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டதால்தான், மாநில உரிமை மீட்டெடுக்கப்பட வேண்டும் என்ற முழக்கத்தோடு ஒன்றிய பா.ஜ.க அரசை எதிர்த்து கடந்த சட்டமன்றத் தேர்தலில் நாங்கள் பரப்புரை மேற்கொண்டோம்.
ஆனால் த.வெ.க அரசில், மாநில உரிமை மீட்பு, மாநிலத்துக்கான நிதி நெருக்கடி எங்கே உருவாகிறது என்பது குறித்தெல்லாம் மாநில பட்ஜெட்டிலும் விளக்கப்படவில்லை; நடந்துமுடிந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் விவாதமும் நடைபெறவில்லை.
சட்டமன்றம் என்பதே, தி.மு.க, த.வெ.க, அ.தி.மு.க என அரசியல் கட்சிகளுக்கு இடையேயான சண்டையும் சச்சரவுமாகவே நடந்து முடிந்திருக்கிறது. சட்டசபையில் சமூகநீதித்துறை அமைச்சர் வன்னியரசு, ‘அமித் ஷா’ பெயரை உச்சரித்ததற்கே, ‘அந்த வார்த்தை சபைக்குறிப்பிலிருந்து நீக்கப்படுகிறது’ என சபாநாயகர் அறிவித்துவிட்டார்.
இதுமட்டுமல்ல… ஒன்றிய பா.ஜ.க அரசு குறித்து யார் பேசினாலும் அது சபை குறிப்பிலிருந்து நீக்கப்படுகிறது. அப்படியென்றால் இதன் பொருள் என்ன… ஒன்றிய அரசுடன் இணக்கமாக இருக்கிறோம் என்பது இதுதானா?”
“அரசியல் ரீதியாக பா.ஜ.க-வை எதிர்க்க த.வெ.க பயப்படுவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சிக்கின்றனவே?”
“ஒன்றிய பா.ஜ.க அரசை எதிர்ப்பதை விட்டுவிடுங்கள்… பாராட்டியாவது கருத்து சொல்லுங்கள்! ஆனால், எந்த கருத்துமே சொல்லாமல், பிரச்னைகளை எல்லாம் மாநில அரசியல் கட்சிகளுக்கு எதிராகவே மடைமாற்றிக் கொண்டிருந்தால், அதை என்னவென்று புரிந்துகொள்வது?”
“அப்படியென்றால், த.வெ.க அரசின் இந்த 100 நாள் ஆட்சி உங்களுக்கு இன்னும் நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை என்கிறீர்களா?”
“மக்களுக்கான அரசாங்கம் என்று வந்துவிட்டால், ஒரு கட்சி தங்களது கொள்கையை, நிலைப்பாட்டை வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும்.
உண்மையிலேயே நீங்கள் யாருக்கும் பயப்படமாட்டீர்கள் என்றால், ஒன்றிய அரசின் நிதிப்பகிர்வு குறித்தான விவாதங்களை சட்டமன்றத்தில் அனுமதித்திருக்க வேண்டும். மாறாக, ஒன்றிய அரசை விமர்சிக்கமாட்டேன், விவாதிக்க மாட்டேன் என்றால், மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றுவதற்கான நிதியை எங்கிருந்து பெற முடியும்?”
“கடந்த தி.மு.க ஆட்சியின்போது சட்டம் ஒழுங்கை விமர்சித்து ஆட்சிப் பொறுப்புக்கு வந்த த.வெ.க ஆட்சியில், சட்டம் ஒழுங்கு முன்பைவிடவும் மோசமாகிவிட்டதாக விமர்சனங்கள் எழுந்துள்ளனவே?”
“அந்த ஆட்சியில் அப்படி நடந்தது, இந்த ஆட்சியில் இப்படி நடக்கிறது என்றெல்லாம் ஒப்பிடத் தேவையில்லை. ஆனால், கடந்த தி.மு.க., அ.தி.மு.க ஆட்சிக்காலங்களில் காவல்துறை மானிய கோரிக்கையின்போது, ‘எத்தனை குற்றச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன, என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன’ என்பது குறித்தான புள்ளிவிவரங்களை எடுத்துவைப்பார்கள்.
ஆனால், ஆட்சிப் பொறுப்புக்கு வந்து 100 நாள் ஆகிவிட்ட சூழலில், காவல்துறை பொறுப்பை கையில் வைத்திருக்கக்கூடிய முதல்வர், துறை சார்ந்த எந்த கேள்விக்கும் பதில் கொடுக்கவில்லை என்பதுதான் சர்ச்சையாகியிருக்கிறது. த.வெ.க எம்.எல்.ஏ-வே ‘காவல்துறை அதிகாரிகளே சாதியப் பாகுபாடுடன் தான் பிரச்னைகளை அணுகுகிறார்கள்’ என புகார் சொல்கிறார். சட்டம் – ஒழுங்கு என்பது குற்றங்களை தடுக்கணும் அல்லது குறைக்கணும். ஆனால், ‘இந்த 100 நாள் ஆட்சியில் த.வெ.க அரசு அதைச் செய்யவில்லை’ என்பதுதான் விமர்சனம்.”
“மிசா கொடுமை சட்டம் குறித்த முதல்வரின் சட்டமன்றப் பேச்சை எப்படிப் பார்க்கிறீர்கள்?”
“பேச்சுரிமை, கருத்துரிமையைப் பறிப்பதற்காக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட கொடூர அடக்குமுறை சட்டம்தான் மிசா. ஆனால், தி.மு.க-வின் அநீதியைக் தண்டிப்பதற்காகவே மிசா சட்டம் கொண்டுவரப்பட்டது மாதிரியான ஒரு தோற்றத்தை நடந்துமுடிந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் ஆளுங்கட்சியினர் ஏற்படுத்திவிட்டார்கள். இது உள்ளபடியே கண்டனத்துக்கு உரியது. அதனால்தான், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம், ‘வரலாற்றைப் படித்து தெரிந்துகொண்டு பேசுங்கள்’ என ஆட்சியாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.”
“காவல்துறை மானியக் கோரிக்கையின்போது எதிர்க்கட்சிகள் எழுப்பிய எந்தக் கேள்விக்கும் முதல்வர் விஜய் பதிலளிக்கவில்லையே?”
“எதிர்க்கட்சிகள் சட்டமன்றத்தில் எழுப்பிய கேள்விகளை, அரசியலாக திசை திருப்பிவிட்டார் முதல்வர் என்பதுதான் இன்றைக்கு சர்ச்சையாகியிருக்கிறது. எப்போதோ முடிந்துபோன விஷயங்களை எல்லாம் தேவையே இல்லாமல், முதல்வரே எடுத்துப்பேசியதால் சட்டமன்றத்தின் நேரம்தான் வீணடிக்கப்பட்டிருக்கிறது. எம்.எல்.ஏ-க்களுக்கு எல்லாம் உதாரணமாக இருக்கவேண்டியவர் முதல்வர். ஆனால், அவரே ஆவேசமாக கைகளை உயர்த்தி செய்கை எல்லாம் செய்து பேசியிருப்பது… இதுவரை எந்த முதலமைச்சரும் செய்யாதது. முதல் அமைச்சருக்கான பண்பு, செயல்பாடு என்பது உயர்ந்த இடத்தில் இருக்க வேண்டும்.
தோழர் பெ.சண்முகம் சொன்னதுபோல், இஸ்மாயில் அறிக்கையை மட்டுமல்ல… அரசியலில் எல்லாவற்றையுமே கற்றுக்கொள்ளவேண்டும் த.வெ.க-வினர்.”
“முழுமையாக ஐந்து ஆண்டுகளும் த.வெ.க அரசுக்கு கம்யூனிஸ்ட்டுகள் ஆதரவு அளிப்பார்கள்’ என்று அமைச்சர் நிர்மல் குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளாரே…?”
“மாதங்கள், ஆண்டுகள் என்பதெல்லாம் இங்கே பிரச்னையில்லை. இந்த ஆதரவை வைத்துக்கொண்டு மக்களுக்கான பிரச்னைகளில் எந்தளவு தீர்வை ஏற்படுத்தப் போகிறீர்கள் என்பதுதான் இங்கே முக்கியமான கேள்வி.
தலைநகரில், பெரிய பன்னாட்டுக் கம்பெனிகளில் வழங்கப்பட்டுவரும் குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்துவதற்கு என்ன சட்டம் கொண்டு வந்திருக்கிறீர்கள்? தனியார் நிறுவனங்களிலும் இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்கான சட்டத்தை ஏன் அமல்படுத்தக்கூடாது? விவசாயிகளுக்கான உரம், பூச்சி மருந்து கொள்முதலுக்கு மானியம், பால் உற்பத்தியாளர்களுக்கான கொள்முதல் விலை உயர்வு என ஆக்கபூர்வமான பணிகள் எத்தனையோ இருக்கின்றன.
‘மாற்றத்தைக் கொடுப்போம்’ என்று சொல்லி ஆட்சிக்கு வந்த நீங்கள் உண்மையில் அந்த மாற்றத்தைத்தானே கொடுக்க வேண்டும். அதை விட்டுவிட்டு தேர்தல் அதிகாரத்தை மையப்படுத்தி சட்டமன்றத்தை வழிநடத்தினால் இது எப்படி மாற்றாகும்?”
“ஆளுங்கட்சிக்கு ஆதரவு என்ற பெயரில் கம்யூனிஸ்ட்டுகள் தொடர்ந்து நெருக்கடி கொடுத்துவருவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளனவே..?”
“அரசின் நடவடிக்கைகளை நாங்கள் கூர்ந்து கவனிப்பதோடு, ‘இடதுசாரிகளுக்கான ஒருங்கிணைப்புக் குழு’ ஒன்றையும் ஏற்படுத்தி அறிக்கை, போராட்டம் என உடனுக்குடன் ரியாக்ட் செய்துவருகிறோம். கோரிக்கைகள் குறித்து அரசிடமும் நேரடியாக பேசுகிறோம். அரசுக்கு ஆதரவு கொடுக்கிறோம் என்ற வகையில், எந்தப் பிரச்னையிலிருந்தும் நாங்கள் ஒதுங்கியும் நிற்கவில்லை; நெருக்கடியும் கொடுக்கவில்லை!”
இடைத்தேர்தல் 2026: நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களை அறிவித்த சீமான்! – யார் யார் தெரியுமா?
September 13, 2026
தமிழ்நாட்டில் பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவு; ஆளுநரைச் சந்தித்த JCD பிரபாகர் – என்ன பேசினார்கள்?
September 13, 2026
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: தனித்துக் களமிறங்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள்! – யார் எங்கே?
September 13, 2026
BRICS: "இன்று உலகளவில் பதற்றங்கள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன" – மோடி பேச்சு
September 13, 2026
"தீமைகள் எந்த ரூபத்தில் தமிழகத்திற்கு வந்தாலும் அது தீயசக்தி திமுகவால் மட்டுமே!” – நிர்மல் குமார்
September 13, 2026
"நீங்கள் திருந்தாவிட்டால் திருத்தப்படுவீர்கள்" – தவெகவிற்கு ஆ.ராசா எச்சரிக்கை
September 13, 2026
Antonelli wins as Norris loses out under virtual safety car
September 13, 2026
Boks power & All Blacks of old – what did we learn from series?
September 13, 2026
'I loved it' – Andy Burnham completes Great North Run
September 13, 2026
Struggling Preston North End sack Heckingbottom
September 13, 2026
Marquez moves top with MotoGP win in San Marino
September 13, 2026
Ronaldo demands lifetime bans over Jota chants
September 13, 2026